அம்பாள் தரிசனம்

கருவிலே நான் தூங்கி காலம் கழிக்கையில் காற்றாக வந்தவள் நீ
கையிலே பிள்ளையாய் பையக் கிடக்கையில் கனிந்த பாலானவள் நீ
உருவிலே பெரிதாகி பள்ளிக்குச் செல்கையில் உடன்வந்த கல்வியும் நீ
உறவிலே ஒன்றாகி திருமணம் நடக்கையில் ஒளிமாலையனவள் நீ
திருவோடு பிள்ளையின் மனையிற் பிறக்கையில் சீர்தந்த ஆட்சியும் நீ
தேசங்கள் யாவிலும் தொழில்செய்யச் செல்கையில் செல்வமாய் நின்றவள் நீ
குருவான குமரனின் அறிவான அன்னையே கோலநடராஜன் துணையே
கொடிவளரும் தில்லைநகர் நடுவிலொரு திருக்கோவில் கொண்ட சிவகாமி துணையே .

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசம் அது பாடகம் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியமும் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒளியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முருகும் வைடூரியமும் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதினிற் கம்மலும் செங்கையிற் பொன்கங்கணம்
ஜெகமெலாம் நிலைபெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறுகாது கொப்பின் அழகும்
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை அடியனார் சொல்லத் திறமும்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே