ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே


ஆழிப் படுக்கை கொண்டோனின்
அருமை மருகா ஆடுகவே
ஊழி தாண்டி நிற்பானின்
உத்தமச் செல்வா ஆடுகவே

வாழும் மனிதர் யாவருக்கும்
வழிக்குத் துணையாம் வேலவனே
ஆளும் கவலை ஓடிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு
அதற்கு வயிரக் கயிறுமிட்டு
கூடிடும் அடியார் ஆட்டிடவே
குமரா ஊஞ்சல் ஆடுகவே

பாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்
பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவே
வாடிடும் பயிர்கள் வளம் பெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

முன்னே பின்னே சென்றாலும்
மூளையில் ஒன்றி நின்றிடுமே
என்னே வாழ்க்கை என்றாலும்
எல்லாம் உன்னைச் சுற்றியதே

குன்றாக் குடியாய் எமைகாக்கும்
குன்றக் குடியின் வேலவனே
கண்ணே மணியே கதிர்வேலா
கவினார் ஊஞ்சல் ஆடுகவே

விண்ணவர் செல்வி தெய்வானை
வேடவர் மகளாம் வள்ளியுடன்
மண்ணகம் சுற்றும் மயிலேறி
மேதகு சேவற் கொடியாட

கொண்டிடுங் காதல் உணர்வோடு
கனிந்த நெஞ்சத் தூஞ்சலிலே
அன்புடன் ஏறி இனிதமர்ந்தே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

மண்ணைப் பிளந்து பெரும்பேட்டில்
மாபெரும் அருளுடை வடிவுடனே
பெண்ணின் நல்லார் இருவருடன்
பெருமயில் ஏறி வந்தவனே

கண்ணே தெரியாக் காட்டிடையே
கலங்கித் தவிக்கும் எங்களுக்கே
உன்னால் வழியும் தெரிந்துயர
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே

ஆறடி நெடிதாம் உருவுடனே
அடியார்பக்தி உறுவேற
பேரருள் கொண்டாய் பெரும்பேடா
பிள்ளைகள் நலிவினைப் போக்கிடவே

சீரடி வணங்கிட வந்துள்ளோம்
செல்வா அருளைத் தந்திடுவாய்
ஆரிருள் விலகி ஒளிபெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!