எழில் முருகன்

வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா


சிங்கை நகரில் வீற்றிருக்கும்
ஸ்ரீதண்ட பாணியின் திருநாமம்
சிந்தை மகிழப் போற்றிடுவார்
சிறப்புகள் யாவும் பெற்றிடுவார்!

தைப்பூச நாளாம் திருநாளில்
தலைவனின் கோவில் தேடிவரும்
தன்னிகரில்லா பெருங் கூட்டம்
தண்டனிட்டே தினம் வணங்கிடுமே!

சீனரும் காவடி தூக்கிடுவார்
சிங்காரன் திருப்புகழ் பாடிடுவார்
சேவற்கொடி யோன்பதம் பணிவார்
சேர்ந்தே நின்று வணங்கிடுவார்!

பாற்குடம் காவடி பலவாகும்
பார்ப்பவர் கண்ணிற்கு விருந்தாகும்!
பாலகன் பெயரைப் போற்றிதினம்
பாரினில் நலமுடன் வாழ்ந்திடுவார்!

தங்கரதத் தில்வலம் வருவான்
தங்கிடவளங் கள்தான் தருவான்
தரணியில் நன்மைகள் தான்நடக்க
தயங்காமல் அவன் வந்திடுவான்!

வேழமுகன் தம்பி வேலவனை
வேண்டும் வரம்தர பணிந்திடுவார்!
வேளை தவறாமல் வந்திடுவார்
வேலை வணங்கி வழிபடுவார்!

ஏழாம் படையாய் வீற்றிருக்கும்
எங்கள் எழிலே முருகேசா
எண்ணிய செயல்கள் கூடிடவே
எமக்கருள் புரிந்து காப்பாயே!

-தேவகோட்டை, மீ.மீனாட்சி சுந்தரம்