ஸ்ரீ சுப்ரமண்ய ஸப்தகம்
வேலனே சக்தி மகனே! வேலனே சக்தி மகனே!

கந்தனே! கடம்பனே! கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குகனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும் ஏழையைக்
காக்க ஒரு கண்ணுமிலையோ!
சிந்தனை முழுவதும் சிதரிடா வண்ணமுன்
செம்மலர்ப் பாதங்களே
சரண் என்று கொண்டுனைச் சந்ததம் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ
வந்தனை செய்துனை வாழ்த்தியே நாளெல்லாம்
வணங்கிடும் சிறுவன் என்னை
வாழவே வைப்பதும் வேலனே உனக்கு ஒரு
விளையாட்டுச் செய்கை யன்றோ!
வந்தெனை இக்கணம் வலியவந்தே
அருள வேண்டியே பணிந்து நின்றேன்
வளமான திருத்தணியில் வந்து நிதம்
வாழ்கின்ற வேலனே! சக்தி மகனே! (வேலனே)

எத்தனை விதங்களில் என் அப்பனே!
உன்னையான்! எப்படிப் பாடினாலும்
எத்தனை இடங்களில் என்ஐயனே!
உன்னையான்! எப்படி நோக்கினாலும்
எத்தனைபேர் சொல்லி என் குறைகள் யாவுமே
எடுத்து நான் கதறினாலும்
ஏலாமல் இன்னுமேன் என்னையே சோதித்து
எள்ளி நகையாடுகின்றாய்!
உத்தமன் உன்னையே ஓர் துணை என்று நான்
உறுதியாய் பற்றி நின்றேன்
உடனே உன்மயில்மீது ஓடோடி வந்தெனது
உறுவினைகள் யாவும் களைவாய்
பித்தனின் மைந்தனே! பக்தியாற் பிதற்றுமிப்
பித்தனையும் ஆண்டருள் வாய்!
பெருமைபொலி செந்தூரில் புகழ்சேர ஒளிர்கின்ற
பாலனே சக்தி மகனே! (வேலனே)

கதியாக உன்பதங் கருத்தினில் கொண்டு நான்
கதறியே அழுகின்றதும்
கொடுமையாம் வறுமையிற் குமைந்து நான்
உன்னருளைக் கூவியே தொழுகின்றதும்
பதியான உன் செவிகள் பன்னிரண்டிலொன்றிலுமே
பதியாமல் இருப்பதேனோ
படுதுயரம் இனிமேலும் படமுடியாதப்பனே
பார்த்தருள் புரிகுவாயே!
விதியான தென்னைமிக வாட்டியே வதைத்திடவும்
வேறொன்றும் செய்வதறியேன்
விழிகளில் நீர் பெருக வீழ்ந்துநான் கதறுவதை
வேடிக்கை பார்ப்பதழகோ
துதிபாடி உன்னையே தொழுகின்ற என்துயர்
துடைப்பதுன் கடமையன்றோ!
தூய்மைசேர் பழநிதனில் தனியாகத் தவங்கொண்ட
தூயனே! சக்திமகனே! (வேலனே)

மாயவன் மருகனே! மாகாளி மைந்தனே!
மனத்தினில் என்றும் வதியும்
மாயா சொரூபிணியும் மலையரசன் மகளுமாய்
மாசக்தி வேல் கொண்டவா
தூயவன் உன்னையான் தினமுமே பாடியும்
திருவுளம் இரங்க விலையோ!
துதிப்பதில் பிழையேது மிருப்பினும் தயவாகப்
பொருத்தருள் தம்ளிடாதே!
நீயெனைத் தள்ளிடினும் நானுனது பாதமே
நம்பினேன் நாளும் ஐயா!
நெஞ்சமும் உருகியே நீராக விழிகளில்
நாளெல்லாம் ஓட நானும்
ஐயனே உன்னடிகள் அடைக்கல மென்றெடைந்திட்டேன்
ஆண்டரும் செய்குவாயே!
அழகான ஏரகத்தது அமருமொரு குருவே! என்
அன்னையாம் சக்தி மகனே! (வேலனே)

பாரதனில் பிறந்திட்டுப் பலகஷ்டம் தான்பட்டுப்
பாவியேன் மிகவும் நொந்தேன்
பார்த்தருமள் புரிகுவாய்! பார்வதியின் மைந்தனே
பாலனே! கருணை செய்வாய்!
பேரெதுவும் வேண்டிலேன்! புகழ் வேண்டேன்
உன்பாதப் புகலொன்றே போதுமப்பா!
பேதை நான் படுந்துயரை புரிந்து நீ
அருள் புரிந்து பாரெல்லாம் வாழவைப்பாய்
ஆரெதும் சொல்லிடினும் அத்தனையும் உன்னடியின்
அர்ப்பணித் தமைதி கொள்வேன்
ஆதரவு நீயன்றி யாருமெனக் கில்லையென
அன்றே நான் கண்டுகொண்டேன்
ஊரெதனில் உறைந்தாலும் உள்ளத்தில்
என்றுமே உன்னை நான் சிக்கவைத்தேன்
உயர்வான பழமுதிர் சோலைதனில் உறைகின்ற
ஒருவனே சக்தி மகனே! (வேலனே)

அஷ்டமா சித்திகளும் அண்டியுன் பாதமே
அடைபவர்க்கருள விலையோ!
அற்புதங்கள் பலவாக அனுதினமும் உன்னருளால்
அகிலத்தில் அமைவ திலையோ?
கஷ்டமே நிறைந்திட்ட கர்மவினையாமென்னும்
கடலிலே தள்ளிவிட்டாய்!
கடக்குமொரு தோணியாய்க் காட்சியும் தந்தெனைக்
காப்பதுன் கடமை ஐயா!
துஷ்டனாம் சூரனைத் துண்டு துண்டாக்கியே
தேவர்கள் துயர்தீர்த்தவா!
தொல்வினைகள் சூழ்ந்தெனைத் தொல்லை செய்யாமலே
தடுத்தெனைத் தாங்கி நிற்பாய்!
இஷ்டமாய் உன்னை என் இதயத்தில் என்றுமே
ஏற்றனன் என்னை ஏற்பாய்!
இலகுபுகழ் பரங்குன்றில் இருமாதர் இணைந்துறையும்
இன்பனே! சக்தி மகனே! (வேலனே)

எத்தனை ஜென்மங்கள் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னில் ஐயா
இனியேது ஜென்மமும் இவ்வேழைக் கில்லையென
இரங்கிநீ அருள வேண்டும்
முக்திநீ தரவேண்டி முழுவதுமே உன்னை நான்
முக்காலும் நம்பி வாழ்வேன்
முன்பின்னும் தெரியாது! மூவாசை ஒழித்து நான்
முடிவினில் உன்னைச் சேரவே
அத்தனே! அருட்பதம் அண்டினேன்! அடியனை
ஆண்டருள் செய்கு வாயே!
அன்புடன் என்னை நீ அரவணைத் திகபரம்
இரண்டிலும் வாழ வைப்பாய்
பித்தனாம் எளியேனின் பிதற்றமிலாப் பனுவல்
பாடும் உன் பக்தர் எல்லாம்
பாரிலே சீர்பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடவே
போற்றினேன்! சக்தி மகனே! (வேலனே)