கருப்பர் துதி

அரோகரா

முண்டாசுக் கட்டுண்டு முழுவல்ல வெட்டுண்டு
முதிர்ந்த பிரம்பு முண்டு
முறைகாவல் செல்வதற்கே சப்பாணி தன்னுடனே
முன்னோடி யானு முண்டு
கொண்டாடும் பக்தருண்டு கோழிகிடாப் பலியுண்டு
குறையாத படைய லுண்டு
கொடுமைகள் அழித்தருளக் கொடுவாளும் அரிவாளும்
குத்தீட்டி தானு முண்டு

கண்டாங்கிச் சேலையொளிர் ஏகாத்தா ராக்கம்மை
கனிவுமிகு அருளு முண்டு
கணப்போதும் துயிலாத உறங்காப் புளியுண்டு
துணைசின்னக் கருப்ப னுண்டு
கொண்டாடிப் போற்றுவார் குறையெலாம் தீரவே
குலங்காத்து நிற்கும் அரசே
குறைவிலா ராங்கியத்தில் முறைகாக்கும் பேரரசே
பெரியகருப் பண்ண துரையே

அருளாடும் ராங்கியக் கருப்பரிவர் ஓங்கியே
அரசாளும் கோவில் வாசல்
ஆதரவு தந்தருளும் மாதிருவர் ராக்கம்மை
ஏகாத்தா அமரும் வாசல்
இருளாடும் பேயனுடன் இராக்கதப் பிசாசுகளை
எதிரடக்கி நிறுத்தும் வாசல்
ஏவலுடன் பில்லிசூன்யம் இன்னபிற மோடிகளைப்
போவெனவே விரட்டும் வாசல்

இருபேராம் சப்பாணி முன்னோடி யானென்றும்
முறைகாவல் புரியும் வாசல்
இரவுபகல் எப்போதும் உறங்காப் புளியெனும்
விருக்ஷமது வளரும் வாசல்
திருவாசல் தேடிவர பெருவாழ்வு புகழ்நல்கும்
கருப்பண்ணன் கோவில் வாசல்
சிறுபோது நினைத்தாலும் பெரும்பேறு தானருள்வான்
பெரியகருப்பண்ண துரையே.

-தேவகோட்டை மீ. சேவுகன்செட்டி