கற்பகக் களிறே போற்றி அரோகரா

கற்பகமே கணபதியே கற்குகையின் அற்புதமே
சிற்பமெனத் தவமிருக்கும் செவிபறந்த நற்களிறே
பொற்பதத்தில் யாம்பணியப் பூத்துவரும் செல்வமுமே
நற்பலன்கள் தேடிவரும் நீறுபூச நெற்றியிலே

எக்கணமும் எண்ணமதில் ஏற்றிவைத்தோம் உந்தனையே
உக்கியிட்டுச் செய்துவந்தோம் உன்னடியில் வந்தனையே
கொக்கியிட்ட சஞ்சலங்கள் கட்டவிழ்ந்து கொட்டிடவே
தக்கத்துணை நீயுமென்று தந்துவிட்டோம் எம்மையுமே

நக்கீரர் ஒளவையாரின் நற்றமிழைக் கேட்டிருந்தாய்
முக்காலம் நாரதரின் மோனைத்தமிழ் ஏற்றிருந்தாய்
தக்காலம் யாமுறைக்கும் தீந்தமிழைக் கேட்டருள்வாய்
சொக்கேசன் பார்வதியின் சுந்தரவி நாயகனே

எள்ளுப்பொரி கடலையுடன் எளியஅவல் வரிசைவைத்தோம்
தள்ளிவைத்துப் பார்க்காதே தேன்கனியும் சேர்த்துவைத்தோம்
புள்ளிவைத்துக் கோலமிட்டுப் பிரியமுடன் வரவேற்றோம்
பிள்ளையென எப்பொழுதும் பக்கமிரு கணபதியே

சந்தணமும் குங்குமமும் சங்கத்தமிழ்ப் பாமொழியும்
நந்திசிவன் மைந்தனுந்தன் நற்பதத்தில் தெண்டனிட்டோம்
கந்தனுக்கு மூத்தவனே காளியுமைப் பாலகனே
சிந்தனையில் தெளிவுதந்து செயல்படுத்து நாயகனே

கல்லல் மீ.மணிகண்டன், 08/27/2017