கொற்றவை (கொல்லங்குடி)

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


நல்லதைச் சொல்லென்றும் நல்லதே செய்யென்றும்
நயம்படச் சொல்லும் தாயே
நச்சு எண்ணம் கொண்டே இச்சையாய் அலைவாரை
நசுக்கிடும் அன்னை நீயே

பொல்லாத செயலினை பொடிப்பொடியாக்கிடும்
பொன் சுடர் தீபம்நீயே
புகழுடைய வாழ்விற்குப் பொன்முடி சூட்டியே
பூத்தூவி வாழ்த்துவாயே

கல்லாத மாந்தரின் கண்ணீரை நீக்கிடும்
கருவண்ண அன்னைநீயே
கற்றோரின் நெஞ்சத்தில் கலங்கரை விளக்கான
காவியச் சுடரும் நீயே

வில்லாக வேலாக வினைதீர்க்கும் மருந்தாக
விளங்கிடும் சக்தி நீயே
வேண்டிடும் நல்வரம் விரைவாகத் தந்திடும்
வெட்டுடை காளியுமையே!