சங்கிலிக் கருப்பன்

அரோகரா

சங்கிலிக் கருப்பனே சாம்பிராணி வாசனே
சகமாளும் என் ஐயனே
அழகான கொண்டையும் அகண்ட பெருநெற்றியும்
அதிரூப மான வடிவம்
மதி போன்ற முகமும் மாலைகள் அணிமார்பும்
மலர்ந்த உன் பார்வை யழகும்
துடுக்கான மீசையும் எடுப்பான தோள்களும்
துடிக்கின்ற வாளின் ஒளியும்
கருப்புநிறக் கச்சையும் காலில் சலங்கையும்
கருணை பொழிகின்ற திறமும்
கண்ணனே மாயனே கார்முக வண்ணனே
கண்டவர் மெய் சிலிர்க்கும்
ஊதாரியாகி பல ஊரெல்லாம் சுற்றியும்
உன்னை நான் மறக்கவில்லை

கையெலாம் நோகவே கடுமையாய் பணிசெய்தும்
கவலைவிட் டகல வில்லை
நாடெல்லாம் சுற்றி நான் மாடாக உழைத்துமே
நன்மையது சேர வில்லை
நெஞ்சார உன்னை நான்நேசித்து வாழ்கிறேன்
நின் கருணை கிட்டவில்லை
குலதெய்வ மென்றுனைக் கொண்டாடி மகிழ்ந்தாலும்
குறைகளது மறைய வில்லை
பொல்லாத ஆசையால் புரியாத கவலையால்
பேதை நான் வாடு கின்றேன்
எக்காலமும் உன்னை ஏற்றியே தொழுகின்ற
ஏழைக் கிரங்கி அருள்வாய்
கோடானு கோடிபிழை செய்யினும் நீ என்னை
கொண்டாதரிக்க வேணும்

வறுமையதில் வாடாமல் வஞ்சமனம் இல்லாமல்
வாழவழி சொல்ல வேணும்
அன்புக்கு என்றுமெனை அடிபணிய வைத்து நீ
ஆட்கொண்டு அருள வேணும்
அதிகாரம் கண்டு நான் அஞ்சாமல் வாழ்ந்து
அருங்கழல் சேர வேணும்
பிள்ளை நான் உந்தனது பாதார விந்தமை
பிரியமுடன் வணங்க வேணும்
எனது குலம் முழுவதும் உனதடிமை ஆனபின்
இரங்காதிருக் கலாமோ
கவலையைச் சொல்லுமென் கண்ணீரைப் பார்த்து
நீ கல்லா யிருக் கலாமோ
காத்தருளும் தெய்வமுன் கருணையில்லா விடின்
கதி என்ன ஆகு மய்யா
தஞ்சமென்று உனை நம்பி வந்தவர் தமக்
கெல்லாம் தயை புரிய வேணுமையா
கருப்பா என்றுனைக் கரங்கூப்பி அழைத்
திட்டால் காக்க வர வேணுமய்யா!