சங்கிலிக் கருப்பர்

அரோகரா

சங்கிலிநற் கருப்பன் நீ சார்ந்திட்ட பொருளும் நீ
சடாக்ஷர மந்திரமும் நீயே
சகலரும் துதிக்கின்ற தேவாதி தேவன் நீ
சாம்பிராணி வாசகனும் நீயே
எங்கெங்கு அழைத்தாலும் ஏழையின் வாசலில்
எழுந்தோடி வருபவனும் நீயே
இதயத்தில் இருப்போன் நீ இரத்தத்தில் கலப்போன் நீ
இரவு பகல் காப்பவனும் நீயே
குங்குமம் சிறக்கவும் குடியெலாம் வாழவும்
குலம் காக்கும் என் தெய்வம் நீயே
குன்றும்நீ குளமும் நீ கோலாகலனும் நீ
குன்றாவளப் பொருளும் நீயே
பங்காளி கூடிட படைப்புகள் கொண்டாடிட
பணியாரப் பிரியனும் நீயே
தினெட்டுப் படியாளும் பக்தரின் காவலா-நீ
பாதை யெலாம் துணைக்கு வாவா

வாளாட வேலாட வளர் கொண்டை தானாட
வைகையாள் துள்ளியாட
வளர்ந்தோங்கும் புஜமாட வயிரமாம் நகையாட
வளர்ந்திட்ட பயிர்கள் ஆட
காலாட மணியாட கருங்கூந்தல் தானாட
கச்சையெலாம் பின்னிஆட
கண்ணாடப் பெண்ணாட கயவர்பயந்தாட
கருமீசை முறுக்கி ஆட
கோலாடக் குணமாட குதித்தோடி வருகின்ற
குருதியெல்லாம் ஓடிஆட
குதிரையின்மேல் வரும் கொள்ளை அழகனை
கும்பிடும் கரங்கள் ஆட
பாலாட மேனியும் பழமாடக்காணியும்
பட்டயக் கொலுசு மாட
பதினெட்டுப் படியாளும் பக்தரின் காவலா-நீ
பாதையெலாம் துணைக்கு வாவா

கார்வளர் வைரவன்கோயில்அமர் முப்பிலிக்
கருப்பருடன் தன் நகரிலே
கருணை தவழ்சப்பாணி நொண்டி பதினெட்டாய்க்
கருதுபடி நற்கருப்பும்
சீர்வளர் சின்னக் கருப்பருடன்ஆட்சிகொள்
தேவே மங்கிலிக்காரியும்
திகழ் அடைக்காத்தாள் மின்னஞ் செட்டி
காளியும் சேரமுன் ஆடல்புரிவாய்
ஏர்வளர்பணியாரம் பாற்சோறு இன்னவை
ஏந்திப்படைத்து நின்றோம்.
இன்பருள வைரவன் கோயில் சார்தனவணிகர்
ஈண்டிப்பணிந்து நின்றோம்.
பேர்வளர் குலதெய்வம் வைரவனும் நீயுமாய்ப்
பெரிதுகாப்பாற்றி அருளே.
பிறங்கு வய்யக்கரை இருந்து வெண்பரிஏறும்
பெரிய கருப்பண்ணசுவாமி துரையே.

-கவியரசு கண்ணதாசன்