சிங்கப்பூர் தைப்பூசம்


வேலாக நிற்பவனாம் வேதனைகள் தீர்ப்பவனாம்
வற்றாத அருட்கடலாய் வளமனைத்தும் தருபவனாம்
வணங்குபவர் வாழ்க்கையினில் வழித்துணையாய் வருபவனாம்
சங்கடங்கள் தீர்ப்பவனாம் செளபாக்கியம் தருபவனாம்
சண்முகனே கதியென்று சத்தியமாய் வழிப்பட்டால்
சந்ததிகள் வாழவைப்பான் சிங்கைநகர் தெண்டபாணி.


சிங்கைநகர் முருகா சிங்கைநகர் முருகா
சீக்கிரம் வருவாயே
சிங்கைநகர் முருகா சிங்கைநகர் முருகா
செல்வவளம் தருவாயே


தங்கரதம் ஏறியே தைப்பூச நாளிலே
சிங்கையை வலம் வருவான்
காவடிகள் தாங்கியே கால்நோக வருவோரை
காலமும் காத்து நிற்பான்

புனர்பூச நாளிலே காவடி பூசையும்
பொலிவுடனே நடத் திடுவோம்
லயன்சித்தி ஆலயத்தில் ஆறுமுகன் அண்ணனை
வணங்கியே புறப்படு வோம்

சிங்கையின் அன்னையை சௌத்பிரிட்ஜ் மாரியை
வணங்கியே ஆசி பெற்று
தர்மம் தழைத்திட தீமிதி நடக்கின்ற
ஆலயத்தை வலம் வருவோம்

சீனரும் வியந்திட சிங்கார வேலனின்
சிறப்புகளைப் பாட் டிசைப்போம்
சிங்கைநகர் வாழ்கின்ற ஸ்ரீதண்டா யுதபாணி
பெருமைகளை சொல்லி நிற்போம்.

ஆடிவரும் காவடியில் அவனுருவை கண்டந்த
அழகான சிங்கை வியக்கும்!
இந்தியன் வங்கியின் இனியவர் பலர்கூடி
இடையினில் வணங்கி நிற்பர்.

டாங்க்ரோடு ஆலயத்தை நெருங்கிட நெருங்கிட
மனதினில் அருள் பிறக்கும்
தங்கரதம் மீதினில் தமிழ்க்கடவுள் முருகனைக்
கண்டதும் இருள் விலகும்

நலங்கள் தழைத்தோங்க நன்மைகளைச் செய்கின்ற
நகரத் தார்பின் தொடர
நயமாக உயர்ந்திருக்கும் வியப்பான கட்டடங்கள்
நாற்புறமும் எழுந்து நிற்க

விறீண்ணோரும் மண்ணோரும் போற்றிநிதம் வணங்கிடும்
தண்டபா ணியின் பெருமையினை
வியத்தகு தைப்பூச நாளினில் காண்பதற்கு
கண்களோ கோடி வேண்டும்

அன்புடன் அவனருளை வேண்டியே வந்திடுவோர்
அகமெலாம் மகிழ்ந்து நிற்கும்
செல்வம் பதினாறும் செழிப்புடன் நல்வாழ்வும்
சத்தியமாய் வந்து சேரும்

சிங்கைநகர் வாழ்கின்ற தண்டபாணி தெய்வத்தின்
திருப்பாதம் பணிந்திடுவோம்
சீரான நல்வாழ்வும் சிறப்பான பெருவாழ்வும்
சீக்கிரமே பெற்று உயர்வோம்.

லெ. சக்திகுமார்