பழனியம்பதியின் பெருமாளே

திருமுடி ஆறும் இருமடமாதர் திருவடி சேரும் வடிவேலா
திருப்பரங்குன்றின் தேவர்கோன் மகளை திருமணம் கொண்ட மணவாளா
விருப்புடன் பாடும் திருப்புகழ் கேட்டு விரைவினில் ஓடி வருவாயே
பனிமுடி திகழும் பைந்தமிழ் தவழும் பழனியம்பதியின் பெருமாளே

சீரலை வாயாம் செந்தூர்க்கரையில் சூரனை வென்ற வடிவேலா
நீரலை போல நெஞ்சலை மோத நேர்வழி கூறும் குருநாதா
தாரலை மார்பா ஷண்முகநாதா தமிழனைமீதில் தவழ்வானா
பனிமுடி திகழும் பைந்தமிழ் தவழும் பழனியம்பதியின் பெருமாளே

கிழமுதிர் மந்தி கிளையுடன் திரியும் பழமுதிர்சோலை வடிவேலா
உளமுதிர் அன்பே உய்வகை என்றே உணர்வகை காட்டும் முருகேசா
பழவினை மாற்றி பவவினை நீக்க பக்தரை நோக்கி வருவாயே
பனிமுடி திகழும் பைந்தமிழ் தவழும் பழனியம்பதியின் பெருமாளே