தென்பழனி ஆண்டவன்.

தென்பழனி ஆண்டவணை தேடிவந்தோமே - எங்கள்
கண்மணியாம் ஆண்டவனை கண்டுகொண்டோமே
தென்பழனி ஆண்டவணை தேடிவந்தோமே - எங்கள்
கண்மணியாம் ஆண்டவனை கண்டுகொண்டோமே


செட்டிநாட்டு காவடிகள் செலுத்தவந்தோமே - எங்கள்
பட்டி தொட்டி அத்தனையும் படைத்து வந்தோமே
கட்டி வந்த காளை அரோகரா சொல்லுதே - அந்த
மாட்டு வண்டி சிவா சிவா சொல்லுதே.

படுத்திருக்க கொண்டு வந்த சாக்கு பாடுதே - எங்கள்
பழனி மலை ஆண்டவனின் நோக்கு நாடுதே
உடுத்தி வந்த ஒற்றை ஆடை ஓங்கரிக்குதே - எங்கள்
உச்சி முதல் பாதம் வரை உயிர் களிக்குதே

அன்னதான மடத்தினில் ஐயாயிரம் பேரே - எங்கள்
அய்யா கண்டனூருசாமி அருள் முகம் பாரே
வண்ண வண்ண காவடிகள் வரிசைகள் பாரே -இங்கே
வடித்து போடும் அன்னதான பூஜைகள் பாரே.

செட்டி முருகப்பன் முகம் ஜொலிக்குது பாரே - இங்கே
செட்டு செட்டாய் வந்து மனம் களிக்குது பாரே
அட்டியில்லை ஆறுகாலு சவுக்கையின் மேலே - எங்கள்
ஆறுமுக வேலவனின் ஆட்டத்தினாலே

மேள தாள நாதசுரம் மேல் முழக்கமே - சுற்றி
மேவி உள்ளோர் அரோகரா கீழ் முழக்கமே
தாளமோடு ஆடுகின்ற சாமியாட்டமே - எங்கள்
தமிழ் முருகன் நாம்த்திலே பாடும் கூட்டமே

வரம் கொடுக்கும் சாமி காலில் வந்து விழுகிறார் - இந்த
வையாபுரி நாடனடி வந்து தொழுகிறார்
கரங்களிலே நீறுபெற்று பலம் விளைகிறார் - இந்த
கழனி கொஞ்சும் பழனி மலைக்கு குலம் தழைக்கிறார்