நல்ல கருப்பையாவே

ஆயன் என அன்றுவந்த ஆழ்பாழி நந்தன் மனை
மாயன் எனும் யசோதை மகனாய் வளர்ந்தோனே
நேயமுடன் நின் பாதம் நீர்நிலத்தோர் கொண்டாட
ஞாயிறன்று நீ வருவீர் நல்ல கருப்பையாவே

சிங்கைநகர் அங்காளி தேவி திரு வாசலுக்கு
துங்கன் என அன்று வந்த சுவாமிதள நாயகமே
எங்களுடப் பங்கில் இருந்து சந்தானம் அருள
திங்களன்று நீ வருவீர் திவ்ய கருப்பையாவே

பொய்வாக்குரைத்து பிடித்தாடும் பேய்கள்தன்னை
கைவாளுக்கிரை கொடுக்கும் காயாம்பு மேகவர்ணா
மெய்வாக்காய் செல்வம் விளங்கும் சந்தானம் அருள
செவ்வாய்க்கு நீ வருவீர் செல்வ கருப்பையாவே

பதகமலம் தான்பணியும் பக்தர் தமக்குரிய
சுகமருள வேண்டுமய்யா சுவாமிதள நாயகமே
பதனமுடன் எங்களுக்கு பக்திமுக்தி தந்தருள
புதனன்று நீ வருவீர் புண்ணிய கருப்பையாவே

பேய்களுடன் பில்லி பிடித்தாடும் சூன்யத்தை
ஆயனெனப் போய்துரத்தி அஞ்சாமல் நீ காப்பாய்
தூயமறைப் பொருளின் சுருதிமொழி நீ அருள
வியாழனன்று நீ வருவீர் வேளை கருப்பையாவே

துள்ளிய மானிடரை தொடர்ந்தாடும் பேய்கள்தன்னை
அள்ளிநெற்றி மயிர்பிடித்து அஞ்சுமரத்தாணி தைத்து
புள்ளி படா நீரணிந்து புத்ர பாக்கியம் அருள
வெள்ளியன்று நீ வருவீர் வீர கருப்பையாவே

முனிவர் தபோதனர்கள் முன்னின்று போற்றிசெய்ய
கனிவாய் வரம் கொடுக்கும் காயாம்பு மேகவர்ணா
தனிவழிக்கு நீ துணையாய் தான்வந்தெமைக் காக்க
சனிவாரம் நீ வருவீர் சுவாமி கருப்பையாவே