பண்டாரமாம் பண்டாரம்

பண்டாரமாம் பண்டாரம் பழனிமலை பண்டாரம்
பண்டாரமாம் பண்டாரம் பழனிமலை பண்டாரம்


சின்ன சின்ன பண்டாரம் சிரித்து மகிழும் பண்டாரம்
வண்ணமயில் ஏறிவரும் வடிவழகுப் பண்டாரம்

கன்னித்தமிழ் பாட்டினிலே கனிந்துருகும் பண்டாரம்
காவடிகள் ஆட்டத்திலே மயங்கிவரும் பண்டாரம்

காவடிக்கு முன்னே வந்து காவலாகும் பண்டாரம்
காலமெல்லாம் துணையிருக்க ஆடி மகிழும் பண்டாரம்

அன்னை தந்த வேலுடனே ஆடி வரும் பண்டாரம்
அழகுமயில் மீதமர்ந்து பவனிவரும் பண்டாரம்

குழந்தையாய் இப்பழனியிலே குலுங்கி சிரிக்கும் பண்டாரம்
கும்பிட்டோர் நலம் காக்க எங்கும் வரும் பண்டாரம்

வள்ளியிடம் கிழவனாய் வம்பு செய்த பண்டாரம்
சூராதிசூரர் குலம் வேரறுத்த பண்டாரம்

பழத்துக்காக சண்டை போட்ட பாலமுருகப் பண்டாரம்
பார்வதியாள் தந்த சக்தி வேலெடுத்த பண்டாரம்

சிங்கார பொன்னூஞ்சல் ஆடுகின்ற பண்டாரம்
செல்வநலம் தந்தருளும் செந்தூரு பண்டாரம்

செந்தூரில் வாள்வழங்கி ஜெகம்காத்த பண்டாரம்
தேடிவந்தோர் வாழ்க்கையிலே வளம் கொடுக்கும் பண்டாரம்

நெற்றிக்கண்ணில் பிறந்துவந்த வெற்றிவேலுப் பண்டாரம்
வெற்றிகளை தந்தருளும் சக்திவேலுப் பண்டாரம்

தங்கத்தேரில் பவனிவரும் தருமதுரை பண்டாரம்
தரணி எங்கும் கோயில் கொண்ட தெண்டபாணி பண்டாரம்

அன்னதானம் செய்யச்செய்ய அகமகிழும் பண்டாரம்
பண்ணையெல்லாம் வளரச்செய்யும் பழனிமலை பண்டாரம்

பிரம்பாட்டம் ஆடுகின்ற பேரழகு பண்டாரம்
ஆறுகால் சவுக்கையிலே ஆடி மகிழும் பண்டாரம்

தென்றலென ஆடி வரும் தென்பழனி பண்டாரம்
தேடிவந்தே நலம் கொடுக்கும் தெண்டபாணி பண்டாரம்

வேலெடுத்து ஆடி வரும் வேலுப்பிள்ளை பண்டாரம்
வேண்டும் வரம் தந்தருளும் ஞானப்பிள்ளை பண்டாரம்

சிங்கார வேல்தாங்கி சிரித்து மகிழும் பண்டாரம்
வண்ணமயில் மீதமர்ந்து உலகாளும் பண்டாரம்

ஆடிவரும் காவடிக்கு அழகுவேலை துணையாக்கி (2)
ஆனந்தமாய் கூட்டிச்செல்லும் பழனிமலை பண்டாரம்

அருளிசைமணி நேமத்தான்பட்டி அரு.சுப்பிரமணியன்.