பழனிமலை முருகனை நாம் பார்க்கலாமா

பழனிமலை முருகனை நாம் பார்க்கலாமா
அவரோடு தனிமையிலே பேசலாமா


தெண்டபாணி மலை மீது நிற்கின்றான்
அங்கு வந்தவரைக் கண்திறந்து பார்க்கின்றான்.
வேலன் ஆவான், அவன் விருத்தன் ஆவான்
அள்ளித் தரும் வள்ளல் அவன் ராஜா ஆவான் (2) (பழனிமலை)

வண்ண வண்ணக் காவடிகள் ஆடிவரும்
அங்கு பொங்கிவரும் பால்குடங்கள் ஓடிவரும்
பாலும் கொட்டும், அங்கு தேனும் கொட்டும்
மேனியெல்லாம் பஞ்சாமிர்தம் வழிந்துகொட்டும் (2) (பழனிமலை)

தங்கரதம் மீதமர்ந்து அவன் வருவான்
அங்கு தென்றல் காற்று வீச அவன் மிதந்து வருவான்
மேளம் கொட்டும், அங்கு காசும் கொட்டும்
ஆண்டவனின் அருளாலே செல்வம் கொட்டும் (2) (பழனிமலை)

வெள்ளிநிற விபூதி அபிஷேகம்
அங்கு மணமணக்கும் சந்தனத்தில் அலங்காரம்
பூவும் மணக்கும், அங்கு பன்னீர் மணக்கும்
மலையரசன் சந்நிதியில் எல்லாம் மணக்கும் (2) (பழனிமலை)
எங்கும் வாழும் நகரத்தார் செயல்படுவார்
அந்த பழனிமலை முருகனையும் வழிபடுவார்
குலமும் செழிக்கும், மனிதநேயம் செழிக்கும்
ஆண்டவனின் அருளாலே செல்வம் கொழிக்கும் (2) (பழனிமலை)

ஆறுமுகம், ஆறுபடை வீட்டினிலே
அது இருப்பதுவும் தங்கத் தமிழ்நாட்டினிலே
வீடு விளங்கும், நம்ம நாடு விளங்கும்
ஆண்டவனின் அருளாலே எல்லாம் துவங்கும் (2) (பழனிமலை)

மனச்சிறையில் பிடித்து வைத்தேன் இத்தனை நாள்
(இன்று) சுதந்திரமாய் உலவவிட்டேன் கந்தனை நான்
தகப்பன் ஆனான், அவர் பிள்ளை ஆனான்
காளை எனக்கு வாழ்வுதந்த கடவுள் ஆனான் (2) (பழனிமலை)