சிங்கார மாலை

அரோகரா

வானோங்கு தென்பழனி வளர்ந்தோங்கும் மன்னவனே
தேனோங்கு செந்தமிழால் தினமோங்கத் தெண்டனிட்டோம்
மானோங்கு மாதருடன் மயிலேரும் வானவனே
வானோங்கும் செங்கதிரே வருவாய் இதுசமயம்,

கையிற் பழமேந்திக் கருத்தில் உனையேந்தி
மெய்யாக வழிபடுவார் மேலாக்கும் வேலவனே
வெய்யிலுக்கு விரிநிழலே வினைநீக்கும் மாமருந்தே
வையா புரிநாடா வருவாய் இதுசமயம்,

மஞ்சாடும் மலைதோறும் மயிலேறும் வேலவனே
நெஞ்சாடும் கவலை எல்லாம் நீதீர்க்க வேண்டுமையா
தஞ்சமென வந்தவரை தாயெனவே ஆதரிக்க
வஞ்சியரின் நாயகமே வருவாய் இதுசமயம்,

காளைத் தவிசோறும் கண்ணுதலான் கண்மணியே
பாளைச் சிரிப்பழகா பழனிமலை ஆண்டவனே
ஆளை அளக்காமல் அன்பை அளந்ததுடனே
வாளைபுரள் வாயா வருவாய் இதுசமயம்,

அப்பா எனக்கூவி அழைப்பதுவும் இப்புவியில்
தப்போயான் கூறும் தமிழும் கசப்பதுவோ
ஒப்பாரும் இல்லாத ஓங்கார வேலவனே
சுப்பையா மயிலேறி தோன்றிடுவாய் இதுசமயம்,

முல்லை மலர்போன்ற முத்துசிரிப்பழகா
எல்லை வருவோரின் இடர் தீர்க்கும் வேலவனே
கல்லான வன்மனமும் கனியாக்கி வைப்பதிலே
வல்லவனே வடிவேலா வருவாய் இதுசமயம்,

தெள்ளு தமிழுக்கும் தினைப்புனத்தில் கிளிபயிலும்
வள்ளி மயிலுக்கும் வசமாகி விட்டவனே
அள்ளூறிப் பாடிவரும் அடியவரின் மிடிதீர்க்கும்
வள்ளல் மனத்தரசே வருவாய் இதுசமயம்,

வானேறும் கற்புடைய மாதரசி தெய்வானை
கூனேறும் நெற்றிக்கே குழைந்துருகும் வேலவனே
தேனேரும் செந்தமிழால் தெண்டனிடும் மெய்யடியார்
வானேற வைப்பவனே வருவாய் இதுசமயம்,

மங்கை சிவகாமி மைந்தா வார்ந்தொழுகும்
கங்கை வளர்சடையான் கண்மணியே வடிவேலா
அங்கங் குழந்துருகி அடிபரவும் அன்பெரெனும்
வங்கக் கடல்நடுவெ வருவாய் இதுசமயம்,

என்ன முருகா எழுந்துவரத் தாமதமேன்
சொன்ன தமிழில் சுவைகுறைவோ சொன்னவனும்
சின்னவனோ வள்ளி திசைமாற்றி விட்டாளோ
மன்னவனே குடிகாக்க வருவாய் இதுசமயம்,

பண்ணொழுகும் செந்தமிழாற் பாடிவரும் உன்னடியார்
கண்ணொழுக நிற்பதையும் கண்டுமனம் இரங்கலையோ
என்னபிழை நானுடையேன் எப்படிநான் கூப்பிடுவேன்
வண்ணமயில் வாகனனே வருவாய் இதுசமயம்,

ஐயா திருக்குமரா அடியேன் கதருவதும்
பொய்யோ நானுரைக்கும் புகழும் இகழாமோ
செய்யான சிந்தையிலே செழித்தோங்கும் தாமரையே
வையா புரிக்கரசே வருவாய் இதுசமயம்,

கந்தா எனக்கதரும் கவிஉனக்கு கேட்கலையோ
சந்தையிலே நாய்போலத் தடியேன் அலைவதுவோ
சிந்தாமணியே செல்வக்களஞ்சியமே
வந்தருளத் தாமதமேன் வருவாய் இதுசமயம்,

அஞ்சித்தலை குனிந்தும் அடிமைப்போல் வாய் புதைத்தும்
கெஞ்சி அழைத்தால் கேளாதோ உன்செவிக்கு
வஞ்சியரின் கண்வலையில் மானாகி விட்டயோ
மஞ்சுலவு மலைநாடா வருவாய் இதுசமயம்,

பாடாத பாட்டெல்லாம் பாடி அழைத்தாலும்
ஆடாதிருப்பதுவோ அருளும் வறண்டதுவோ
வாடா மருக்கொழுந்த்தே மலைப்பழனி வேலவனே
வாடா என அழைத்தேன் வருவாய் இதுசமயம்,

கோவணத்தும் எழில்குலுங்கும் குழந்தைவடி வேலவனே
காவணம் போல் நிழல்கொடுக்கும் கருனைவடி வானவனே
பூவனத்தில் துள்ளிவரும் புள்ளிமயில் வாகனனே
வாய்ம்மணக்கக் கூவுகிறேன் வருவாய் இதுசமயம்,

தீராநோய் தீர்த்தருளும் தென்பழனி மருத்துவனே
கூறாமல் குறைதீர்க்கும் குறிப்பறிந்த மன்னவனே
ஓராறு முகங்காட்டி ஓங்கார உருக்காட்டி
வாரா திருப்பதுவோ வருவாய் இதுசமயம்,

கல்லாப் பிழைகளையும் கற்றவர்கள் கற்றபடி
நில்லாப் பிழைகளையும் நெஞ்சுருகி உன்பெயரைச்
சொல்லாப் பிழைகளையும் சோதிவடி வானவனே
இல்லாப் பிழையாக்க வருவாய் இதுசமயம்,

எல்லாத்துறையினிலும் ஏமாற்றும் புனைசுருட்டும்
பொல்லாத சூரனைப்போல் புகுந்துவரும் இந்நாளில்
பொல்லாரும் மனந்திருந்திப் புத்தியிலே தெளிவுபெற
வல்லானே வேலெடுத்து வருவாய் இதுசமயம்,

சொல்லாலே மாலையிட்டு துனையடியில் தெண்டனிட்டு
நல்லாரும் நாட்டாரும் வழிநெடுக ஒலிமட்டும்
கல்லாய் இருப்பதுவோ கவலைகளைத் தீர்த்தருள
வல்லாய் திருக்குமரா வருவாய் இதுசமயம்,

தங்கநிற வேலவனே தமிழருந்தும் பாலகனே
சிங்கார வடிவேலவனே செந்தமிழைக் கேட்டுவைக்க
இங்குவர வேண்டுமென எல்லாரும் வேண்டுகிறோம்
மங்கையரின் காதலனே வருவாய் இதுசமயம்,

அர.சிங்காரவடிவேலன்.