வெள்ளிமலைக் கந்தர் விளக்கம்

அரனுடைய நெற்றியில் அறுபொறிக ளாகவே
ஆங்கார மாயுதித் தாய் அரோகரா
அண்டம் நடுங்கிடவே சண்ட மாருதம் கிடுகிடென
அகில புவனங்கள் சுற்றி
அறம்பொருள் விளங்கவே உமையவள் கரத்தினில்
ஆறுமுக னாயுதித் தாய்
அன்பான கார்த்திகை பாலாமிர்தம் உண்டவா
அழுகுபெற வந்த பாலா
சரவணப் பொய்கையில் பலவித லீலையும்
சரச உல்லாச குமரா
தரணி புகழ் மெய்யனே தாமரை இலையினில்
சரவணனே துயில் கொண்டவா
வீரசெக நாதனே ஞானப்பிர காசனே
வந்திடுங் கந்த வேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே 1

தங்கமுடி கிரிகடகம் சென்னியில் சொலிக்கவே
செங்கைவடி வானதுரையே
சிங்கார வேல்முதல் பன்னிரண் டாயுதம்
செல்வனே தாங்கி நின்றாய்
அங்கமதில் வெண்ணீரும் சந்தனக் கதம்பமும்
அணியும்பட் டாடை ஒளியும்
அழகான மார்பினில் மோகனப் பதக்கமும்
அரும்புமண மாலையுடனே
செங்கடகம் தண்டைமணி கிண்கிணிச் சதங்கையும்
செவிகளணி குண்டலங்கள்
செம்பவள வாயனே எங்கள்குல தெய்வமே
செந்தா மரைப்பாதனே
வேங்கைமலை கங்கையும் தாங்கிவரும் காங்கேயா
வந்ததிடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே 2

சீனிகற் கண்டுடன் அவல்பொரி கடலையும்
தேன்பாலும் முக்கனிகளும்
சீரான கொடிமுந்திரி ஆரஞ்சுக் கனிகளும்
திராவூக்ஷயும் இளநீருடன்
இனிப்பான எலுமிச்ச மாதுள விளங்கனி
இன்பரச கொளஞ்சிப்பழமும்
இனமுல்லை மல்லிகை செண்பகம் சாமந்தி
எவரோஜா பன்னீருடன்
மாநிலம் துதிக்கவே புனுகு சவ்வாதுடன்
மருவும் மருக்கொழுந்தும்
அபிஷேகம் செய்யவே தீபதூ பங்களுடன்
மனமகிழ வேபோற்றுவேன்
இனியவடி வேலனே கலிகாலன் ஒடவே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 3

பிரணவ வேதத்தின் பொருள்கூறத் தெரியாத
பிரமனைச் சிறையில்வைத்தாய்
பரமனுக் குபதேச சிவஞான மூர்த்தியே
பாராள வந்தஅரசே
முறைகளது தவறாத சகல லோகங்களும்
முத்தொழில் புரிந்த தேவா
முனிவர்கள் தேவர்கள் கண்டு தயங்கிட
முச்சுடராய் நின்றதேவா
சூரனைச் சிதைக்கவே இந்திரன் முதலான
தேவர்கள் முறைகூறவே
சாரதி ஆகவே மாருதம்தேர் கொண்டு
செல்கிறார் முருகையனும்
வீர பட்டங்களும் நெற்றியில் துலங்கவே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே 4

கனபேரிகை நாதசுரம் சங்கு சேகண்டியும்
கனகவாத்தியம் முழங்க
கையிலைமலை விட்டுநீ தேவர்படை சூழவே
கதிர்வேல் எடுத்து வந்து
மனவேக ரதமேறி வீரர்படை சூழவே
மகேந்திரம் அமர்ந்தவாசா
மாயா விதாரகன் சூரபத்மன் முதல்
மாவேலால் சம்கரித்தாய்
வனமயிலின் கர்த்தனே தெக்ஷணாமூர்த்தி என்
வறுமையைத் தீர்க்கவருவாய்
வலியாரை வாட்டியே எளியாரை ரக்ஷக்க
வரவேணும் குகநேசனே
வானவரிடர் களைந்தவா இந்திரன் முடியேற்றி
வைத்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 5

அன்னையாள் குறைதீர நந்தவனம் காக்கவே
ஆறுமுகம் காத்தலிங்கம்
ஆனமுதல் மந்திரம் மலையாளச் சின்னானை
அடிமையாய்க் கொண்டலிங்கம்
உன்னையே யான்விட கதியொன்று மில்லையே
உத்தகண்ட காரவீரா
உள்ளன்பு கொண்டுதான் உந்தனது இணை அடியை
ஒருபோதும் மறவேன்அய்யா
துன்னவயிற் மேருகிரி செந்திநகர் எட்டுக்குடி
சென்னிமலை மேவுமுருகா
சுக்கிலமும் சஷ்டிதிதி ஐப்பசித் திங்களில்
சூரசம் காரமுருகா
விண்ணதிரு பண்டிதர் கண்டிகதிர் காமனே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 6

சோலைகிளி வேல்விழியாள் வள்ளி பங்காளனே
துள்ளி மயிலேறு முருகா
துஷ்டரிடம் சிக்கிநான் தவித்திடும் வேளையில்
துணைபுரிய வாருமுருகா
அலைகடல் சூழ்புவனம் மாங்கனிக் கிசைந்துவலம்
அரைநொடியில் வந்தமுருகா
அய்யன் பிடாரியொடு கும்பபடை யாவரையும்
அடக்கி வசமாளுமுருகா
காலந் துலங்கி வரமேலமுக வாசகா
நீல மயிலேறு முருகா
ஒளவையார்க் கருள்புரிய கோவைகளை மேய்த்துநீ
நாவல்மரம் ஏறுமுருகா
வாலைமகன் சீலனே தணிகாசலம் விட்டுநீ
வந்திடு கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 7

அம்புவியர் கொண்டாடும் ஆண்டிப் பண்டாரனே
அஞ்ஞானம் தீர்த்தாளுவாய்
அத்திமுக னுக்கிளைய சக்திவேலா யுதா
அசுரரைப் பொடிசெய்தவா
இன்ப துன்பங்களால் இறப்பும் பிறப்புமே
எந்நாளும் மாறிவருகுதே
இனிபிறப் பில்லாமல் பேரின்ப வீடடைய
மெய்ஞ்ஞானம் தாருமுருகா
செம்புலிங் கையனே தேவாதி தேவனே
செகமாளும் மயில்வீரனே
சீர்மேவும் சரவணையில் மச்சமாத் திரிந்திடும்
தேவர்களின் சாபம்தீர்த்தாய்
வெம்புனித வளர்நாடு திருவேளூர் மேவிய
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 8

எத்திசையோர்களும் உன்னையே புகழ் வாரே
எங்கும் நிறைந்த பொருளே
ஈராறு கையனே பன்னிரு விழியனே
ஏழைபங் காளவீரா
சித்துவிளை யாடுவாய் முத்துலிங் கையனே
செச்சைவாகனா வருகுவாய்
சடாக்ஷர மந்திர இருமூன்று அக்ஷரா
சங்கீத வீணையழகா
பக்தியுடன் தினகாலம் கடுகளவு நினைவோர்க்குப்
பாலன்வடி வேலன்வருவான்
பித்தனவன் புத்திரா சப்த சங்காரனே
புலவருனைப் போற்றுமுருகா
வாத்தியம் முழங்கவே கையிலைமலை விட்டுநீ
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரட்க்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 9

பேயிருளன் காட்டேரி சடாமுனி இராக்ஷதர்
பூதப் பிசாசுகளுமே
பேதமுறும் சாமுண்டி சங்கிலிக் கருப்பனும்
பாதகமாய் எனைமிரட்ட
தயவாக உன்பெயரை சண்முகா வென்றிடச்
சாட்டையால் ஓட்டிவிடுவாய்
தம்பனம் மாரணம் வசியமுதல் பில்லியும்
சூனியம் வைத்தபேரை
தீயவன் வேரற சிவசுப்ர மணியனே
சூரமயிலேறி வந்து
சூலத்தால் குத்தியே மீளாத நரகினில்
செல்லவே தள்ளிடுவாய்
வாய்வேக மாகவே சேவல்கொடி பறக்கவே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே 10

முந்தி முதலாகவே தாரகனைக் கொன்றவா
மூர்த்தியே கார்த்திகேயா
முன்செய்த வினையினால் வறுமையது கொண்டுமே
மேனியது வாடுதையா
கந்தனே காணாமல் கடைந்த தயிர்போலவே
கலங்கிநான் நிற்கும்வேளை
காலனை உதைத்தவன் குழந்தை வடிவேலனே
காட்சிஅளிக்க வருவாய்
வெந்தணல் மேனியாய் சுந்தர மூர்த்திக்கு
வேடரூப மானதேவா
வெண்ணீ றணிந்துமே ருத்ராஷ மாலையோடு
வேலுடனே நின்றமுருகா
வேதாந்தத் தம்பிரான் கடம்பவனம் விட்டுநீ
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 11

தேன்பாலும் சர்க்கரையுமினிய சுவை கனிரசமே
தெவிட்டாத செழுங்கரும்பே
தென்னாடு மேவுகுண சாதி மாணிக்கமே
தெள்ளமுதமான திருவே
அன்புருக கொடிய நோய் விஷகடிகள் தீர்க்கநீ
அருமருந்தான மணியே
அய்வேலன் காயுனுள் அமர்ந்தவன் மைந்தனே
அருஞ்சுடரான மணியே
நன்மணியே பொன்மணியே எனதுகண் கருமணியே
ஞானமணி தெய்வமணியே
நவமணியே தவமணியே குருமணியே சைவமணி
நயனசிவ சுப்ரமணியே
வின்புருவ தண்டமணி வீரபட்டாணி துரை
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 12

மாதாவின் கரமதால் தண்டித்த சேயுமே
மருகவே வந்துநிற்கும்
மரக்கலம் தங்கியே காகம் பறந்தாலும்
மீளவும் வந்து சேரும்
காதமலர் மெய்யனே பலதுறைகள் சென்றாலும்
கரையேற வழியில்லையே
கந்தா கடம்பனே சொந்தமாய் எந்தனைக்
கருணையுடன் ஆளவருவாய்
சதமென்று உன்னைநான் நம்பினேன் அப்பனே
சஞ்சலம் தீர்க்கவருவாய்
சம்பந்தராய் வந்து வாதுகள் புரிந்துமே
சமணரைத் தொலைத்ததேவா
வேதங்கள் போற்றிடும் கல்விக் கழகமே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 13

தந்தைதாய்க் கம்பனே கந்தமலை வீட்டு நீ
தென்பழனி வந்தகுமரா
தினைப் புனத்திலே குறவள்ளியை மணந்திட
தேன்தினை மாவுண்டவா
நந்தி முதல் தேவரும் நாரதர் பிர்மாதி
நாதனைப் பணிந்துபோவார்
நாதமும் கீதமும் பரிமள வாசமும்
நறுமலரும் மணம்வீசுமே
பூந்தடம் சோலையும் தீர்த்தக் குளங்களும்
பார்க்கவெகு கண்காட்சியும்
புண்ணியம் பெருகவே பாவம் பறக்கவும்
புல்லாங்குழல் ஊதுவார்
வேந்தற்கு வேந்தனே நந்த கோவிந்தனே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே.14

சித்திரக் கோபுரமும் தங்கக் கலசங்களும்
சிங்காரக் கொலுமேடையும்
சுற்றுமதிற் கோட்டையும் மாட கூடங்களும்
தென்பழனி மலைமீதினில்
சித்தர்கள் முத்திபெற வைத்த குமரேசனே
ரத்தினமணி தீபவொளியே
செல்வகுரு நாதனே சுவாமிமலை சண்முகா
சிவாலயமும் நின்றமுருகா
தோத்திரம் செய்கிறேன் நல்வர மளிக்கவே
தோகைமயி லேறிவருவாய்
தொண்டர்கள் வினைதீர்க்கும் சோலைமலை நாயகா
தெண்டனிடுவேன் சண்முகா
வெற்றி வேலாயுதா விராலிமலை விட்டுநீ
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுவுளை 15

முருகனைப் பணிந்திடும் இடும்பனுக் காகவே
முன்பூசை தானளித்தாய்
மூவாசை விட்டுமே முருகனை நினையவே
முக்தியும்தான் தருகுவார்
பாருலகிற் பங்குனி உத்திரம் நடக்குதே
பழனிக்கு இணையில்லையே
பக்தர்கள் காவடிகள் பாலாமிர்தங் கொண்டுமே
பலகோடி வருகிறார்கள்
பாரொழுகும் பஞ்சா அமிர்தமே உண்கினும்
பாவம் பறந்தோடுமே
பளபளென ஒளிவீசப் புரவிமே லமர்ந்துநீ
பசிப்பிணியைத் தீர்க்கவருவாய்
விருதுடனே தில்லைநகர் நடனபதி சேயனே
வருந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 16

திருமாலின் மருகனோ குருநாத மூர்த்தியே
செவ்வேள் தரித்தமுருகா
தேவர்கள் சிறைமீட்ட சூர சங்காரனே
தெண்டாயுத பாணியே
பொறுமையுடன் நினைவோர்க்குப்
பொருளதவி சூழ விதரும்
பெருமிளகு முத்தையனே
போதக மாமுனிக்கு தமிழ்ஞான உபதேசனே
சோதி மயமானதேவா
வரும்பிணிகள் நீங்கவே மருந்தொன்று மில்லையே
வெண்ணீறு தாருமுருகா
வேலவர்க் கிணையாக வேறொருவ வரில்லையே
வேங்கை மரமானதேவா
வீரர்படை துணைவர்கள் லட்சத்து ஒன்பதுமே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 17

வானவர்க ளமுதமே அமணரை வதைத்திட
மசூடி குழலூதும்முருகா
வள்ளிக் கிசைந்துநீ தள்ளாத கிழவனாய்
வளையலிடும் செட்டிமகனாய்
ஜனனமுதல் காலம்வரை செய்திடும் பாவங்கள்
தீர்த்துமே வரமளிக்க
சச்சிதா னந்தனே சண்முகா எனக்குநீ
சாயுச்சபதவி தருவாய்
எனதுயிர் பிரியுமுன் நினைவு தடுமாறிடும்
உன்னையே நினைக்கமாட்டேன்
என்குறைகள் உந்தனிடம் அப்போது சொல்வதை
இப்போதே சொல்லிவைத்தேன்
உனதுகண் பார்வைதர தருணமிது எனைநாடி
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 18

அழகான காவடிக ளானந்த மாகவே
ஆடிவருகுதே உன்சந்நிதி
அருகண்ட காவடிகள் அலகுகள் பூட்டியே
ஆவேசங் கொண்டுவருக
அழகுமயில் நடனமிட வள்ளிதெய் வானையுடன்
அருகில்வா சுப்பிரமண்யா
அனுதினமும் மனதினுள் உனைத்துதிய வழியறியா
அசடனையும் ஆளுமுருகா
கழுகுமலை சிவகொடிய எளியவன் புலம்புவது
கந்தனே உன்செவிகேளாதோ
கதிர்வேல் எக்குற்ற மெத்தனை இருப்பினும்
சித்தமவை முத்தய்யனே
வேழமுகனுக் கிளைய வாலகும ரேசனே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே 19

அல்லலும் தொல்லையும் வல்வினைகள் தீர்த்துமே
ஆதரித் தெனையாளுவாய்
அருணா சலத்தினில் அண்ணாமலைக் கதிபன்
அன்னக்கிளி யீன்றபாலா
நல்லோர்கள் நினைவினில் நடனமிடு முருகனே
நற்சுக மளிக்கவருவாய்
நானுனை நம்பினேன் சச்சிதா னந்தனே
நற்கோண மணிமார்பனே
சல்லாபச் செந்தமிழில் வில்லாள சொற்பிழை
எல்லாம் பொறுத்தருளுவாய்
சேல்விழியால் வேடச்சி திருக்கோவை கனிவாயாள்
தெய்வானை சிரோன்மணிகளும்
வல்லகதிர் வேலுடனே செம்பொன் மயிலேறியே
வந்திடுங் கந்தவேளே
வெள்ளிமலை வேல்முருகா வினைதீர்த்து ரக்ஷிப்பாய்
வேலாயுதக் கடவுளே. 20