வைத்தியநாதர் வணக்கம்

நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்
நாவினுக்கு உகந்தநாமம் நமசிவாய மந்திரம்


ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சிசெய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சிநல்கும் மாடமாம்
நைந்துவாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைக் கொடுக்கவந்த நீலகண்டன் மந்திரம்

வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வயித்திய நாதனாக வந்துதித்தான் சங்கரன்
பைத்தியமும் பாதகமும் இங்குவந்து சேருமால்
பனிபோல விலகவைக்கும் பரமசிவன் மந்திரம்

தந்தைதாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணையிருக்கும் வீரசேகர் மந்திரம்

புள்ளிருக்கும் வேளூரென புனிதமிகு பூமியாம்
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளிதெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம்.

நம்மதையல் நாயகியாள் நாநிலத்தைக் காக்கவே
நங்கையரைத் தங்கையராய்ப் பேணிமிகப் போற்றிட
தம்முடைய குங்குமமும் திருச்சாந்து மண்ணுமே
சந்நிதியில் வழங்குகின்ற சுந்தரேசர் மந்திரம்

பாலனினைப் போற்றிமகிழ் பாலாம்பாள் மகிழவே
வேலனவன் கோலமிகு சீலமுத்துக் குமரனாய்
ஞாலமீது ஞானமுடன் அய்யனடி பற்றியே
மக்கள்குறை தீர்க்கவந்த சொக்கநாதர் மந்திரம்