ஸ்ரீ முத்துக்குமாரசாமி பதிகம்

இயற்றியவர் அமரர் அருட்கவி கு.செ.இராமசாமி

ஓதித்துதிக்கும்அடியார் துன்பம்யாவையும்உடனே விலக்கும்முருகா
உமையாளின்மடியிலும் இமையோரின்முடியிலும் ஓடிவிளையாடும்அழகா
சீதத்தமிழ்கொண்டு திருவருள்வழங்குவாய் தெய்வானைவள்ளிகணவா
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

வான்பொய்த்தபோதிலும் தான்பொய்த்துப்போகாத வள்ளல்காவேரிதீரம்
வாழைகள்குருத்திடத் தாழைகளும்சோறிடும் வளமானசோழதேசம்
தேன்பொய்த்துப்போகாத செல்வமலர்ப்பாதமே சேவிப்பேன்எந்தநாளும்
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

அறிவுவாராதசிறுகழுகுகளும் உன்னையே அன்போடுதொழவில்லையோ?
ஆதவன்எரித்தசிறை மீதெழுஎழுந்தசுரர் அழியவழிதரவில்லையோ?
சிறகுபெற்றடியேனும் உனதுபுகழ்பாடஅருள் செய்வாய்இதென்னமலையோ?
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

தொலையாதபல்பிணியும் தூரத்தில்நின்றுகை தொழுதேகும்அந்தநோயின்
சுவடுமில்லாதபடி அருணகிரிநாதர்க்குச் சொர்ணதேகம்கொடுத்தாய்
சிலைபோலநிற்பதோ பிணியாவும்தீர்த்தெனையும் சிவயோகிஆக்கிவைப்பாய்
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

ஒறாதுசெய்தவினை நோயாய்விளைந்தெனையும் உயிர்வாதைசெய்யலாமோ?
உன்பாதபங்கயம் கொண்டாடும்என்தமிழும் உயிரின்றிப்போகலாமா?
தீராதபிணியாவும் ஓடோடிப்போகநீ திருவுளம்கொள்கஉடனே
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

நாலூர்திரிந்தென்ன? ஊரூர்அலைந்தென்ன? நாடினேன்உனதுவேளூர்
நாடூர்மதிக்கநான் வேறூர்புகாதபடி நல்குவாய்பொன்பொருள்பேர்
சேலூர்கடைக்கண்கள் தோளூறஇருபாலும் தேவியர்தொழும்மன்னனே
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

ஆறுபடைவீடுகள் நூறுமலைநாடுகள் அண்ணலேஉனதுசொந்தம்
ஆசையில்விளைந்து மனஓசையில்எழுந்து நடமாடிவரும்எனதுசந்தம்
தேறுகலைவாணனே ஏறுமயில்வீரனே தீராதுநமதுபந்தம்
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

நீதான்அடைக்கலம் நீதான்படைக்கலம் நீதான்என்இதயதெய்வம்
நீதான்இலக்கணம் நீதான்இலக்கியம் நீதான்வைப்புநிதியும்
தீதானயாதொன்றும் வராமல்அருளுவாய் சிங்காரவடிவேலனே
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

கொக்கரித்தண்டம் குலுங்கச்சிறைகொட்டியே கூவிவரும்உனதுசேவல்
குதிகொண்டசேவலும் ஜதிகொண்டமயிலும் உன்கூர்வேலும்எனதுகாவல்
திக்கெட்டும்சென்றுநான் உனதுபுகழ்பாடுவேன் செந்தமிழ்கலையரசனே
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே

உனைநம்பினேன்நம்பினேன் நம்பினேன்என்னையே உன்வசம்ஒப்புவித்தேன்
ஊறானயாதொன்றும் வராமல்அருளுவாய் உன்னையேசரணடைந்தேன்
தினைமான்குறப்பெண்டு மணவாளாமுருகனே திருமால்தன்மருகனேவா
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே.