திருத்தணிகை முருகன்

வருவாய் முருகா வந்திடுக
வள்ளி மணாளா வந்திடுக
உருவாய் அருவாய் தணிகையிலே
உயிராய் அமர்ந்தோய் வந்திடுக


வேலும் மயிலும் விளையாட
வெயிலும் மழையும் மலையாடப்
பாலும் தேனும் சிலையாடப்
பதமும் இதழும் கவிபாட(வருவாய்)

மாலை மார்பில் அசைந்தாட
மறையும் புகழும் இசைந்தாட
வாலைக்குமரி அருகாட
வளரும் களபம் மார்பாட(வருவாய்)

தண்டை செங்கழல் தவிலாக
தமிழும் மறையும் இசையாகக்
கெண்டை கருவிழி நடமாடக்
கேட்கும் பக்தர்கள் மனமாட(வருவாய்)

எங்கோ வாழும் பக்தரெலாம்
எடுத்தார் காவடி முத்திரைகள்
மங்காப் புகழின் திருத்தணிகை
மலைமேல் அமர்ந்தே அருள்புரிவாய்!(வருவாய்)

தொண்ணூற்றாறூர் கூடிவரத்
தொண்டர்கள் நாடி ஆடிவர
எண்னூற் றோடிரு நூற்றெட்டு
இசைத்தமிழ் மாலை பாடிவர(வருவாய்)

பாலின் குடங்கள் பன்னீரு
பச்சைக்காவடி சந்தனங்கள்
வாழும் முருகா உன்னடியில்
வணங்கும் பங்குனி உத்திரத்தில்(வருவாய்)

``காசி, ஸ்ரீ'' அரு. சோமசுந்தரன்