அகிலலோக நாயகனைப் பாடுங்கள்

அரோகரா அரோகரா சொல்லுங்க-அந்த
அகிலலோக நாயகனைப் பாடுங்க


திருவளரும் பழனி ஆண்டி வந்தானே-அவன்
திக்கெல்லாம் புகழ் பரப்பி நின்றானே
வேலை மட்டும் கையிலேந்தி வாரானே-நம்ம
வினைகள் எல்லாம் களையெடுக்க போரானே

துடுப்பில்லாமல் படகு நல்லா போகுமா-நம்
துயரமெல்லாம் துடுப்பு போல ஆகுமா
துன்பமென்று நடந்திட்டோம் தூயவனே காத்திடு-நான்
துணையிருப்பேன் என்று சொல்லி என் மனதைத்தேத்திடு

காவடியை தோளில் ஏந்தி வாரோமே-எங்கள்
கவலையெல்லாம் தீர்த்து வைப்பாய் ஐயாவே
ஜாதிமத பேதமில்லை சமத்துவம் தான் பாடுது
ஐங்கரனுக் கிளையவனை உலகமெல்லாம் புகழுது

ஆழ்கடலில் கண்டெடுத்த முத்துதான்-ஐயா
அனைவருக்கும் நீயும் நல்ல சொத்துதான்
ஆண்டவனைப் பார்த்திட்டோம் ஆறுதலை சொல்லிவிட்டான்
அனைவருக்கும் அவன் காட்சி அற்புதமாய் தந்திடுவான்

கண்டனூர் சாமி ஆடி வராங்க-நம்ம
கதிர்வேலன் புகழை நல்லா சொல்வாங்க
சொந்தமெல்லாம் மறக்கணும் பந்தமெல்லாம் துறக்கணும்
ஐயா உன் புகழை நான் என்றென்றும் பாடனும்