ஒயிலாட்டம்

கந்தனுக்கும் வேல் வேல்
முருகனுக்கும் வேல் வேல்
கந்தனுக்கும் வேல் வேல்
முருகனுக்கும் வேல் வேல்


பச்சை மயில் வாகனம்
பச்சை வள்ளி மோகனம்
கச்சை கட்டி ஆடுங்கடி ஒயிலாட்டம்
கால்மாறி ஆடுங்கடி மயிலாட்டம்(கந்தனுக்கும்)

தேவயானை கண்ணரசி
தேவேந்திரன் பெண்ணரசி
பூ மகளின் மருமகளே ஒயிலாட்டம்
புண்ணியத் தவசீலன் மயிலாட்டம்(கந்தனுக்கும்)

பச்சமலை பவளமலை
இச்சை மலை பழநிமலை
இன்பமலை எமது நிலை ஒயிலாட்டம்
ஏகபோக தரிசனமாம் மயிலாட்டம்(கந்தனுக்கும்)

தங்கப்புள்ளி அங்கமது
தாவித் தாவி ஆடுமது
எங்களது முருகனுக்கு ஒயிலாட்டம்
எல்லையற்ற பேரழகே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

கொண்டை குலுங்குதடி
கூவியே ஆடுதடி
மண்டலமே மயங்குதடி ஒயிலாட்டம்
மாலவனும் மயங்குகிற மயிலாட்டம்(கந்தனுக்கும்)

முத்து நகை மோக நகை
பித்துநகை பெரியநகை
சித்துகளாம் செந்திலவன் ஒயிலாட்டம்
சிங்கார வேலனுக்கு மயிலாட்டம்(கந்தனுக்கும்)

குலுங்கிச் சிரிக்குமிந்தக்
குழந்தை ஏறி நின்று
அலுங்காமல் ஆடுதய்யா ஒயிலாட்டம்
ஆனந்த காட்சியம்மா மயிலாட்டம்(கந்தனுக்கும்)

சலங்கை குலுங்குதம்மா
சங்கீதம் பாடுதம்மா
நலுங்காய் ஒலிக்குதம்மா ஒயிலாட்டம்
நாயகனின் பேரருளே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

உடம்புக்கள் ஆடுவதும்
உயிராகக் கூடுவதும்
கடம்பனின் பேரருளே ஒயிலாட்டம்
கந்தனின் பேரழகே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

விராலிமலை பழநிமலை
விரும்புகின்ற ஆறுபடை
வெற்றியுடன் ஆடுகின்ற ஒயிலாட்டம்
வேண்டுவரம் தந்திடுமே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

பன்னீர் மணக்குதய்யா
கண்ணீர் பெருகுதய்யா
எந்நேரம் நீவருவாய் ஒயிலாட்டம்
எல்லையிலாப் பேரழகே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

சிந்துகளோ செந்தூரோ
முத்துங்களே பக்தர்களே
வந்துவந்து ஆடுகின்றான் ஒயிலாட்டம்
வரம்தரவே கூடுகின் மயிலாட்டம்(கந்தனுக்கும்)

தந்தனத்தான் பாடுகின்றான்
தாளமிட்டுக் கூடுகிறான்
கந்தனவன் ஆடுகின்றான் ஒயிலாட்டம்
கற்பனையை பாடுங்களே மயிலாட்டம்(கந்தனுக்கும்)

-நாச்சியப்பன்