திருத்தணி முருகன்

முருகய்யா முருகய்யா முத்துக்குமரன் நீயய்யா!
முருகய்யா முருகய்யா முத்துக்குமரன் நீயய்யா!


திருத்தணி மலையில் அருத்தமாய் நின்று
திருப்புகழ் கேட்கும் வடிவேலா
ஒருத்தரும் இல்லை உதவியும்-இல்லை
உன்பதம் ஒன்றே துணையாகும்

வெறுத்தவர் கோடி செருத்தவர் கோடி
விளைத்ததும் என்ன தெரியாது
பொறுத்ததும் நீயே மறுத்ததும் நீயே
பொற்பதம் தந்து காப்பாயே!

நெஞ்சினில் வைத்த சந்தனத் தாலே
நெருப்பெனும் நோய்கள் நீக்காயோ!
தஞ்சமாய் வந்துன் தாள்பணி கின்றோம்
தயவுகள் செய்யத் தாமதமோ;

பஞ்சமும் நோயும் பனியென நீக்கிப்
பாற்குடம் காவடி ஏற்றவனே!
அஞ்சிட வில்லை அறுமுகம் காட்டி
ஆதரித் திடநீ வரவேணும்

நவமணி வீரர் சூழ்ந்திட நிற்கும்
நாயகனே நீ அருள்வாயே!
தவமென வந்த வள்ளியும் தெய்வ
யானையுடன் நீ வரவேணும்

உவர் நிலமெல்லாம் விளைந்திடும் வண்ணம்
உரமென முறுவல் செய் வோனே!
வறுகள் கோடி செய்திடும் போதும்
தணிகையில் நின்று காப்பாயே!

அறுமுக மான மரகத அணியை
அழகுடன் மார்பில் அணிவோனே
பெருமித மான ஒருதிரு மார்க்கம்
பிரணவம் என்ற பெருமானே!

கருமணிகடுக்கை திருமணி வேய்ந்த
அரும்பவ ளக்கால் சபையினிலே
குருபணி யோடு காட்சிகள் தந்தே
எழுமையும் காக்கும் வடிவேலா!

பங்குனி உத்திரத் திருநாள் எல்லாம்
பக்தர்கள் நெஞ்சில் பாலாவாய்
சங்குகள் ஊதி சமரசம் ஓதி
சாத்திரம் எல்லாம் நீயாவாய்

தங்கிட நீயே தருநிழல் ஆவாய்
தணிகையில் எழுந்த பெருமானே!
பொங்கிடும் கண்ணீர் அன்பினால் உன்னைப்
போற்றிடு கின்றோம் காப்பாயே!

-பொற்கிழிக் கவிஞர் காசி ஸ்ரீ அரு. சோ