ஒன்றுமில்லை என்று நினைத்தேன்!

முருகா! முருகா! வேல் முருகா!
முருகா! முருகா! வேல் முருகா!


கல்லுக்குள்ளே ஒன்றுமில்லை என விருந்தேன்
உள்ளுக்குள்ளே தேரை என்று கண்டுவியந்தேன்
அங்கும் உண்டு ஈரம் என்று இன்று உணர்ந்தேன்
அன்பிருந்தால் எங்கும் உண்டு என்று தெரிந்தேன்

இல்லை, இல்லை, இல்லை என்று பகன்றேன்
எல்லாம் கல்லு செம்பு என்று சொல்லி இகழ்ந்தேன்
வெண்ணெய் பாலுக்குள்ளே என்று கண்டு வியந்தேன்
வேலா! உன்னைக் காணும் வழி இன்று அறிந்தேன்

எங்கே எங்கே என்று கேட்டுத் திரிந்தேன்
இல்லா இடம் எங்கும் சென்று தேடி அலைந்தேன்
அங்கும் இங்கும் எங்கும் உள்ள உண்மை அறிந்தேன்
இங்கே உன்னைக் கண்டு போற்ற எண்ணி நடந்தேன்

ஆண்டு தோறும் கார்த்திகையில் மாலை அணிந்தேன்
ஆறுமுகம் உன்னை எம்ணிப்பாடி மகிழ்ந்தேன்
வேண்டி வரும் அன்பருடன் கூடி நடந்தேன்
வெய்யில் பனி எண்ணவில்லை தாங்கித் தொடர்ந்தேன்

நெஞ்சுறுதியை அளக்க நீ நினைத்தாயோ
நேற்றுவரை சோதித்து நீ முடித்தாயோ
தஞ்சமென்று வந்த பின்பும் தவிக்க விட்டாய்
சன்னதியின் முன்பு நின்றும் புலம்ப விட்டாய்

சோதனையைப் பேதை மனம் உணரவில்லை
துன்பத்தையே கண்ட உள்ளம் பொறுக்கவில்லை
நீ துணை என்றே நடத்தும் உறுதியில்லை
நெஞ்சம் தளர்ந்தேன் நிலைமை அறியவில்லை

படிப்படியாக என்னை உயர்திவிட்டாய்
பையப்பையவே இருளை அகற்றி விட்டாய்
வெடிக்கசையாத கல்லு மனதை எல்லாம்
வெயில்பட்ட நெய் யெனவே உருக வைத்தாய்

பகல் கனவைக்கூடப் பலிக்க வைத்தாய்
பட்ட மரமும் தழைத்துச் செழிக்க வைத்தாய்
அகல் விளக்காய் இருந்த என்னை எடுத்தாய்
அண்ணாமலை விளக்காய்த் திகழ விட்டாய்

நினைத்ததை எல்லாமே நடத்தி வைத்தாய்
நீண்ட துன்பம் தொடர்கதை முடிய வைத்தாய்
இணையடித் தாமரையில் விழுந்து விட்டேன்
இன்று உன்னை ஏதோ கொஞ்சம் உணர்ந்துவிட்டேன்

உந்தனருள் இன்னதென்று உணர்த்தி விட்டாய்
உள்ளத்துள் கோவில் ஒன்று அமைக்க வைத்தாய்
சுந்தர வேலோடு அங்கே எழுந்தருள்வாய்
தோகை மயில் வாகனனே சரணம் கந்தா