தண்டாயுதத்தானைக் கொண்டாடு மனமே

அரோகரா

ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான்
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில்
ஆதாரமான பெருமான்

மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
மெய்யாள வந்த பெருமான்
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி
விளைவாகி நின்ற பெருமான்

கோலாலம் பூரில்வளர்கோன் தண்டபாணி இவன்
கோவில் கொண்டாடு மனமே
கூற்றேதும் வாராது கொடுநோயும் சேராது
குறையாத வாழ்வு மிகுமே!

`ஓம்'என்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு
உன்வீடும் அந்த இடமே
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மணமுண்டு
உன்வாழ்வு கந்தன் வசமே

நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம்
நடவாது வேலனிடமே
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன்உள்ளம்
நலம் யாவும் வீடுவருமே

கோமன்னன் வாழ்கின்ற கோலாலம்பூர் செந்தூர்
கொடிகட்டி ஆள விடுமே
கொண்டாடு கொண்டாடு தண்டாயுதத் தானைக்
குறையாத செல்வ மிகுமே!

-கவியரசு கண்ணதாசன்