ஆறுபடை வீடமர்ந்த ஆறுமுகன்

அரோகரா

செந்தூரில் விளையாடிச் சிறப்புக்கள் பலசெய்து
சிந்திக்கவைத்த முருகா!
பந்தங்கள் போக்கியென் பாவங்கள் நீக்குவாய்
பழநிவாழ் இனிய குமரா!
அந்தமில் வாழ்க்கையில் அல்லல்கள் போக்கிடும்
அழகர்மலை யாளுமுருகா
உந்தனடி பாடுதற்கு எந்தன்மன மேடையமர்
திருமால் தனக்கு மருகா
கயிலாய வாசன் மகிழ் கல்யாணக் கோலம்
திருப்பரங்குன்றத்தில் வாழும் குகனே!
உயிருக்கு மூலமாம் ஓமென்ற பொருளுரைத்த
உன்கோலம் சுவாமிமலையில்
ஒயிலாக வேல்கொண்டு உன்கருணை விழியாலே
உலகாளும் தணிகை யோனே!
மயிலேறி வருவாய்நீ மக்கள் நலம்சேர
மலைதோறும் ஆடுமெழிலே!