தண்டாயுதபாணி துணையே

அரோகரா

ஆனைமுகன் தம்பியே அம்பிகை பாலனே
அடியாரைக் காக்கும் பாலா!
ஆறுமுக வேலனே அகிலத்தை காக்கவே
அவனிதனில் உதித்த தேவா!
தேவர்க்கு தேவனே தெய்வானை மணவாளா
தேடிவந்து உனைப் பணிந்தோம்!
பணிந்தவர் துயரத்தை பறந்துவரும் மயிலேறி
பாலிக்கும் தேவன் உன்னை
மனதாரப் பாடுவோர் மனையினில் எழுந்தருளி
மகிழ்ந்தாட வைக்கும் பொருளே!
சிங்கை நகர்தனிலே சிறப்பாக வீற்றிருக்கும்
தண்டா யுதபாணி துணையே!
சிங்கப்பூர் நகர்தனிலே செம்மையுடன் நகரத்தார்
சிறப்புடனே போற்றி வந்தார்!
சீரான திருப்பணிகள் சிங்காரமாய்ச் செய்து
சிரம்தாழ்த்தி வணங்கி நின்றார்!
வணங்கிடும் அடியார்க்கு வளங்கள் பலதருகின்ற
வள்ளலே எம்குல தெய்வமே!
சோதனைகள் வந்தாலும் வேதனைகள் தொடர்ந்தாலும்
வேல் விடுக்கும் கவியமுதமே!
உளமுருகிப் பாடுவோர் உளமெலாம் எழுந்தருளி
உயர்ந்தோங்க வைக்கும் அரசே!
சிங்கை நகர்தனிலே சிறப்பாக வீற்றிருக்கும்
தண்டா யுதபாணி துணையே!

லெ. சக்திகுமார்