தெண்டாயுதபாணி பாமாலை

காப்பு

சீருலவுந் தென்பழனித் தெண்டா யுதபாணிப்
பேருலவும் மாலைதனைப் பிரபஞ்சத் திற்பாடப்
பாருலவும் மேருதனிற் பாரதத்தை நேர்வரைந்த
காருலவுந் தொந்திக் கணபதிதாள் காப்பாமே 1

பதிகம்

வையா புரிநாட்டில் வளர்ந்திடுமென் னையனுக்கு
ஐயாயி ரஞ்சரண மடிபணிந்து தெண்டனிட்டேன்
மெய்யான தேசிகனே வேலாயு தம்படைத்த
வையா புரிக்கரேச வருவாயிது சமயம் 2

ஆறாறு நூறூறு அஷ்டமங்க லஞ்சூழ்ந்த
வீரா சிவகிரியின் வேலாயு தச்சாமி
சூராதி படைவென்ற சுப்பையா இப்போது
வாரா திருப்பதென்ன வருவாயிது சமயம். 3

தஞ்சமென்றே நின்பதத்திற் சரணம் புகுந்த எந்தன்
நெஞ்சிற் கவலையெல்லாம் நீதீர்க்க வேணுமையா
அஞ்சலென்று வந்தவர்க்கு ஆதரவு சொல்லுமிப்போ
மஞ்சரி மணவாளா வருவா யிதுசமயம். 4

மங்கை நகரிதனில் மறையோதும் வேதியராய்
அங்கசனைக் காய்ந்த அரனார் திருமகனே
சங்கரநா ராயணர் சொல்சண்முகனே கந்தையா
மங்கைவள் ளிபங்காளா வருவா யிதுசமயம். 5

ஏன்தான் முருகா இரக்கமில்லை யோஉனக்கு
நான்தா னுரைப்பதும் நற்செவியிற் கேட்கிலையோ
சார்ந்தோடும் வாவித் தடாகமும் வையாபுரியின்
மாந்தோப்பும் விட்டு வருவா யிதுசமயம். 6

ஜெகமே யளந்த அருள் திருமால் மருகோனே
அகமே வுருகுதையா ஆற்றுதற்கு நீ இரங்காய்
குகனே முருகையா குழந்தையைத் தேடிஇப்போ
மகனே யெனஓடி வருவா யிதுசமயம். 7

சின்னவய தெந்தனது சிந்தை மெலிவதற்கு
என்ன விதிப்பயனோ ஏதறிய மாட்டேன்கேள்
உன்னையே யான்துதித்து உன்பத மேபணிய
வண்ணமயி லேறியே வருவா யிதுசமயம். 8

தீராத நோய்களையும் தீர்த்துமே ஆளாக்கி
மாறாத செல்வமுறும் வரமெனக்கு நீயருளி
ஓராறு முகங்குளிர உத்தரவு நீ கொடுக்க
வாராயோ கந்தா வருவா யிதுசமயம். 9

மார்க்கண்டனுக் காகவளர்ந்த சொக்கலிங்கர் முன்னே
பார்க்குள் திருப்பணியை பான்மையாய்ச் செய்வதற்கு
ஆர்க்குவிரைந்தோ மெனவே அஞ்சலிட்டு சொல்லிவைத்த
மார்க்கமென்ன கந்தா வருவா யிதுசமயம். 10

கனத்தவுன்திருப் பணியைக்கட்டி வைத்தபேர் தமக்கு
நினைத்தபடி யேதான் நிறைவேற்ற வேண்டுமையா
இனத்தார் நகைத்தென்னை ஏளனங்கள் செய்யாமல்
மனத்துய ரந்தீர்க்க வருவா யிதுசமயம். 11

உகந்த திருப்பணியை உண்டாக்கி எந்நாளுஞ்
ஜெகந்தனில் வாசமாய்ச் செப்புதற்கு நீ இரங்காய்
தகுந்தவசுராதிகளைத் தட்டழியக் கைவேலால்
வகுந்துவிட்ட கந்தா வருவா யிதுசமயம். 12

நாடு நகரிழந்த ராஜாக்கள் போலவேதான்
வாடுவ துனக்கழகோ மனதுமி ரங்கலையோ
பேடைமயில் வள்ளியுடன் பேருற்ற மயிலேறி
வாடை யதுதுலங்க வருவா யிதுசமயம். 13

சாதியுஞ் சமயமென்று தானினைத்துப் பாராமல்
நீதிபெற நெஞ்சினிலே நீ இருந்து கொண்டாட
ஏதுமறி யேனெனக்கு இவ்வேளை யேயருள
வாதுசெய்ய வேண்டாம் வருவா யிதுசமயம். 14

பருவகாலத்தி லெண்ணிப் பாராமல் யான்செய்த
கரும வினையகலக் கனத்ததிருக் கோயில் செய்தேன்
தருமங்கள் தானோங்கச் சாமிநீ கிருபைசெய்ய
அருள்சிவ கிரிமுருகா வருவா யிதுசமயம். 15

கல்லாதிருக்குங் கசடனெனக் கண்டாலும்
நல்லா தரவுசொல்லி ரட்சிக்க வேணுமையா
எல்லாருங் கொண்டாட என்னிடத்தி லன்புவைத்து
வல்லாளா இப்போது வருவா யிதுசமயம். 16

அடியார் வினையகற்றும் ஆறுமுகத் தெய்வமேகேள்
அடியேனும் உமக்கடிமை ஆகினேன் கிருபை செய்வாய்
துடியாய் மயிலேறிச் சூரர்களைச் சம்ஹரித்த
வடிவேற் கரக்குமரா வருவா யிதுசமயம். 17

உச்சிதமா யானும் உமக்கே அபயமென்றேன்
இச்சணமே யென்னிடத்தில் இப்போது மேஎதிராய்
பச்சைமயி லேறிவந்து பக்தனெனை ரட்சித்தருள்
வச்சிர வேலாயுதனே வருவா யிதுசமயம். 18

சிங்கமுக அசுரன் சிரம்வீழ முன்னாளில்
செங்கையில் வேல்விட்டசேவற் கொடியோனே
மங்கையரும் மோகிக்க மயில்வீரா உந்தனது
மங்களதெய் வானையுடன் வருவா யிதுசமயம். 19

பாலசமுத் திரஞ்சூழ் வயலுஞ் சிவகிரியாய்
பாலனுனைத் தெரிசிக்கப் பரகதியைத் தாருமையா
மூலமென யானைசொல்ல முதலையைச் சம்கரித்த
மாலவர் மருகோனே வருவா யிதுசமயம். 20

அண்டர்தொழுஞ் சொக்கருக்கு மைந்தராய் வந்துதித்த
கொண்டல் முருகா எனது குலமுழுதும் உன்னடிமை
செண்டு முலைவள்ளி தெய்வானைக் குகந்தகந்தா
மண்டலங்கள் மெச்ச வருவாயிதுசமயம். 21

ஞாலமதில் எந்நாளும் நம்பினே னுன்பாதம்
ஓலமென்றே னென்முன்னே ஓடிவந்தா லாகாதோ
பாலனெனக் குங்கிருபை பாலிக்க வையகத்தில்
வாலையருள் கந்தா வருவா யிதுசமயம். 22

சொக்கலிங்கர் மீனாட்சி சுந்தரர்க்கு முன்பாக
மிக்க திருப்பணியை விதவிதமாய் யான்நடத்த
பக்கத் துணையிருந்து பாலனென்னை யேகாக்க
மைக்கண் வள்ளிபங்காளா வருவா யிதுசமயம். 23

குருமுனிக்கு நீகுருவாய் குவலயத்தில் எந்நாளும்
தருமநெறி தவறாச் சண்முகனே இப்போதுஞ்
சிறுமை செய்யும் பிணியைச் சிதறடித்து வேல்விடுத்தே
வறுமையெல்லாந் தீர்க்க வருவா யிதுசமயம். 24

காப்புடனே ஐயைந்தெனும் கண்யநிறை பாடல்களும்
ஏற்படுத்தி நின்றேன்யான்இச் சமயமாலை தமிழ்
நேர்புனைந்தே னென்பிழையை நீ பொறுத்தே யிப்போது
மாப்புசெய்ய வேணுமினி வருவா யிதுசமயம். 25