கையகல நெஞ்சுண்டு ஆனால் உள்ளே
கடலளவு ஆசைபொங்கும் இருந்தபோதும்
ஐம்புலனும் முறையோடு அடக்கி வைத்தே
அனுதினமும் உன்நினைவே போற்றிக்காத்து
பையநடை போட்டுவுனைக் காண நாங்கள்
பழகுதமிழ்ப் பாட்டிசைத்து வந்தோம் எங்கள்
செய்தவறு பலவுண்டு இருந்தபோதும்
சீர்வேலா எமக்கருள ஓடி வாவா.

ஆடுமயிலேறி விளையாடும் உந்தன்
அழகுமிகு சுவாமிமலை அங்கே வந்தால்
காடுநடமாடு சிவன் ஐயம் தீர்க்கக்
காதோடு பேசி நிற்பாய் என்றே நாங்களும்
வாடுமெங்கள் உள்ளத்தின் ஏக்கம் நீங்க
வளர்சிங்கைபதி நோக்கி நடந்தே வந்தோம்
கோடியுண்டு எம்குற்றம் இருந்தபோதும்
குருநாதா எமக்கருள ஓடி வாவா.

எந்நாளும் உன்னருமை புகழே சொல்லி
இசையோடு கடல்பாடும் வீடாம் உந்தன்
செந்தூரில் வந்துமுறையிட்டால் எங்கள்
சிறுகுரல்கள் செவிகேளாதென்றே நாங்கள்
நெஞ்சுநிறை துன்பமெல்லாம் நீக்க வேண்டி
நெடுநடையாய் சிங்கையை நோக்கி வந்தோம்
தஞ்சமுற்ற எங்கள்பிழை நீக்கி இன்றே
தமிழ்வேலா எமக்கருள ஒடி வாவா.

பரங்குன்றம் மணமேடை ஆனதாலே
பலவேலை உனக்கிருக்கும் அங்கு வந்து
சுரங்கமெனும் எங்களுள்ளத் துள்ளே உள்ள
துயரத்தைச் சொன்னால் அதனைக் கேட்டு
இரங்கியுடன் வரமாட்டாய் என்றே நாங்களும்
எழிற்சிங்கைபதி நோக்கி நடந்து வந்தோம்
பெருந்தவறு பலசெய்தோம் ஆனபோதும்
பெருமானே எமக்கருள ஓடி வாவா.

முனிஞானி வள்ளியெழில் கூறக்கேட்டு
மூத்தாளைப் பரங்குன்றில் தனியே விட்டு
மனம்போல வள்ளியுடன் தணிகைக் குன்றில்
மகிழ்ந்திருக்கும் அந்நேரம் நீயும் எங்கள்
மனத்துயரம் கேட்டருள வாராயென்றே
வழிநடையாய் சிங்கையை நோக்கி வந்தோம்
கணக்கற்ற எங்கள்குற்றம் பொறுத்துக்காத்தே
கதிர்வேலா எமக்கருள ஒடி வாவா.

நலமாடும் தேவானை வள்ளியோடு
நாளெல்லாம் மகிழ்ந்தாட உள்ள வீடாம்
பலகனியும் மணமலரும் பூத்துச் சிந்தும்
பழமுதிரும் சோலையங்கு வந்து எங்கள்
பலகவலை சொல்லியழக்கூடாதென்றே
சிங்கையை நோக்கி நடைப் போட்டு வந்தோம்
பலதவறு நாங்கள் செய்தோம் ஆனபோதும்
பழம்பொருளே எமக்கருள ஒடி வாவா.

கன்றுவந்து மடிமுட்டி கத்தும் போது
கனிந்திரங்கி சுரக்கின்ற பசுவைப்போல
உன்னடியே கதியென்று கொண்ட எங்கள்
உளத்துயரம் தீர்த்தருள வேண்டும் ஐயா.
இன்னலுற்ற நாங்களுமே உன்னைக் காண
எழிற்சிங்கைபதி நோக்கி நடந்தே வந்தோம்
எம்தவறு எல்லாமும் பொறுத்துக் காத்தே
எழில்வேலா எமக்கருள ஒடி வாவா.

ஒருகனியை கணபதியும் பெற்றதாலே
உடன்கோபம் கொண்டவனே பழநிவேலா
பெருந்துயரம் தினம்பெருகி வந்த போதும்
பிறவொன்றும் எண்ணாது நாங்களும் உந்தன்
திருவடியே சரணமெனப் பற்றிக்கொண்டோம்
சிறியவரைக் கருள்புரிந்து காக்க வேணும்
இருமாதர் புறமாடும் தங்க வேலா
ஏறுமயில் மீதேறிக் காக்க வாவா.