காரைகுடி - பழனிப் பயணம்


வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா


காவடி அமுதே பழந்தமிழே
உன் சேவடி காண வருகின்றோம்
பூவடி காட்டி அருள்புறிவாய்
அப்பா குமரா பழனியப்பா

காரை சுற்றி நெடும்பயணம்
கனிவில்லாத கடும்துயரம்
அப்பா குமரா பழனியப்பா
சோதனை ஓட்டம் முடிந்ததப்பா

கொப்புடயாளின் பார்வையிலே
காவடி தோளில் ஏறியதே
உன் பெயர் கோஷங்கள் ஓதியதே
அப்பா குமரா பழனியப்பா

அப்பன் உன்னை நினைத்தபடி
காரை காவடி கிளம்பியதே
அப்பா குமரா பழனியப்பா
தோளில் ஏறி வந்திடப்பா

குன்றக்குடிக்கு குறும்பயணம்
நடு நித்திரையில் தான் நடைபயணம்
வழித்துணையாக வந்திடப்பா
அப்பா குமரா பழனியப்பா

குன்றக்குடியை அடைத்துவிட்டோம்
சிறுபிள்ளைகள் உன்னை காணவந்தோம்
அப்பா குமரா ஷண்முகனே
மலையை விட்டு இறங்கிடப்பா

செட்டி காவடி கூடியாதே
வேலை தொடர்ந்து ஓடியதே
முருகா முருகா எனும் கோஷம்
அப்பா குமரா பழனியப்பா

பிள்ளையார்பட்டி கடந்துவந்தோம்
வரப்பினில் நாங்களும் நடந்துவந்தோம்
அப்பா குமரா பழனியப்பா
கம்மாய் கண்ணில் தெரிந்ததப்பா

மருதுபட்டி தோப்பிடையே
குளிரும் எங்களை வாட்டிடவே
உன் பெயர் தானே கம்பளியே
அப்பா குமரா பழனியப்பா

சேவுகபேருமான் மாமனையும்
சிங்கம்புணரியில் தரிசித்தோம்
அப்பா குமரா பழனியப்பா
அருளை வாங்கித் தந்திடப்பா


கொட்டாம்பட்டி ரோட்டிடயே
சில காவடி பிந்தி வருகையிலே
வடையும் புரளி பேசுதப்பா
அப்பா குமரா பழனியப்பா

மனப்பசேரி வருகையிலே
தொண்டை வறண்டு போனதப்பா
அப்பா குமரா பழனியப்பா
தண்ணீர் தந்து உதவிடப்பா

சமுதிராபட்டியும் வந்ததப்பா
கொப்பளம் சிறிதாய் பிறந்ததப்பா
என் விரதப்பலனும் புரிந்ததப்பா
அப்பா குமரா பழனியப்பா

பதினெட்டு மைல் தொலைதூரத்திலே
உப்பார் மையம் கொண்டிருக்க
அப்பா குமரா பழனியப்பா
தூக்கம் கன்றிப்போனதப்பா

பானக்க பூஜையும் முடிந்ததப்பா
மாப்பிள்ளை அழைப்பும் நடந்ததப்பா
நத்தமும் விடையை கொடுத்ததப்பா
அப்பா குமரா பழனியப்பா

எத்தனை விரைவாய் சென்றாலும்
குதுரை முன்னே சென்றதப்பா
அப்பா குமரா பழனியப்பா
கருப்பர் குதிரையை நிருத்திடப்பா

தோள்களும் ரணமாய் ஆனதப்பா
கால்களும் முழுதாய் தேய்ந்ததப்பா
கொப்பளம் பெரிதாய் ஆனதப்பா
அப்பா குமரா பழனியப்பா

உடம்பில் தண்ணீர் இல்லையப்பா
கண்களின் வழியே கரையுதப்பா
அப்பா குமரா பழனியப்பா
உந்தன் சோதனை போதுமப்பா

கருப்பர் குதிரையே முந்திவிட்டோம்
கோபால்பட்டி வந்தடைந்தோம்
உப்பார் நோக்கி வருகின்றோம்
அப்பா குமரா பழனியப்பா

பன்னீர் தொளிக்க ஒருகூட்டம்
இளநீர் கொடுக்க மறுகூட்டம்
அப்பா குமரா பழனியப்பா
என்னை தாங்கி பிடித்திடப்பா

இடச்சீ மடமும் கமகமக்க
அன்னதானமும் தலைசிறக்க
நடுவினில் நீயும் அமர்திருக்க
அப்பா குமரா பழனியப்பா

அதிகாலையிலே நடைகிளம்ப
தூங்கியபடியே நான்நடக்க
அப்பா குமரா பழனியப்பா
பையக்கூட்டி சென்றிடப்பா

இழந்த சக்தி திரும்பிடவே
அபிராமியிடம் சக்தி வேண்டி வந்தோம்
சக்தியை வாங்கி தந்திடப்பா
அப்பா குமரா பழனியப்பா

எத்திசை நோக்கி பார்த்தாலும்
பாலைவனம்போல் தெரியுதப்பா
அப்பா குமரா பழனியப்பா
நீ மரமாய் நிழலும் தந்திடப்பா

வெள்ளை கோட்டின் துணையுடனே
எறும்பை போல பின்தொடர்தோம்
தாரை பூவாய் மாத்திடப்பா
அப்பா குமரா பழனியப்பா

கண்ணில்பட்ட மனிதரிடம்
எங்கே எங்கே என கேட்டறிந்து
அப்பா குமரா பழனியப்பா
ரெட்டியார் சத்திரம் வந்ததப்பா

செம்மடபட்டி உஞ்சலிலே
சம்மனம்கட்டி அமர்திருந்து
உன் வைர உஞ்சலை கண்டோமப்பா
அப்பா குமரா பழனியப்பா

அடியேன் உஞ்சலை ஆட்டிடவே
மகிழ்ச்சியில் நீயும் ஆடிடவே
அப்பா குமார பழனியப்பா
என் கால்வலி பஞ்சாய் பறந்ததப்பா

அவரவர் குறைகள் திர்ந்திடவே
மிட்டாய் வாங்கி தருகின்றோம்
ஒவ்வொன்றாக சுவைதிடப்பா
அப்பா குழந்தை வேலப்பா

மிட்டாய் அலையாய் பெருகிடவே
அடியவர் குறைகள் உருகிடவே
அப்பா குழந்தை வேலப்பா
விருப்பாச்சியில் என்னை ஏத்திடப்பா


வேலை முன்னே ஊன்றிவிட்டாய்
மலையை பின்னே காட்டிவிட்டாய்
பழநிமலையும் ஜொலிக்குதப்பா
அப்பா குமரா பழனியப்பா

களிங்கப்பையா ஊரணியில்
குளிரும் அதிகம் ஆனதப்பா
அப்பா குமரா பழனியப்பா
தூங்க இடமும் காட்டிடப்பா

துன்பங்கள் கடுகாய் மாறுதப்பா
வலிகளும் பனியாய் உருகுதப்பா
பழனியின் உள்ளே வருகையிலே
அப்பா குமரா பழனியப்பா

மலையின் அடியில் குளமிருக்க
இடும்பனும் அங்கே அமர்திருக்க
அப்பா குமரா பழனியப்பா
நன்றிகள் சொல்லி வந்தோமப்பா

அரண்மணை அய்யா அருகிருக்க
நெற்குப்பை அய்யா கவியுரைக்க
கண்டனூர் அய்யா பிரம்பெடுக்க
அப்பா குமரா பழனியப்பா

காவடிசிந்து ஒலித்திடவே
அடியவர்கள் உன்னை அழைத்திடவே
அப்பா குமரா பழனியப்பா
நல்மொழி சொல்லி சென்றிடப்பா

அன்னதான மடத்தினிலே
காவடி இறக்கும் இடத்தினிலே
வைரவேலுடன் வந்திடப்பா
அப்பா குமரா பழனியப்பா

சரவணபொய்கை குளத்தினிலே
ஷன்முக நதியின் கரையினிலே
அப்பா குமரா பழனியப்பா
மயிலுடன் வந்து அருளிடப்பா

கட்டியம் கூற வருவாய்
காவடி ஆட்டம் புரிவாய்
மலையினில் ஏற்றிவிடுவாய்
அப்பா குமரா பழனியப்பா

அடிவாரத்தில் கணபதியும்
அழகாய் காட்சி தருகின்றார்
அப்பா குமரா பழனியப்பா
உன் கை கொடுத்து ஏற்றிடப்பா

யானைபாதையின் வழியாக
குதுரை போல வருகின்றோம்
ஆயத்தமாக இருந்திடப்பா
அப்பா குமரா பழனியப்பா

மலையில் அதிர்வும் நிறைத்திருக்க
உடம்பும் தானாய் மெய்சிலிர்க்க
அப்பா குமரா பழனியப்பா
மலையினுள் பாதம் பட்டதப்பா

கண்களில் நீரும் நிறைந்ததப்பா
வேண்டிய வரங்கள் மறந்ததப்பா
உந்தன் திருமுகம் பார்க்கயிலே
அப்பா குமரா பழனியப்பா

எத்தனை பிறவி எடுத்தாலும்
உன்னை தோளில் சுமபதற்கு
அப்பா குமரா பழனியப்பா
அந்த வரத்தினை எனக்கு அருளிடப்பா

உந்தன் பிள்ளைகள் நாங்களுமே
பிழைகள் ஏதொன்று செய்திருந்தால்
பொறுத்தே காத்து அருளிடப்பா
அப்பா குமரா பழனியப்பா

காவடி பிள்ளைகள் நாங்களுமே
முத்திரை கொண்டு வந்துள்ளோம்
அப்பா குமரா பழனியப்பா
உன் பஞ்சாமிர்தம் தந்திடப்பா

பழநியில் ஆண்டியும் நீதானே
பழநியில் ராஜனும் நீதானே
இதை என்னவென்று உணர்த்திடப்பா
அப்பா குமரா பழனியப்பா

எத்தனை எத்தனை அபிஷேகம்
எத்தனை எத்தனை அலங்காரம்
அப்பா குமரா பழனியப்பா
உன் பழநி மலையே சொர்கமப்பா

வந்தவழியே திரும்புகிறோம்
வழிகள் நெடுவே வருந்துகிறோம்
பழநிமலையை பிறிந்ததினால்
அப்பா குமரா பழனியப்பா

காரைக்குடிக்குள் வந்துவிட்டோம்
கொப்புடயாள் முன் நின்றுவிட்டோம்
அப்பா குமரா பழனியப்பா
காவடியாத்திரை சுவைத்ததப்பா

வெங்கட் கணேசன்.- நாச்சியாபுரம்