கேன்பெரா ஆறுபடை

அரோகரா

தொந்தியுடன் துதிக்கையுடன் துணைவரு வாயே
வந்துபிழை தனைமாற்றும் வெள்ளைக் கொம்பே
கந்தனையும் யாம்பாடக் கணபதிக் கோவே
சந்தமொழி தந்தருளும் செய்வாய் நீயே

ஆறுமுகம் காட்டிவந்த அன்னை வேலன்
நீறுநெற்றிக் குங்குமத்தில் நேசம் சொல்வான்
நூறுபடை தேவையென்ற நோக்கம் தீரும்
ஆறுபடை அருகிருக்க அதுவே போதும்

பாட்டுசொல்லக் கேட்டிருப்பான் பிள்ளை வேலன்
மீட்டுமிசை தனிலிறங்கி முறுவல் பூப்பான்
நாட்டமுடன் நகரத்தார் நாமும் கேட்க
ஆட்டமுடன் அருள்தரவே அழகாய் வந்தான்

வள்ளியம்மை முகம்பார்க்க வந்தான் தணிகை
புள்ளிமயில் அகவிடவே புரிந்தான் லீலை
அள்ளிவரம் ஈந்திடவே அன்பால் வேண்ட
கிள்ளைமொழி கேட்டுவந்தான் கேன்பெரா தேடி

வருந்தியுடன் அழைத்தனால் வானோர் காக்க
விருப்பமுடன் வேல்பிடித்தான் வேதனை தீர்க்க
அருமைமகள் தெய்வானை அவனுள் பூக்க
திருப்பரங்கிரி காட்சியிங்கெ தினமும் பார்க்க

சிங்காரன் ஓ(ம்)உரைத்தான் சிவனும் கேட்டான்
ஆங்காரம் நா(ம்)அழிக்க அதனுள் சொன்னான்
எங்களுக்காய் சாமிமலை இங்கே தந்தான்
சங்கத்தமிழ் பாவிசைக்கச் சொந்தம் ஆனான்

பழமென்னும் கருவிகொண்டு பாடம் தந்தான்
மழலையுமே அருளுருவாய் மலைமேல் அந்தப்
பழநியுடன் நாங்களுமே பலநாள் நட்பு
அழைத்தவுடன் விரைந்தானே அறுபடை இன்று

சொன்னபடி வென்றிடவே சூரன் தன்னை
சின்னவனும் தேர்ந்ததுவோ செந்தூர் மண்ணை
மின்னுமந்தத் தோற்றமுடன் மயிலில் ஏறி
வன்மங்களைக் களைந்துவந்தான் வரங்கள் கூறி

சோலையிலே சுந்தரனைச் சொந்தம் கொண்டார்
வாலைமயில் தெய்வானை வள்ளிப் பெண்ணார்
மாலைமணக் கோலமுடன் மலைகள் தாண்டி
காலையொளிக் கதிரவன்போல் கேன்பெரா வந்தான்

ஆறிடமும் ஓரிடமாய் ஆக்கும் ஆவல்
கூறிடவே கொக்கரித்துக் கொடியில் சேவல்
வேறிடங்கள் இதுபோலே வாரா தென்று
ஆறுபடை கொண்டானெம் அழகன் இங்கு

உத்திபல கொண்டுநிதம் உறையும் துன்பம்
அத்தனையும் உருகுமுன்னை அடையும் நேரம்
இத்தனைநாள் சோதனைகள் போகும் வண்ணம்
சித்திரமாய் வந்துவிட்டாய் சிரித்தே நீயும்

எட்டிநின்றால் விடுவோமா எங்கள் கந்தா
பட்டதுயர் மாற்றியெங்கள் பக்கம் வந்தாய்
செட்டிமக்கள் குலவிளக்கே செந்தில் வேலா
மெட்டெடுத்துப் பாடிவந்தோம் மேன்மை தாராய்

கல்லல் மீ.மணிகண்டன்