அம்பிகை அழகு தரிசனம்

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


கருவிலே திருவுடைய நல்லறிவா ளர்தமது
கனிவான நட்பு வேண்டும்
காசுபண ஆசைகளில் வேசியரைப் போலாடிக்
கறவாத புத்தி வேண்டும்

அருளுடைய பெரியவர்கள் ஆசிவேண்டும் நெஞ்சில்
அகலாத அன்பு வேண்டும்
ஆதரவில் லாதவரில் நல்லவரைப் பார்த்து நான்
ஆதார மாக வேண்டும்

மருளுடைய மான்போலும் மங்கை ஒரு தேவிஎன்
மனையாட்டியாக வேண்டும்
மானமெனும் ஒன்றிலே மாறாத குறிவைத்து
வாழ்க்கையைக் காக்க வேண்டும்

இருளகல ஒளிவீசும் இறைவனது தேவியே
இவைசேர வேண்டும் எனையே!
இனியதொரு மதுரைநகர் அரசுவீற் றிருக்கின்ற
இளைய மீனாட்சி உமையே! 1

ஆழ்கடலில் போட்டாலும் அக்கினியி லிட்டாலும்
அழியாத மேனி வேண்டும்
அடுநோய்கள் பலகூடி உடல்மீது தொடுத்தாலும்
அலறாத நெஞ்சம் வேண்டும்

ஊழ்வினைகள் ஒன்றாகி உயிர்வாதை செய்தாலும்
ஒளிசிந்தும் இதழ்கள், வேண்டும்
உச்சத்தில் நின்றபடி கீழே விழுந்தாலும்
உலையாத திறமை வேண்டும்

பாழ்வழி யிலேதூங்கிப் பசியோ டிருந்தாலும்
பக்தியில் உறுதி வேண்டும்
பயமாகத் தோன்றுவதை நயமாக மாற்றுகிற
பலமான அறிவு வேண்டும்

சூழ்வதெல்லாம் நீயென்ற துணிவுதா தேவியே
சொக்கனின் அன்பு மனையே!
தொல்மதுரை நகருக்குப் பல்லாண்டு பாடிடும்
தூய மீனாட்சி உமையே 2

முன்னாளில் சென்றதைப் பின்னாளில் நினைக்கின்ற
மூடமை தீர்க்க வருவாய்
மூதறிஞர் சொல்கேட்டும் பேதமைமாறாத
முறைகேடு நீக்க வருவாய்

பொன்னான காலத்தை பாழ்செய்து தூங்காமல்
புகழ்மாலை சூட்ட வருவாய்
பொய்யர்கள் நடுவிலும் நல்லதே நினைக்கின்ற
புத்தியை கொண்டு வருவாய்

மன்னாதி மன்னனும் மண்டியிட்டே என்னை
வணங்கிடும் பெருமை யருள்வாய்
மலை மீது நின்றாலும் அவமான ஆணவ
மண்டாமல் காக்க வருவாய்

தென்னாடும் வடநாடும் ஒருங்கே பணிகின்ற
செவ்வமலை ராஜன் மகளே
திருமதுரை நகராளும் தருமதுரை ராணியே
தெய்வ மீனாட்சி உமையே. 3

ஆடுகின்ற பம்பரம் ஆடல் நிறுத்தாமல்
ஆடுவதும் உன் செய்கையே
அஞ்சுகின்ற நெஞ்சமும் ஆர்பரித் தேன்நின்று
அரசோச்சல் உன் செய் கையே

பாடுகின்ற பாவலன் பல்லாயிரம் பாடல்
பாடுவதும் நின் செய்கையே
பல்லக்கில் ஏறுவதும் செல்வாக்கு மீறுவதும்
பரமாத்ம நின் செய்கையே

கூடுகின்ற கூட்டத்தில் மாலை மரியாதைகள்
கூடுவதும் உன் செய்கையே
குற்றங்களை நீக்கி சுற்றங்கள் ஓன்றாகி
கொஞ்சுவதும் உன் செய்கையே

கோடு நதிமாகடலில் கொள்ளைகளை காட்டிடும்
கோமகனின் அன்பு மயிலே
கொற்றவர்கள் ஆண்ட திருக்கூடல் நகர் ராணியே
கோதை மீனாட்சி உமையே! 4

கல்லாக மரமாக காய்யத்தவர் தம்மையும்
கனியாக மாற்றும் அருளே
கந்தல் உடைகட்டி அம்மா என்பார் வாழ்விலே
கடலாக பொங்கும் அருளே

சொல்லோடு பொருளோடு சுவையோடு விளையாடச்
சுகமாக வந்த தமிழே
தொடைமீது குருநாதன் தனை வைதீச்வரனுக்கும்
சுடராகக நிற்க்கும் அமுதே

கல்லார்க்கும் கற்றார்க்கும் காணார்க்கும் கண்டார்க்கும்
கரையேற்றம் நல்கும் கலையே
கல்யாணம் இல்லாத கன்னிப் பெண் கண்ணீரைக்
காலத்தில் நீக்கும் சிலையே

எல்லார்க்கும் எல்லோமும் எப்போதும் தருகின்ற
ஏகாம்பரன் தேவியே
எழில்பொழியும் காஞ்சிநகர் அரசு புரி ராணியே
ஏதில் காமாட்சி உமையே! 5

மழைக்காலம் குளிர்காலம் வருங்காலம் நிகழ்காலம்
வரிபோட் டனுப்பும் அழகே
மதியென்றும் நிதியென்றும் சதியென்றும் பதியென்றும்
மடல் தந்து கூட்டும் மலரே

அழைத்தாலும் வெறுத்தாலும் அடித்தாலும் அணைத்தாலும்
அன்றாடம் உதவும் கனியே
அலைந்தாலும் தவித்தாலும் அமர்ந்தாலும் படுத்தாலும்
அருகாக நிற்கும் துணையே

ஆழக்கூட வழியற்ற பிள்ளைக்குப் பாலூட்டி
அறந்தந்த தெய்வ நிலையே
அடியார்க்கும் அடியாரை சிறியார்க்கும் சிறியாரை
அணைக்கின்ற அன்பு நிலையே

இழைகின்ற உள்ளத்தை எனக்கும் அளிக்கின்ற
ஏகாம்பரன் தேவியே
எழில் பொழியும் காஞ்சிநகர் அரசுபுரி ராணியே
ஏதில் காமாட்சி உமையே! 6

வீட்டுக்குள் நகைவைத்து பூட்டிவிட்டால் அங்கு
வெளியிலே நீ நிற்கிறாய்
விளக்கிலே நெய்யின்றி விம்முவார் கண்முன்பு
விளக்கமே நீ வைக்கிறாய்

காட்டிலே விட்டாலும் கண்கட்டி வித்தைபோல்
கைதந்து நீ காக்கிறாய்
காணாத பிள்ளையைத் தேடினால் நீவந்து
கருணையோடெனைப் பார்க்கிறாய்

கூட்டிலே இட்டாலும் குயில்முட்டை தன்னைக் காத்தும்
குஞ்சாக நீ ஆகிறாய்
குழியிலே எறும்புக்கும் கோட்டிலே யானைக்கும்
கொள்கையை நீ சொல்கிறாய்

ஏட்டிலே படித்தாலும் எப்போதும் இனிக்கின்ற
ஏகாம்பரன் தேவியே
எழில்பொழியும் காஞ்சிநகர் அரசுபுரி ராணியே
ஏதில் காமாட்சியே உமையே! 7

ஊமைக்குழந்தைக்கு நின் மகன் வேல்கொண்டு
ஓ மென்று எழுதவில்லையோ
உழல்கின்ற பாண்டவர் பாரதப் போருக்கு
உன் அண்ணன் உதவவில்லையோ

காமனை கண்ணாலும் திரிபுரம் சிரிப்பாலும்
கணவனே எரிக்க வில்லையோ
காட்டிலும் மேட்டிலும் கரையிலும் நின் பிள்ளை
கவலைகள் தீர்க்கவில்லையோ

சாமத்தில் உன்நாதன் சிவனுக்கு எனைப்பற்றி
சரியாக சொல்லவில்லையோ
சரிகமவென்றே பாடி பார்க்கிறேன் நீ இன்னும்
சங்கீதமாக விலையோ

எமன் நெருங்காமல் என் வாழ்வு காக்கின்ற
ஏகாம்பரன் தேவியே
எழில்பொழியும் காஞ்சிநகர் அரசுபுரி ராணியே
ஏதில் காமாட்சியே உமையே! 8

நீராடை நெய்பூசி புத்தாடைகள் கட்டி
நேர்வந்த கன்னியரெல்லாம்
நிழல்கண்டு துணை கண்டு மகவோடு பொருள் கண்டு
நிலையான வாழ்வுமடைவார்

போராடிப் போராடிப் பலதுன்பம் பெற்றோர்கள்
புகழார்ந் அமைதிய டைவார்
புண்ணாகி மரணத்தைப் கண்ணாக நினைப்போர்கள்
புதுவாழ்வு தாமுமடைவார்

வாராத படியேறி வந்தோர்கள் எல்லோரும்
வளமான செல்வமடைவார்
வயதான முதியோரும் ஜெயதேவி உனைக்கான
மாறாத இளமைய டைவார்

எராளர் குரலோடு எழில் நடன மிடுகின்ற
இனிய நடராஜன் துணையே
இதமுடைய பொன்னிநதி கரைபுரளும் தில்லைநகர்
இன்ப சிவகாமி உமையே! 9

தந்தைஎன் றேநாதன் தாளங்கள் போடுவான்
தத்தைகள் ஓடிவருவார்
தரதரவென்றே மன்னன் தாவிக் குதிக்கையில்
தருவார்கள் பக்கம் வருவார்

தித்தைஎன் றேவள்ளல் ஆடும் தளத்தில்
தித்திக்கும் மொழிபேசுவார்
திகதீம்என் றேதேவன் திரும்பக் குதிப்பனேல்
தீயோர்கள் ஓடிவிடுவார்

வித்தைகள் பலகற்றும் சிற்சபை ஈசனும்
விடையேறும் போது உன்னை
விட்டும் விடாமலும் உன்னை பிடிக்கின்றான்
விடலாமோ நீயும் என்னை

நத்தையும் நடமாடக் கால்தூக்கி நடனமிடும்
நடராசன் கொண்ட துணையே
நதிபெருகும் தில்லைநகர் அரசுபுரி ராணியே
நங்கைசிவ காமி உமையே! 10

கருவிலே நான் தூங்கி காலங் கழிக்கையில்
காற்றாக வந்ததவள் நீ
கையிலே பிள்ளையாய் பையக்கிடக்கையில்
கனிந்த பாலானவள் நீ

உருவிலே பெரிதாகிப் பள்ளிக்கு செல்கையில்
உடன் வந்த கல்வியும் நீ
உறவிலே ஒன்றாகி திருமணம் நடக்கையில்
ஒளிமாலை ஆனவள் நீ

திருவோடு பிள்ளை என்மனையிற் பிறக்கையில்
சீர் தந்த ஆட்சியும் நீ
தேசங்கள் யாவிலும் தொழில்செய்யச் செல்கையில்
செல்வமாய் நின்றவள் நீ

குருவான குமரனின் அறிவான அன்னையே
கோல நடராசன் துணையே
கோவிலிடை அந்தணர்கள் கூடிவரும் தில்லையில்
கொஞ்சும் சிவகாமி உமையே! 11

பட்டாடை கட்டி உன்னைப்பார்க்கின்ற வேளையில்
பத்தினியை நான் பார்க்கிறேன்
பள்ளக்கில் எறிநீ ஊர்முழுதும் செல்கையில்
பைரவியை நான் பார்க்கிறேன்

எட்டாத நேர்நடுவில் உன்னை வைக்கையில்
இன்தமிழை நான் காண்கிறேன்
எங்கெங்கு போயினும் எதனை நான் காண்கினும்
அங்கெல்லாம் உனைக் காண்கின்றேன்

தொட்டார்க்கு தாயாக தொடர்வாருக்கு சேயாக
தோகை நீ ஆனதென்ன
சோழகுலம் ஆளும்வரை பலகாலம் நீ அங்கு
துணையாய் இருந்ததென்ன

கொட்டாத மேளங்கள் கொட்டுகிற கூத்தாடி
கோல நடராசன் துணையே
கொடிவளரும் தில்லைநகர் நடுவிலொரு திருக்கோயில்
கொண்ட சிவகாமி உமையே! 12

ஆசையுடன் ஒரு நூறுபாடலுனக் கணிவித்த
அபிராம பட்டருக்கு
அமாவாசை யன்றந்தநிலவுவரச் செய்தாயே
அதுபோதும் பக்தருக்கு

தாசி எனச் சொன்னாலும் தகைமை நிலைமாறாத
தங்க மயில் மாதவிக்கு
தங்க இடம் தந்தாயே தனியுறவு கொண்டாயே
சாட்சியிது காதலுக்கு

பூசுவது வெண்ணீறு பூணுவது திலகமென
பூசைசெய்யும் பெண்களுக்குப்
போனபிறப் யென்றாலும் வந்தபிறப் யென்றாலும்
புகழ் தந்தாய் கண்களுக்கு

தேசுலவும் சோழர்களின் காலம் முதல் இன்று வரை
தெய்வநிலை பெற்ற சிலையே
திருமுகமும் குங்குமமும் ஒருசேர ஓளிவீசும்
திருக்கடவூர் அபிராமியே! 13

காவிரிப்பூம் பட்டினத்து வாணிகரைத் தாலாட்டி
காத்தது உன் கண்களி லையோ
கல்லிருக்கும் சோலைகளின் உள்ளிருந்து குலமாதர்
காவல்தரும் தெய்வமில்லையோ

கோவலனைக் கூடலிலே கொன்றவுடன் கண்ணகியின்
கூட்டினுள் நீ செல்லவில்லையோ
கொற்றவரைப் பத்தினியைப் பார்ப்பணரை விட்டுவிட்டு
மற்றவரைக் கொல்ல வில்லையோ

ஆவலர்க்கு நல்லதமிழ் படியளந்து தந்துவிட்டு
பாடல் நீ பெற்ற திலையோ
பாலோடு சந்தனமும் பரிசாக வைத்தவர்க்கு
பாவை நீ காவலிலையோ

பூவிரிய வண்டுவர நின்முகத்தைப் பார்த்தவுடன்
பூசை செய்ய வைத்த மயிலே
போதவிழும் திருக்கடவூர் தேவர்நக ராகவந்த
பொன்மேனி அபிராமியே! 14

திருமகளும் கலைமகளும் அலைமகளும் உள்ள இடம்
திருக்கடவூர் சங்கமல்லவோ
சிவபெருமான் திருமாலும் பிரம்மாவும் வந்த இடம்
திருக்கோவில் மேடையல்லவோ

பருவமுயர் பெண்களோடு பலபெற்ற தாய்மாரும்
பார்ப்பது உன்வடிவமல்லவோ
பாவிகளும் வந்தவுடன் புண்ணியர்கள் ஆகுமிடம்
பாவை உன் சோலையல்லவோ

ஒருபிறவி மறுபிறவி எழுபிறவி வந்தாலும்
உன்னையே பணிய அருள்வாய்
உலகமெனை அறியாத புல்லாகிக்கிடந்தாலும்
உன் மனம் முளைக்க அருள்வாய்

அருள்வளர மருள் அகல ஆதிக்கம் செய்கின்ற
அமிர்த கடேசந்தான் துணையே
அழகு திருக்கடவூரில் பழகு தமிழ் உரையாடும்
அன்பு மயில் அபிராமியே! 15

ஏழுலகம் முடிசூட்ட கவிராஜ சிங்கமென
எனை மாற்ற வேண்டும் நீயே
எதிரொருவர் இல்லாது புதுமைகளை நான் செய்ய
எற்றமுற வேண்டும் தாயே

வாழும்வரை நலமாக மற்றோர்குத் துணையாக
வாழ்விக்க வேண்டும் நீயே
வந்தாலும் போனாலும் வாடாமல் உள்ளத்தை
வளமாக்க வேண்டும் தாயே

வீழுவது உன்பாதம் விளங்குவது வேதமென
விதிவைக்க வேண்டும் நீயே
விளையாட்டு பிள்ளைஎனை வழிகாட்டி அழைத்தேகி
வினைதீர்க்க வேண்டும் தாயே

சூழுமொரு சோலையிடை அமுதீசர் பாகத்தில்
துணையாக நிற்கும் மயிலே
சோலை திருக்கடவூரில் ஆதிஉமை வடிவாகச்
சுடர்வீசும் அபிராமியே! 16

காலமகள் விளையாடும் நீலமணிக் கடல்மீது
கங்கை நதி சேரும் போது
கண்ணெதிரில் உன் பிள்ளை உன்னோடு சேராமல்
கண்ணீரில் நிற்பதேது

ஆலமர நிழலாக ஆதரவு தந்தாலும்
அல்லலுறும் எனது வாழ்வு
அம்மாவுன் திருவடியை அடைந்தாலே அமைதி வரும்
அடுத்ததொரு பிறவி ஏது

மாலவனின் தங்கைக்கு வானகமும் மண்ணகமும்
மலர் பூக்கும் சோலையல்லவோ
வரவேண்டும் உனதுமடல் தரவேண்டும் உன்கருணை
வானக மிலாத நிலவே

கோலமிகு விசுவேசன் காசிநகர் தன்னிலே
கொண்டாடும் அன்பு மயிலே
குடையளவு காணக் கொடையளந்து கொண்டுவா
கோதை விசாலாட்சி உமையே! 17

ஆத்தாளுன் சந்நிதியை அறியாத பிள்ளைநான்
ஆனாலும் கவிதை சொன்னேன்
ஆடிவரும் கங்கையில் மூழ்காத காக்கை நான்
ஆனாலும் பேறுபெற்றேன்

காத்தாலும் மங்களக் கையோடு முகத்தையும்
கற்பனையில் காணுகின்றேன்
கட்டாயம் உன்னருளைப் பெற்றேநான் வாழ்கிறேன்
காலத்தில் அங்கு வருவேன்

சேர்த்தாளும் அன்னையே சேய் செய்த பாவத்தை
சிறிதும் நீ மதிக்க வேண்டாம்
சிற்றறிவை ஆசானின் பேரறிவு காப்பதுவும்
தேவி நீ மறந்த ஒன்றா

பூந்தாமரைப்போல் பொங்கும்சின நாகத்தைப்
புரிந்தவன் கலந்த மயிலே
புகழ்பெருகு காசிநகர் தகவுடைய தேவியே
பூவை விசாலாட்சி உமையே! 18

மானிடம் பெரிதன்று பூமியில் பிறந்த நான்
மதிகெட்டுச் சொன்னதுண்டு
மண்ணிலே புழுபூச்சி தன்னைவிட ஈனமாய்
வாழ்க்கையைப் பார்த்ததுண்டு

ஊணுடல் மண்கேட்க உயிர்தனை நீ கேட்டு
ஊடாடி நிற்ப துண்டு
ஓங்கி வளர்மரங்களும் பாம்புடன் வாழ்வதை
உளம் நொந்து பார்ப்பதுண்டு

நானிடர்பட்டபின் மானிடப் பிறவியை
நலமிலாப் பிறவி என்று
நன்றாகக் காண்கிறேன் மன்றாடி நிற்கிறேன்
நாடாதோசொர்க்க மென்று

தேனிடம் மொழிவாங்கி விசுவேசன் மடியிலே
சிந்திடும் அன்பு மயிலே
சிறுகூடற்பட்டி வரை மறுபிறவி எடுத்தாயென்
தெய்வ விசாலாட்சி உமையே! 19

உள்ள நாள் வரையிலே நன்மையும் தீமையும்
நன்றென்றே எண்ணும் வரம்தா
உறவோடு பகையையும் இரவோடு பகலையும்
ஒருமித்துப் பார்க்க் வரம் தா

வெள்ளம்போல் செல்வமும் வறுமையும் சமமென்று
விளையாடும் வாழ்க்கை வரம் தா
விதியென்றும் வலியதே மதியென்றும் சிறியதே
வினை தீர்த்து நல்ல துணை தா

பள்ளம் போல் இகழையும் மலைபோல் புகழையும்
பந்தாடும் வீர நிலைதா
எங்கும் பசியையும் பலசுவை உணவையும்
பதறாமல் கொள்ள வரம் தா

அள்ளியிடும் கையிலும் அர்த்த சாமத்திலும்
அருள் செய்யும் அன்பு மயிலே
அறமுடைய வணிகர் குலம் சிலைவைத்த தேவியே
அழகு விசாலாட்சி உமையே! 20

-கவிஞர் கண்ணதாசன்