அய்யன் வாரார், கருப்பர் வாரார்

அய்யன் வாரார் மெய்யன் வாரார்-அழகர்
கோயில் மலை இறங்கிக் கருப்பர் வாரார்-எங்கள் கருப்பர் வாரார்.


வல்லவேட்டிப் பட்டுடுத்தி வரிசைமணி நூலணிந்து
அண்ணன் வாரார்-ஆகாயக் கருப்பர் வாரார்(அய்யன்)

வீச்சரிவாள் கையிலேந்தி வேகமான குதிரைஏறி
வள்ளல் வாரார்-ஆவடிக் கருப்பர் வாரார்(அய்யன்)

பூச்சொரியும் பார்வையுடன் புகழ்விரிக்கும் சேவையுடன்
மன்னன் வாரார்-தொட்டியக் கருப்பர் வாரார்(அய்யன்)

முறுக்குமீசை துடித்திருக்க முந்திவரும் அடியெடுத்து
அய்யன் வாரார்-வையக் கருப்பர் வாரார்(அய்யன்)

சாம்பிராணி வாசத்திலே ஜவ்வாதுப் பொட்டிட்டு
செல்வர் வாரார்-சோணைக் கருப்பர் வாரார்(அய்யன்)

செங்கரையில் மேலேநின்று செல்வமெலாம் தந்துநின்று
முன்னே வாரார்-முன்னோடிக் கருப்பர் வாரார்(அய்யன்)

-அருளிசைமணி கண்டனூர் ஓ. ப. ரெங்கநாதன்