உமையவள் பாமாலை

இயற்றியவர் அமரர் அருட்கவி கு.செ.இராமசாமி


ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


காப்பு

அண்டங்கள் ஏழினோ டேழும் அப் பாலுமாய்
ஆன எம் ஞான தேவா!
அறுகுடன் தும்பையும் ஆத்தியும் கொன்றையும்
அணிசெய்யும் அழகு மார்பா

எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின் அச்(சு)
இற்றிடச் செய்த வீரா
இலகு புகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்
எழுதிடும் கவிதை நேசா!

தண்டையொடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவே
சந்தடை கொள்ளும் பாதா!
சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே
தண்ணளி புரிந்த ஈசா

தெண்டிரை சூழுலகில் தேவிராஜேஸ்வரியின்
தெய்வமாக் கருணை பாட
சித்தமிசை குடி கொண்ட தத்துவ விநாயகா
திருவருள் தந்து நீகா!

சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்
திகழ வருகதிரின் உதயம்
தேசு மிகு மாணிக்கம், திரு ஏறு கமலம் அச்
செங்கமலம் அஞ்சு பவழம்

மந்தாரம் மழை நாளில் வரும் இந்தர கோபம் அவ்
வண்டூ ரும் மலையில் நறவம்
மான்மதம், செங்குருதி போன்மலரும் மாதுளம்
மாதுளம் சிதறும் முத்தம்

செந்தீயின் வண்ணம் என வேசொல்லு(ம்) மேனியும்
செப்பரிய அழகு வடிவும்
சிங்கா தனத்திலும் சிவனார் மனத்திலும்
சீர் கொண்டிலங்கும் எனினும்

எந்தாய்நின் பேர் சொல்லும் ஏழையேன் அறிவிலும்
என்றென்றும் திகழ அருள்வாய்!
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே! 1

தேறாத கவிஎனினும் மாறாத காதலால்
திரு முன்பு சாற்றுகின்றேன்!
சிந்தை அணு ஒவ்வொன்றும் தேவி உனதே ஆகச்
செய்ய தமிழ் பாடுகின்றேன்!

ஆறாத துயருக்கும் அகலாத கவலைக்கும்
ஆரை நான் நொந்து கொள்வேன்
அறியாது பிழை செய்து சரியாக வதைபட்ட
அவலத்தை எங்கு சொல்வேன்

நீறாக வேநிருதர் புரமூன்றும் செற்ற உனை
நெஞ்சாரப் போற்றுகின்றேன்
நெற்றிவிழியால் எனது குற்ற மலை பொடியாக
நின்னருளை வேண்டுகிறேன்!

ஈறேதும் இல்லாத இன்பவடிவாக என்
இதயதள மீதும் ஒளிர்வாய்!
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 2

சீரார் பெருந்துறையில் சிவயோக நாயகி
சிவகாமி தில்லை மன்றில்
தென்குமரி பகவதி திருவானைக்காவினில்
திகழும் அகிலாண்டேஸ்வரி

காரார் மதிற்கச்சி காமாட்சி, அங்கயற்
கண்ணி செந்தமிழ் மதுரையில்
கங்கைவள நாடுடைய நங்கை விசாலாட்சி
காளிவங் காள மண்ணில்

தாரார்சிவன் தோளும் தமிழும் விழைபவள்
சமயபுரம் அதனில் மாரி
தட்டாமல் கடவூரில் பட்டருக்கருள் செய்த
தையல் அபிராமவல்லி

ஏரார் மழைக்கண்ணி எண்ணரிய நின்கோலம்
யாவும் எமை ஆள வலவோ
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 3

மாதவன், சீதரன் மதுசூதனன் துளசி
மாலை மார்பன் கேசவன்
வைகுந்தன், அச்சுதன், மலைமேலும் அலைமேலும்
வாழ்கின்ற மறைநாயகன்

தாதவிழ் மலர்க்கூந்தல் ஜானகிமணவாளன்
சனார்த்தணன் தேவதேவன்
சாரங்கன், நாரணன், தாமோதரன் கோதை
தலைவன், ஆழ்வார்கள் நேசன்

மேதினி அளந்ததிரி விக்(கி)ரமன், திருமகள்
விழைகின்ற பதுமநாபன்
வேறு வேறான பெயர் நூறுநூ றாய்விரியும்
மேகவண்ணன் தங்கையே!

ஈதென வரைந்து யாம் ஓதுதற் கரியநின்
இசைபாட மொழியேது காண்
இறைவினைஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே. 4

மூவர்க்கும் தேவர்க்கும் யாவர்க்கும் மேலான
முதல்வி, முக்கண்ணி போற்றி
முறையாகத் தொழுவோர்க்குத் துணையாகி வழிகாட்டும்
முத்தமிழ்ச்செல்வி போற்றி

நாவுக்கும் நெஞ்சுக்கும் நலம்தந்(து) இனிக்கின்ற
நாதாந்த சக்தி போற்றி
நான் என்றும் எனதென்றும் நலியாத நிலைசேர்க்கும்
ஞானப் பூங்கோதை போற்றி

பாவுக்கும் பூவுக்கும் பாதம் பெயர்த்தருளும்
பாண்டிமாதேவி போற்றி
பணிவார்தம் துயரோடு பிணியாவும் பொடியாக்கும்
பரமகல் யாணி போற்றி

ஏவல் கொண்டுலகு பல காவல்செய், அன்னைநின்
இணையடிகள் போற்றி, போற்றி
இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 5

பொன்னும் நீநான்தேடும் பொருளும் நீ புகழும் நீ
போகங்கள் யாவும் நீயே
புறமும் நீ அகமும் நீ புவியெங்கும் நான் காணும்
பொலிவு நீ போதம் நீயே

முன்னும் நீ நடுவும் நீ முடிவும் நீ முடிவுலா
முழுமை நீ ஞானம் நீயே
முதுமை நீ இளமை நீ மோகம் நீ தாகம் நீ
மோனம் நீ கானம் நீயே

மன்னும்நீ தான் எனது வாழ்வென்று வளம் என்று
மனமுருகி நின்றதெல்லாம்
வஞ்சமோ? எனதுயர் கொஞ்சமோ? இவ்வாறு
மறப்பதுவும் ஒரு நெஞ்சமோ

இன்னும் நீ சற்றும் இரங்காதிருந்திடில்
என்னுயிர் இனி மிஞ்சுமோ?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயலை வாழும் உமையே 6

ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரிலே
அழகாக வீற்றிருப்பாய்
அங்குசம் பாசம் கரும்பு வில் ஐங்கனை
அங்கையில் ஏற்றிருப்பாய்

வேயின் குழல் முழவு வீணைநாத ஸ்வரம்
மேவுமிசை கேட்டிருப்பாய்
விறலியர் நடம்புரிய வேறு வேறான கலை
விந்தைகள் நயந்திருப்பாய்

ஞாயிறு முதற் பிரமன் நாராயணன் துதித்திடவும்
ஞாலமுழு தாண்டி ருப்பாய்
நாடிவரும் அன்பர்க்குக் கோடிநலம் தந்துலகில்
நலிவின்றிக் காத்திருப்பாய்

ஈயென இரந்துன்னை வேண்டவும் வேண்டுமோ
எனையும் நீ ஆதரிப்பாய்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 7

மாரியாய் மேரியாய் முகமது நபிக்கருள
வந்த ஒரு மாசக்தியாய்
மனவாக் கிறந்ததிருவருளாய் மதங்கள் தோறும்
வாழ்கின்ற தெய்வம் நீயே

ஓரிடம் ஒருகுணம் ஒருநிலை ஒருருவம்
ஒருபெயர் ஒருவிகற்பம்
ஒன்றுமில்லாத படி ஒவ்வொன்றும் தானாகி
உணர்வரிய பிரமம் நீயே

ஆரியம் திராவிடம் ஆங்கிலம் சீனமென
அமைகின்ற மொழிகள் நீயே
ஆமென்றும் இல்லையென அறுதியுடன் வாதித்தும்
அடைவரிய எல்லை நீயே

யாரென்ன சொன்னாலும் யான் உன்னை ஒரு நாளும்
ஐயுற்ற தில்லை தாயே
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 8

துயிலெலும் வேளையில் சுவைநீர் அருந்துகையில்
துறைநீர் படிந்தெழுகையில்
தொழுகையில் பலபணியும் புரிகையில் இன்பமொடு
துன்பங்கள் எதிர்வருகையில்

வயிராற உண்ணுகையில் மாதரார் தோட்புறம்
மனமுருகி உயிர்தோய் கையில்
மக்கள் மெய் தீண்டுகையில் மாறாத காதலொடு
வண்டமிழ்ச் சுவை ஆய்கையில்

அயலெவரும் அறியாமல் அன்னையுனை வழிபடும்
ஆசைமகன் நானில்லையா
ஆசைமகன் தருகின்ற வாசமலர் மாலைகள்
அத்தனையும் தேனில்லையா?

இயலும்வரை பாடியும் எடுத்தளிக்காமல் நீ
இருப்பதொரு பழியில்லையா?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 9

காற்றைப் படைத்தவள் நீயென்ற போதிலும்
கவரிகள் வீசுகின்றோம்
கனலும்உன் வடிவெனிலும் கற்பூர தீபங்கள்
கமழ்தூபம் காட்டுகின்றோம்

ஆற்றையும் கடலையும் அருளியநின் மேனிக்கும்
அபிடேக நீர்சு மந்தோம்
அங்கிங் கெனாதுவெளி எங்குமுள நீ உறைய
ஆங்காங்கு கோயில் செய்தோம்

போற்றரிய நின்வடிவைப் பொன்னிலும் கல்லிலும்
பூசித்து வாழ்த்துகின்றோம்
புவிமீது நீ தந்த பொருளன்றி வேறொன்றைப்
போய்தேடி எங்கு பெறுவோம்

ஏற்றருள வேண்டும் என இதயத்தை எம் அன்பை
இணைமலர்த் தாளில் வைத்தோம்
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 10

என்னகவி பாடினால் உன் மனது மாறுமோ
என்மீதும் கருணை வருமோ
எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்
எளிதாக நிறைவேறுமோ

சொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம்
தூய்மைபெற வழியுமுண்டோ?
சோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம்
சொல்லுபவர் யாருமிலையோ?

சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்
செய்துவரும் மலரல்லவோ?
செப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல
சேய்மழலை மொழியல்லவோ?

இன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில்
இளகாத தாயுமுண்டோ?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 11

நெற்றியில் நீ தந்த குங்குமம் இருக்கையில்
நெஞ்சினில் மயக்க மில்லை
நேரான சிந்தையோடு போராட வந்தபின்
நினைவினில் குழப்ப மில்லை

முற்றுமுனை நம்பியே முறையோடு மேற்கொள்ளும்
முயற்சியில் தயக்க மில்லை
மோகவயமாக உனைத் தாகமுடன் பாடிவரும்
முத்தமிழ் சலிப்பதில்லை

உற்றபகை யாரெனிலும் உன் துணை கிடைத்தபின்
ஓய்வுற நினைப்பதில்லை
உலகமோ ரேழுமே எதிராக நின்றாலும்
உண்மையை மறைப்பதில்லை
இற்றதினி அச்சம் இடர் கவலை நோய்பகைகள்
இன்னல்கள் இல்லை இல்லை
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 12

ஓமெனும் மந்திரத்துட் பொருள் ஆகின்ற
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி
ஊழிதொறும் ஊழிதொறும் உயர் அறம் காக்கின்ற
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி

நாமமும் உருவமும் பலவாகி உலகாளும்
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி
ஞானமும் இச்சையும் கிரியையும் தானான
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி

சேமமும் இன்பமும் சித்தியும் உதவிடும்
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி
ஸ்ரீ சக்ர நிலையத்தில் சிவசக்தி வடிவான
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி

யாமும்எம் கல்வியும் யாவும் உன் அடைக்கலம்
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே 13

வாழ்த்து
பொலிகஇவ் வையகம் பொலிக நெடு வானகம்
போயொழிக துயரமெல்லாம்
புதியசொல் புதியபொருள் புதிய சுவை புதியஇசை
புலரட்டும் உலகமெல்லாம்

மலிகவளம் வளர்கநலம் வாழ்கவே நல்லறம்
மயக்கங்கள் யாவும்தீர்க!
மங்கல மடைந்தையர் மனையறம் நனிதழைக
மடமைகள் வீழ்க! வீழ்க!!

கலிகெடுக எங்கெங்கும் கருணை அரசோச்சுக
கயமைகள் நிலம்பு தைக!
கலைமகள் விளக்கமாய் திருமகள் பெருக்கமாய்க்
காலங்கள் அமுதாகுக

இலம்பா(டு) ஒன்றில்லாமல் யாவர்க்கும் யாவும்இனி
எய்தநீ ஆணைதருக
இறைவிஎனை ஆண்டரும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே.

வரம்
தேவாதி தேவிநின் தெய்வமாக் கருணையால்
தீராத நோய்கள் தீரும்
செல்வமும் செல்வாக்கும் செருமுனையில் வெற்றியும்
சீர்நிலை பேறும் சேரும்

பூவுலகில் நிலையான புகழ்பெருகும் அறிவில்ஒரு
புதிய ஒளிதான் பிறக்கும்
பூண் ஆள் இடம் துணை புத்திரர் பசுக்கள் எனும்
பொலிவு வரும் உயிர் தழைக்கும்

பாவங்கள் ஏழ்மைகள் பழவினைகள் எனும் இவைகள்
பனிபோல் அகன்றுநீங்கும்
பத்தியொடு சொல்வார்க்குச் சித்திகள் கைகூடும்
பாரின் மிசை அமைதி ஓங்கும்

யாவும் கடந்தபே ரின்பநிலை கிட்டும்என
இசைபாடி வாழ்த்து கின்றோம்
இறைவினை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே.