எங்கள் குல விடிவிளக்கே

சரஹணபவனேசரஹணபவனே
சரஹணபவனேசண்முகனே
சரஹணபவனேசரஹணபவனே
சரஹணபவனேசண்முகனே


திருமகள் கலைமகள் மலைமகள் வடிவே
திருப்பரங் குன்றின் வடிவேலா
திருமால் நான்முகன் பரமசிவமானாய்
திருநிறை வாழ்வின் கதிர்வேலா!
பெருமையின் வடிவேபெருந்தவத் தணியே
பெருமான் முருகா முருகேசா
சரஹணபவனே! சங்கரிமகனே!!
சற்குரு ஜயஜய சண்முகனே!!!

செந்திற் கரையினிற் சமரிட்டு வென்றாய்
செந்தமிழ் மகனே வடிவேலா!
விந்தைகள் செய்தாய்விரி தமிழ்தந்தாய்
விண்ணவர் விளக்கே கதிர்வேலா!
கந்தனே கடம்பனேகருணை செய்குகனே
எந்தையே எங்கள் முருகேசா!
சரஹணபவனே சங்கரிமகனே!!
சற்குரு ஜயஜய சண்முகனே!!!

ஆவினன்குடியினில் ஆண்டியாய் நின்றாய்
ஆனந்த மயனே வடிவேலா
கூவிடும்கோழிக் கொடியுடையோனே
கூர்தவத் தொளியே கதிர்வேலா!
தாவிய துயரைத்தடி கொண்டுதாக்கித்
தாயெனக் காத்தாய் முருகேசா!
சரஹணபவனே! சங்கரிமகனே!
சற்குரு ஜயஜய சண்முகனே!!

ஏரகம் வந்தாய் ஏழிசை மணியே
ஏகனேயானாய் வடிவேலா!
தாரகன் சிங்கனைத்தானெனும் சூரனைத்
தாக்கி நீ வென்றாய் கதிர்வேலா!
தாரகப்பொருளே! தார்முகவடிவே!
தாபங்கள்தீர்த்த முருகேசா!
சரஹணபவனே! சங்கரிமகனே!
சற்குரு ஜயஜய சண்முகனே!!

குன்றுதோராடிய குமரனே!குகனே
குறைகளைத் தீர்த்தருள் வடிவேலா!
என்றுமே உன்னடிஎங்கணும் பணிந்திட
எனக்கருள் செய்வாய் கதிர்வேலா!
நன்று நீ சொல்வாய் நன்மையாய் வருவாய்
நலந்தரு நாயகா முருகேசா!
சரஹணபவனே சங்கரிமகனே
சற்குரு ஜயஜய சண்முகனே!!!

பழமுதிர்ச் சோலை மலையுறைவோனே
பண்டிதர்பண்டித வடிவேலா!
குழம்பிடும் உள்ளக்கவலைகள் தீர்த்துக்
குறைவில்லை என்றாய் கதிர்வேலா!
பழவினை இல்லைபயமெதும் இல்லை
பக்கலில் நின்றாய் முருகேசா!
சரஹணபவனே சங்கரிமகனே
சற்குரு ஜயஜயசண்முகனே!!

பற்பல தலங்களில்பண்பொடு இருந்தாய்
பகையிருள் தீர்த்த வடிவேலா!
கற்பவர் உள்ளம்கனிந்திட இனித்தாய்
கண்மணி கனிமொழிக் கதிர்வேலா!!
அற்புததேவா அருகினில் வாவா
அறுமுக அதிசய முருகேசா!
சரஹணபவனே சங்கரிமகனே
சற்குரு ஜயஜய சண்முகனே!!!

ஜய ஜய முருகாகுககாங்கேயா
ஜய ஜய பாலாவடிவேலா
ஜய ஜய முருகாசுப்ரமண்யா
ஜய ஜய கந்தாகதிர்வேலா!
ஜய ஜய முருகாசிவனருட்குமரா
ஜய ஜயமங்களமுருகேசா!
சரஹணபவனே சங்கரிமகனே
சற்குருஜயஜய சண்முகனே!!!

-துர்க்கைச்சித்தர்