எண்ணிட எண்ணிட ஆனந்தம்

சாமியே முருகையா
சாமியே சரணம் முருகையா

எனதென எனதென எத்தனையோ
பல எண்ணங்கள் தோன்றி மறைந்திடினும்
உனதென யாவையும் உணர்கையிலே
தான் உண்மையில் நிம்மதி உண்டாகும்
சினமதை நீக்கி இனிமையை நல்கும்
சக்தியின் மைந்தா முருகேசா!
மனதினில் உன்னை நித்தமும் வைத்து
எண்ணிட எண்ணிட ஆனந்தம்

அந்தமும் ஆதியும் யாவையு மான
உனை வந்தடைந்திட மனிதர்குலம்
சொந்தமும் பந்தமும் யாவையும் நீக்கி
துறந்திட வேண்டும் எனுமுலகம்
எந்தன துறவுகள் அத்தனைப் பேரும்
உந்தன் வடிவே என்பதனை
சிந்தையில் வைத்தால் சீருடன் ஊறும்
எண்ணங்கள் எல்லாம் ஆனந்தம்

சூரிய னாக வலம்வரும் நீயோ
பூமியில் உயிர்களுக் காதாரம்
பாரினில் நானோ பனித்துளி பலவுள்
ஒன்றாய் வாழ்வது சிலகாலம்
பெருமிதத் தோடே ஒளிவிட மிளிர்வதும்
பேரருள் புரிவோய் உன்னாலே
உருகியே ஒருநாள் மறைந்தே போவதும்
உன்னால் என்பதில் ஆனந்தம்

கற்றவை யெல்லாம் கணக்கினில்
வைத்தால் சிறுகை மண்ணள வெனவாகும்
முற்றிலும் உணரா உண்மைகள் மட்டும்
எண்ணில் அடங்கா ஏராளம்
உற்றதை வைத்து உன்னையே நம்பி
பயமதை நீக்கி வாழ்கின்றேன்
மற்றவைக் கெல்லாம் நீதுணை
என்பதை மனதினில் வைத்தால் ஆனந்தம்

காரண மேபல நானறி யாமல்
என்மன துள்நீ வைத்திட்டாய்
காரிய மாக கடமைகள் பலவும்
எனக்கே என்று விதித்திட்டாய்
பூரண பலனை நன்கறிந் தேநீ
காரணம் வைத்திடும் விளையாட்டில்
நேரிடும் முடிவுகள் தனைநினை யாமல்
கடன்செய் திருப்பதில் ஆனந்தம்

நாற்பரி மாண வெளியினில் நானோ
நூலாய் ஓடும் ஒருகோடு
பார்ப்பவர் பார்வையில் நன்மையும் தீமையும்
தெரிவது வெல்லாம் உன்பாடு
காப்பவன் நீயே அழிப்பவன் நீயே
என்செய லெல்லாம் நீயேதான்
தோற்பதும் வெல்வதும் உனையே சேர்ந்திடும்
என்பதை நினைக்கையில் ஆனந்தம்

லெ. சுப்பிரமணியன், தேவகோட்டை. ஜனவரி 2012.