எதிரிலே தோன்றி வருவாய்.

கார் வளரும் மேனியாய் கருப்பண்ண சாமியே
கதிவளரும் குதிரையில் கைவளரும் வாளுடன்
கண் எதிரில் தோன்றி வருக

தேர் வளரும் கோவிலாய் திசை வளரும் புகழனே
தெரிந்தவரை நல்லதே செய்துவரும் எங்களைத்
தேடியே ஓடி வருக

மார்வளரும் மாலையாய் மனை வளரும் தெய்வமே
மடைவளரும் வெள்ளமாய் மழை பொழியும் மேகமாய்
மலையினை நோக்கி வருக

சீர்வளரும் காலிலே சேர்திடும் சதங்கைகள்
செககண செககணச் செவிபட முழங்கவே
தெருவிலே ஓடி வருக

தார் வளரும் மெய்யனே தமிழ் வளரும் ஐய்யனே
தண்டையுடன் கிண்கினி தத்தினத்தோம் என்னவே
சத்தியம் முழங்க வருக

பேர்வளரும் வீரனே புகழ் வளரும் கருப்பனே
புகை வளரும் தூபமும் பூவளரும் பூசையும்
புரிந்துமே எழுந்து வருக

ஏர்வளரும் அழகனே எங்கள் குல தெய்வமே
எப்பிழை செய்யினும் அப்பிழை நீக்கவே
எதிரிலே தோன்றி வருவாய்.