கந்தப் பலகாரம்

வேல்வேல் முருகா வேல்முருகா-வடி
வேல்வேல் முருகா வேல்முருகா
வேல்வேல் முருகா வேல்முருகா-வடி
வேல்வேல் முருகா வேல்முருகா


ஆண்டிமேல் ஆசையாய் ஓடையிலே-நல்ல
ஆகாரம் சேருது கூடையிலே
பக்தியாம் பசிவெறி போதையிலே-இந்த
பலகாரம் போதுமோ பாதையிலே

கந்தனின் பூமுகம் மாவுருண்டை-அவன்
காலடித் தண்டையோ முறுக்குவடை
கைகளின் கங்கணம் தேன்குழலாம்-எங்கள்
கந்தனே நெய்வழி அதிரசமாம்.

தாமரை முகங்களோ தெங்கிளநீர்-நம்மை
தாங்கிடும் கைகளோ செங்கரும்பாம்
கந்தனின் கால்விரல் தேன்கதலி-அவன்
கைவிரல் யாவுமே சீனிமிட்டாய்.

சட்டியில் வெந்ததை தின்பவரே-கந்த
சஷ்டியில் வந்ததை உண்பதற்கே
எட்டடியில் நாலடி போடுங்களே-வேல்வேல்
என்றோங்கி எல்லோரும் பாடுங்களே.