காண்போம் அவன் சேவடி - (சுட்டதிரு மெட்டு)

எங்கள் குறை தீர்த்திடவே எந்நாளும் காட்சிதரும்
சிங்கைநகர் தண்டபாணி தெய்வமே - என்றும்
மங்காத புகழுடனே மாறாத செல்வம் வந்து
சங்கமிக்க உந்தன் அருள் வேண்டுமே.

வேண்டுமென கேட்டவுடன் கேட்டவரம் அத்தனையும்
தந்துவிடும் உனை நிதம் போற்றுவோம் - தினம்
சந்தமிகு செந்தமிழில் சர்க்கரை தேன் கலந்து
உந்தன் புகழ் என்றுமே போற்றுவோம்.

போற்றுகின்ற எங்கள் துயர் வேரோடு அறுத்துவிட்டு
வெற்றிகளை அள்ளித்தரும் வள்ளலே - உனைப்
பற்றவரும் பக்தர் கூட்டம் பாடிவரும் பாட்டினிலே
ஏற்படும் நெஞ்சினிலே துள்ளலே.

துள்ளி வரும் மக்கள் நெஞ்சில் ஆனந்தத்தை
அள்ளி தினம் தந்துவிடும் உந்தனது அற்புதம் - நிதம்
வேலுடனே நின்று எமைக்காத்து விடும் உந்தனையே
உள்ளுருகி வேண்டுவோம் உன் பொற்பதம்.

பொற்பதத்தின் அற்புதத்தை போற்றி உனைப்பாடிச்
சுற்றிவரும் எங்களது பால்குடம் - எம்மை
ஏற்றிவரும் உந்தனது ஆலயத்தின் வாசலிலே
முற்றிலுமே அன்பரது கால்தடம்

கால்தடத்தை பாதையிலே வேகமாக விட்டு விட்டு
வேலனுக்கு தந்திடுவோம் காவடி - அந்த
பாலகனை பார்க்க வேண்டி கால் கடுக்க ஓடிவந்து
ஆலயத்தில் காண்போம் அவன் சேவடி.

சேவடியை காணவந்த எங்களது சந்ததியை வாழவைக்கும்
சிங்கைநகர் தண்டபாணி தெய்வமே - எங்கள்
கவலைகலை போக்கி நிதம் ஆறுதலைத் தந்துவிட
உந்தனது பார்வை மட்டும் வேண்டுமே.

அழகு சுந்தரம்