சக்தி உமையே


ஆத்தா மகமாயி காளியாயி
ஆதரிக்க வேணுமடி மாரியாயி


சமயபுரத்தி னிலே மாரியாத்தா
சாக்கை நகர்தனிலே உமையாத்தா

கண்டனூரைக் காக்கின்ற செல்லாத்தா
காரை நகரினிலே கொப்பாத்தா

தேவகோட்டை வாழுகின்ற கோட்டையம்மா
தென்பாண்டி ஆளுகின்ற தேவியம்மா

நாட்டரசன் கோட்டையிலே கண்ணாத்தா
நல்லசிறு வயலிலே பொன்னாத்தா

கொன்னை யூரைக் காக்கின்ற மாரியாயி
குற்றமெல்லாம் நீக்கிடுவாய் திரிசூலி

தஞ்சை நிலத்திலே நீ மாரியாத்தா
தர்மம் தழைக்க வேண்டும் ஓடியாத்தா

வேற்காட்டின் அழகியே கருமாரி
வேதனையைத் தீர்த்திடுவாய் உருமாறி

பள்ளத்தூரை ஆளுகின்ற பெரியநாயகி
பாலைநாட்டார் போற்றுகின்ற அரியநாயகி

மலையாள நாடாளும் பகவதியே
மாசின்றிக் காத்திடுவாய் சுகவதியே

பொங்கிப்படைச் சேண்டி வாடியாத்தா
புதுப்பானைச் சோறுதின்ன ஓடியாத்தா

சக்கம்மா உமையாத்தா நீதானம்மா
விசாலாட்சி மீனாட்சி நீதானம்மா

கோட்டையூரைக் காக்கின்ற கோட்டைநாச்சி-எங்க
குறைகளெல்லாம் தீர்த்துவைப்பாள் கொல்லங்காளி

ஓங்காரி ரீங்காரி சிவசக்தியே
உலகத்தைக் காக்கின்ற நவசக்தியே

அன்பரெல்லாம் பாடுகிறோம் காளியாத்தா
ஆடிஓடி நீயுமே வாடியாத்தா