சரஸ்வதி துதி

அம்மா கலைவாணி-எனக்கு
அருள்வாய் மகராணி!
சிம்மாசனமாய்-எந் நாவினிலே
தேவி, வருவாய்நீ!


வேத முதல் ஆனான்-பிரமன்
வித்தை தொழில் ஆனான்! அவன்
காதல் இளங்கிளியே-என்றும்
கைதொழுவேன் உனையே!

வெள்ளை மலர்மேலே-அன்னம்
வீற்றிருந்தால் போலே,
மெள்ள எழுந்தருள்வாய்-அம்மா
வேண்டும் வரம் தருவாய்!

ஏது படித்துவிட்டேன்!-பெரிதாய்
என்ன முடித்துவிட்டேன்?-உன்
பாதம் பிடித்துவிட்டேன்-அதனால்
பாடல் வடித்துவிட்டேன்!

பூவும் உனக்காக-தேடும்
பொன்னும் உனக்காக!
கூவும் எனக்காக-அருள்வாய்
கோடிக்கணக்காக!

அருளின் துடிதுடிப்பாய்-அம்மா
அமுதத் தமிழ் வடிப்பாய்!
கருணை மடைதிறப்பாய்-அம்மா
கவிதைப் பயிர் வளர்ப்பாய்!

-அருட்கவி கு.செ.இராமசாமி, எம்.ஏ., சிவகங்கை