சிங்கப்பூரில் தெண்டபாணி சிரித்து நிற்கிறார்

வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்


சிங்கப்பூரில் தெண்டபாணி சிரித்து நிற்கிறார்
செல்வவளம் தந்து நம்மை காத்து வருகிறார்
அள்ளிதரும் வள்ளலான செந்திலாண்டவர்
அலைகடலை தாண்டி இங்கே வந்து நின்று மகிழ்கிறார்

சிங்கப்பூரில் கோயில் கொண்ட தெண்டபாணியே
செல்வ நலம் தந்தருளும் தெண்டபாணியே
எல்லையில்லா பேரழகே தெண்டபாணியே
தாள்பணிந்து வணங்குகின்றோம் காத்திடுவாய் வேலவா

வள்ளி தெய்வயானையுடன் மலையும் விட்டுமே
வந்துவிட்டார் தெண்டபாணி சிங்கப்பூருக்கே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தெண்டபாணியை
அழகுத்தேரில் ஏற்றி போற்றிடுவோம் என்றும் எப்போதும் நாம்

செட்டிமுருகன் தெண்டபாணி தேரில் வருகிறார்
செல்வசுகம் தந்திடவே நேரில் வருகிறார்
சிங்கைவளர் தெண்டபாணி சிரித்து வருகிறார்
சிங்காரவேல் பிடித்து பவனி வந்து மகிழ்கிறார்

பார்புகழும் பழனிமலை தேர்ந்தெடுத்தவா
பஞ்சாமிர்த குளியலிலே திளைத்து மகிழ்பவா
போற்றி வளரும் செட்டிமக்கள் குலம் தழைக்கவே
கடல்கடந்து சிங்கப்பூரில் கோயில் கொண்ட மன்னவா

குழந்தைபோல குன்றத்திலே சிரித்து நிற்பவன்
மழலையென்று மகிழ்ந்து சொன்னால் குலுங்கி சிரிப்பவன்
செட்டிமகன் நீதானப்பா என்று சொன்னாலே
சிங்கார சிரிப்புடனே வந்தே காட்சி தருபவன்

காவடிகள் ஆடிவரும் அழகை ரசிப்பவன்
அந்த காவடிக்குள் வந்து முகம் காட்டி சிரிப்பவன்
சேவடியே சரணமென வணங்கி வாழ்ந்திடும்
இந்த செட்டிமக்கள் குலம்தழைக்க வேல்பிடித்து நிற்பவன்

பால்குடங்கள் காவடிகள் சேர்ந்தே வந்திட
பக்தரெல்லாம் அரோகரா என்றே முழங்கிட
சிங்கப்பூரில் நின்றருளும் தெண்டபாணியும்
அழகு சிங்காரத்தேரில் வந்து கண்டு கண்டு மகிழ்கிறார்

ஊஞ்சலிலே ஆடுகின்ற பேரழகே வா
உன்னடியார் மகிழ்ந்திடவே வேல்பிடித்து வா
தஞ்சமென்று உனைப்பணிந்தோம் சிங்கையாளும் மன்னவா
சிங்காரவேல் பிடித்து நேரில் நீயும் வா வா

பழம்கேட்டு சண்டைபோட்டு பழனி வந்தவா
அங்கே பக்தர் போற்ற கோலூன்றி நிற்கும் ஆண்டவா
கடலும் தாண்டி சிங்கப்பூரில் கோயில் கொண்டவா
எங்கள் கஷ்டம் கவலை தீர்த்திடவே நீயும் நேரில் வா வா

குன்றம் எல்லாம் கோயில் கொண்ட தெண்டபாணியும்
வந்தமர்ந்தான் சிங்கப்பூரில் வளங்கள் பெருகவே
போற்றி நாமும் வணங்கிடுவோம் என்றும் எப்போதும்
அவன் கேட்டதெல்லாம் தந்திடுவான் நாமும் மகிழவேண்டியே

வட்டி தொழில் செய்யவந்த எங்களுக்கேதான்
வளமோடு வேலைவாய்ப்பை தந்தவன் நீயே
செட்டிமக்கள் குலம் காக்கும் சிங்கை வேலைய்யா
உன் சேவடியே சரணமய்யா சரணம் சரணம் முருகைய்யா

அருளிசைமணி நேமத்தான்பட்டி அரு.சுப்பிரமணியன்.