சிங்கை ஸ்ரீ தண்டாயுதபாணி

சிங்கை நகராளும் ஸ்ரீதண்ட பாணியே
சிரம்தாழ்த்தி வணங்கி நின்றோம் அரோகரா
சிக்கலை தீர்த்திடும் சிங்கார வேலனே
உன்னையே வேண்டி நின்றோம்.
கடல்கடந்து வந்தோரை காத்திடும் தெய்வமே
கவலையைப் போக்க வருக
கதியென்று உன்னையே வணங்கிடும் பக்தரை
காத்திட விரைந்து வருக!
அன்னையாய் தந்தையாய் அனைத்துமாய் நிற்கின்ற
ஆறுமுக வேலன் நீயே
அண்டிவரும் நோய்களை அடியவரின் துயரத்தை
அனுதினமும் நீக்கு வாயே!
உனையன்றி வேறொருவ ரிலைஎன்று உணர்ந்தஎன்
உணர்வினைக் காத்த ருள்க
உண்மைப் பரம்பொருளே உலகத்தைக் காக்கின்ற
உயர் தண்டபாணி துணையே! 1

தரணியில் உதித்த நாள்முதல் உனையன்றி
வேறோருவர் அறிந்தது இல்லை!
தண்டாயுதம் அன்றி தெய்வங்கள் வேறில்லை
என்றே வாழ்ந்து வந்தேன்!
அறியாத பருவத்தில் தெரியாமல் செய்த
தவறுகளும் உன் செயலே!
அறிந்த பருவத்தில் அறிவு தெளியாமல்
அலைந்ததும் உன் செயலே!
புரியாத பிறப்பினில் புரிந்தது போலவே
நடித்ததும் உன் செயலே!
இருப்பதும் இறப்பதும் பிறப்பதும் நடப்பதும்
பரம்பொருள் உன் அருளே!
உன்னருள் என்றுநான் அறிந்த பின்னர்
என்னால் நடப்பது ஏது!
உன்னடிமை என்னையே ஆட்கொண்டு காத்திடுவாய்
உயர் தண்டாயுதபாணி துணையே.2

பாரெல்லாம் வாழவும் பாவிகள் மாறவும்
பரமனே அருள் புரிவாய்!
ஆசைகள் அனைத்துமே அடியோடு அழிந்திட
ஆறுமுகனே அருள் புரிவாய்!
ஆறுபடை வீடுகள் அன்புடனே கொண்டவா
அகிலத்தை காத்து அருள்வாய்!
நல்லோர்கள் வாழவும் தீயோர்கள் திருந்தவும்
நல்ல வழி காட்டிடுவாய்!
அன்பான பெரியவர்கள் செழிப்பாக வாழ்ந்திட
செல்வனே வழி வகுப்பாய்!
அன்போடும் பண்போடும் அகிலத்தில் வாழவே
ஆறுமுகனே அருள் தருவாய்!
அன்போடு பணிந்திடும் அன்பரின் வாழ்க்கையில்
சுகம் அனைத்தும் வழங்கிடுவாய்!
சிரம்தாழ்த்தி வணங்கிடும் அடியவரை காத்திடுவாய்
உயர் தண்டாயுதபாணி துணையே.3

திரைகடல் தாண்டியே திரவியம் தேடவே
திக்கெட்டும் சென்ற போதும்!
ஏழைப் பங்காளனே எம்குல நாயகா
உன்னையே தொழுது நின்றோம்!
ஓமென்ற மந்திரத்தை ஓயாமல் செபித்துமே
உன்னடியைப் பணிந்து நின்றோம்!
ஓங்காரப் பொருளாக ஓராறு முகம்கொண்ட
ஒப்பற்ற தேவன் உன்னை!
வாயார பாடியே மனதார வணங்கியே
வளம்வேண்டி வணங்கி நின்றோம்!
வற்றாத அருட்கடலே வளமான வாழ்க்கையினை
வழங்கிடவே எழுந்து வருவாய்!
காவடி தாங்குவோர் கேட்டதை ஈந்திடும்
கருணை வடிவான பொருளே!
சிங்கை நகர்தனிலே சிறப்பாக வீற்றிருக்கும்
உயர் தண்டாயுதபாணி துணையே4

பலகல்வி கற்றாலும் பலநாடு சென்றாலும்
மனம் உன்னை மறந்ததில்லை!
போதைகள் தலைக்கேறி பேதையாய் அலைந்தாலும்
உன்னை நினையாமல் இருந்ததில்லை!
இன்பமும் துன்பமும் வாழ்க்கையினை சூழ்ந்தாலும்
வணங்காமல் இருந்தது இல்லை!
சிற்றின்பம் பேரின்பம் என்று சுகமனைத்தும்
வாய்த்தாலும் தொழாமல் இருந்ததில்லை!
எத்தனை சோதனைகள் எத்தனை இன்னல்கள்
எனைவாட்டி வதைத்த போதும்!
என் நண்பனாம் துணைவனாம் இறைவனாம்
முருகனை அழைக்காமல் இருந்ததில்லை!
இருக்கின்ற போதிலும் இறக்கின்ற போதிலும்
என்னருகே இருக்க வேண்டும்!
நண்பனாய் துணையிருந்து நல்வழிகள் காட்டிடுவாய்
உயர் தண்டாயுதபாணி துணையே.5

அழகு காவடிகள் தாங்கியே அடியவர்
உன்னையே தேடி வருவார்!
ஆணி செருப்புடன் அடிமேல் அடிவைத்து
உன்னையே நினைத்து வருவார்!
அகமெல்லாம் உன்நினைவால் அங்கமெல்லாம் துடிதுடிக்க
உன்னையே வேண்டி வருவார்!
வேண்டிவரும் அடியவரின் விருப்பத்தை நிறைவேற்ற
அழகுமயில் ஏறி வாவா!
இயந்திரமாய் சுழன்றிடும் இவ்வுலக வாழ்க்கையின்
இச்சையைத் தீர்க்க வாவா
இச்சகத்தில் அடியவர் அனுபவிக்கும் இன்னலைக்
கண்டுமனம் இரங்க வில்லையா
யாரிடம் முறையிடுவோம் எங்ஙனம் தொழுதிடுவோம்
ஏறுமயில் ஏறி வாவா
ஏறுமயில் ஏறிவந்தே எங்களைக் காத்திடுவாய்
உயர் தண்டாயுதபாணி துணையே!6

தைப்பூச நாயகா தரணிபுகழ் ஐயனே
தமிழாலே பாடு கின்றோம்
தளராத மனத்தோடு அடுநோய்கள் அண்டாத
வாழ்க்கையினைத் தந்து அருள்வாய்
விதியாலே மதியிழந்து செய்த பாவங்களை
மன்னித்தே எற்று அருளுவாய்
அண்டிவந்த பயமனைத்தும் ஆறுமுகா என்றிட
அடியோடு விலக வேண்டும்
அன்போடு உன்னையே அனுதினமும் பணிந்து
நான் உன்னருள் பெறவும்வேண்டும்
அன்றாட ஆசைகளில் சிக்கி தவியாமல்
அனைவருக்கும் உதவ வேண்டும்
அன்பான் மனைவியோடும் பண்பான பிள்ளைகளோடும்
சிறப்பாக வாழ வேண்டும்
வேண்டுவரம் அத்தனையும் மறுக்காமல் தரவேண்டும்
உயர் தண்டாயுதபாணி துணையே.7

வேலாக நின்றவன் வேண்டுவரம் தருபவன்
சிங்கை நகர் தண்டபாணி
வழிவழியாய் வணங்குபவர் வாழ்க்கையினை வளமாக்கிடுவான்
சிங்கை நகர் தண்டபாணி
அடிபணிந்து வணங்கிவிட்டால் அன்போடு கூப்பிட்டால்
ஓடோடி வந்து நிற்பான்
அயராமல் அவன் நாமம் பாடித்துதிப்போரை
அனுதினமும் காத்து நிற்பான்
ஆறுமுகனே கதியென்று அவன் திருவடிபற்றிவிட்டால்
அல்லல்கள் இல்லை அப்பா
அச்சுறுத்தும் நோய்களும் பயமுறுத்தும் இன்னல்களும்
அடியோடு விலகும் அப்பா
மாசில்லா மனத்தோடு மன்னவன் முருகனை
வணங்குபவர் உயர்வு காண்பர்
எல்லா வளங்களும் ஏற்றமுற தந்திடுவான்
உயர் தண்டாயுதபாணி துணையே.8

-லெ. சக்தி குமார்