சிவலிங்கம்

அரஹர அரஹர அரஹர லிங்கம்
சிவசிவ சிவசிவ சிவசிவ லிங்கம்


கருணையின் வடிவே கைலாச லிங்கம்
காசினி காக்கும் விசுவ லிங்கம்
திருப்பரங் குன்றின் பரங்குன்ற லிங்கம்
திருவா னைக்காவில் ஜம்புலிங்கம்

ஆடல் புரிந்த கூடல்லிங்கம்
அன்பைப் பொழியும் ஆட்கொண்ட லிங்கம்
பாடலின் சிறந்த மருதீச லிங்கம்
பக்திக் கடலின் திருவீச லிங்கம்

வெற்றி நல்கும் செயங்கொண்ட லிங்கம்
விண்ணவர் போற்றும் வளரொளி லிங்கம்
கற்றவர் ஏற்றும் ஐநூற்று லிங்கம்
கண்ணின் ஒளியாம் காளத்தி லிங்கம்

சுயம்பாய் வந்த தான்தோன்றி லிங்கம்
சொர்க்கம் நல்கும் தேசிக லிங்கம்
பயனாம் நயனாம் பசுபதி லிங்கம்
பாலைய நாட்டின் சண்டீஸ்வர லிங்கம்

புள்ளூர் வாழும் வைத்திய லிங்கம்
பொங்கும் மங்கள சங்கர லிங்கம்
உள்ளம் உறைந்த பூசலார் லிங்கம்
உயர்ந்த மயிலைக் கபாலி லிங்கம்

மார்க்கண்டன் காத்த அமுதீச லிங்கம்
மாதேவன் வீரசேகர லிங்கம்
ஆர்த்துப் போற்றும் காளீஸ்வர லிங்கம்
ஆவுடைக் கோவிலின் ஜோதிலிங்கம்