திருநகரைக் காத்திடும் திருப்புத்தூர் கருப்பண்ணன்

அரோகரா

அகன்ற பெரு நெற்றியும் அளவான கைகளில்
அரிவாளும் அடிபிரம்பும்
அத்துடனே உயர்புருவம் அன்பான கூர்விழிகள்
அழகான தலைப் பாகையும்
திடமான தோள்களும் திருத்திய பெருமீசையும்
திகைப்புறும் வண்ணம் கொண்டே
திருநகரை வலம்வந்து தினந்தோறும் காத்திடும் எம்
திருப்புத்தூர் கருப்பண்ணனே!
தென்பகுதி மக்கள் உன் திருநாமம் போற்றியே
தினந்தோறும் வாழுகின்றார்

அவர்உள்ளம் நோகாமல் அல்லல்கள் தொலைத்தேநீ
அழகான வாழ்வு தருவாய்
திக்கெட்டு திசைநான்கு திருமக்கள் பெருஉள்ளம்
தினமும் உன்னைக்கான வருதே
இக்கெட்டு இடையூறு இனிவாழ்வில் இல்லாமல்
என்றென்றும் காத்து அருள்வாய்!
நல்லவர்கள் நலம்பெறவும் தீயவர்கள் திருந்திடவும்
நல்ல வழி காட்டுவாயே
வல்லதிரு கோட்டைக்குள் வாழ்வாங்கு வாழ்பவனே
கருப்பண்ண சுவாமி துணையே!

-மீ. மீனாட்சி சுந்தரம், தேவகோட்டை