தையல்நாயகி பாமாலை

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!


எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளையம் பூக்கண்கள்
இயல்பான அழகு வடிவம்
இனிய முகம் தாமரை இருசெவிகள் செந்தாழை
இறைவிநிறம் நல்ல பவளம்

கள்ளிருக்கும் ரோஜாப்பூக் கன்னங்கள் அல்லியில்
கடைந்ததோர் இரண்டு கால்கள்
கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி
கற்பகப் பூவில் தோள்கள்

புள்ளிருக்கும் வேளூர் பூவையுன்அங்கமெல்லாம்
பூக்களாய் மலர்ந்திருக்க
பூவுடல் கொண்டவுனை வர்ணித்துப் பாமாலை
பூமாலையோடு தந்தேன்

வல்லவள் நின் அருளாலே வரும் துயரை போக்கியொரு
வரம்தந்து காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 1

பால் கேட்டு அழுததோர் பிள்ளைக்குச் சீர்காழிப்
படித்துறையில் பால் கொடுத்தாய்
பச்சை வெற்றிலைதுப்பிக் கவிகாள மேகத்தைப்
பாட்டரசன் ஆக்கி வைத்தாய்

வேல்கேட்ட பிள்ளைக்குச் செந்தூரில் சமர்செய்ய
விருப்பமுடன் வேல் கொடுத்தாய்
விளையாடும் ஏழரைச் சனியோடு கிரகங்கள்
விலகிடும் வழி அமைத்தாய்

நூல்கேட்ட ஞானத்தில் நூறுகவி பாடுமெனை
நோக்கி நீ எது கொடுத்தாய்
நொடிப்பொழுதில் என்வாழ்வில் படிப்படியாய் துயரங்கள்
கிழைவதற்கு ஏன் விடுத்தாய்

வாழ்வரசி இனி எனது வருங்காலம் செல்வங்கள்
வரும் காலம் ஆக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 2

தா வென்று கேட்டவுடன் கொடுப்பதனால் தானுன்னைத்
``தாய்'' என்று சொல்லிவைத்தார்
தலைமகளுன் சந்நிதியில் கலைமகளின் அருளாலே
தமிழ் பாடி வரங்கள் பெற்றார்

சேய்ஒன்று எதிரினிலே கதறுவது கேட்காமல்
செவிமூடி நிற்க லாமோ?
சிறுபிழைகள் இருந்தாலும் மன்னித்து அருள்காட்டும்
தேவியவள் நீயல் லவோ

ஆயகலை அத்தனையும் அறிந்தவனை நோய்நொடிகள்
அணுகவிடல் முறையாகுமோ
அரியதொரு செல்வத்தை உரியமகன் ஏற்காமல்
அனுதினமும் வாட லாமோ?

வாயுவென வேகமாய் வந்தெனது துயர்தீர்த்து
மகிழ்ச்சியினைக் கொடுக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 3

தங்கநிகர் குணத்தோடு தைரியமும் தருகின்ற
தமிழ்ச் செல்வி போற்றி போற்றி
தரணியிலே புகழ்காண வரமளிக்கும் சுந்தரியாம்
தாமரைப் பூமாது போற்றி

மங்கையர்க்கு மாலைகளும் மன்னவர்க்கு வேலைகளும்
மகறுழ்ந்தளிக்கும் அரசி போற்றி
மாதரசி உண்ணா மலைஅழகு சிவகாமி
மங்கை மீனாட்சி போற்றி

பொங்கி வரும் துயரத்தைப் பொடியாக்க வரும் அன்ன
பூரணி கல்யாணி போற்றி
யோகமுடன் வாழ்வுதரும் பூங்கொடியாம் விசாலாட்சி
புனித உமாதேவி போற்றி

மங்களங்கள் அத்தனையும் எங்களது வீடுவர
மாதரசி கூட்டி வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 4

மலைபோன்ற செல்வத்தை குவித்து வைத்திருந்து நான்
மற்றவர்க்கு உதவ வேண்டும்
மழலையின் குணத்தோடு முதுமையிலும் இளமையாய்
மகிழ்வோடு வாழ வேண்டும்.

கலைதவழும் மேடையெல்லாம் பூமாலை அணிந்து நான்
கௌரவம் பெறவும் வேண்டும்.
கவிபாடும் எனதுகுரல் கேட்டவுடன் தெய்வமெலாம்
காட்சி தந்து அருளவேண்டும்.

நிலையான புகழ்தந்து உற்றாரும் மற்றாரும்
நேசிக்கும் உறவு வேண்டும்.
நீ எனது துணையாகி நான் செல்லும் பாதைக்கு
நேர் வழிகள் காட்டவேண்டும்

வளையாடும் கரத்தழகி பகை வென்று எந்நாளும்
மறுக்காமல் காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 5

சிறுவயதில் உன்பெருமை தெரிந்திருந்தால் உன்னைச்
சேவித்து மகிழ்ந்தி ருப்பேன்!
தெரியாமல் செய்த பிழை அத்தனையும் மன்னிக்கத்
தேடி வந்த ழுதிருப்பேன்!

புரியாமல் எடுத்த இப்பிறவிதனில் மங்கையரின்
போகத்தை அளந்தி ருந்தேன்!
பொன்னோடும் பெண்னோடும் வருமின்பம் போதுமெனப்
புரியாமல் வாழ்ந்திருந்தேன்!

திருநாளில் உன் பெருமை தெரிந்ததும் தொடர்ந்துநான்
செவ்வாயில் விரதம் வைத்தேன்!
தித்திக்கும் அருள்தன்னை சித்திக்க வரம்வேண்டி
சிங்காரப் பாட்டி சைத்தேன்!

பருவத்தில் நான்செய்த பாவத்தை மன்னித்துப்
பாவை நீ காக்க வருவாய் - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே! 6

திருக்கழுக் குன்றத்தில் கழுகுக்கும் மதியத்தில்
தினந்தோறும் சோறு உண்டு!
திருநாளாம் பொங்கலில் நந்தியெனும் மாட்டுக்கும்
தித்திக்கும் பொங்கல் உண்டு!

வருஷத்தில் ஒருநாளில் வடையோடு அன்னத்தை
வைரவரும் காண்ப துண்டு!
வளர்கின்ற புற்றுக்குள் ஒளிகின்ற பாம்புக்கும்
வார்க்கின்ற பாலு முண்டு!

அர்ச்சித்து வழிபட்டு அன்னையே உனையெண்ணும்
அடியேனுக் கென்ன உண்டு!
அன்று தினம் அளந்தபடி என்றைக்கும் நடந்திடவே
அருள்புரிய வேண்டும் அம்மா!

மரம் வைத்த நீதானே தண்ணீரும் விடவேண்டும்
மறந்திடல் முறையாகுமோ - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே!
வளம் காண வைக்கும் உமையே! 7

கழுதையெனும் பிறவியை எடுத்தாலோ நிச்சயம்
கழுத்திலே பொதி யிருக்கும்!
காளைமாடாகவே பிறந்திடின் நிச்சயம்
கழனியில் கால் இருக்கும்!

பழுதான பிறவியாம் நாயாகப் பிறந்தாலோ
பகலிரவு விழிக்க வேண்டும்!
பறவையாய்ப் பிறந்தாலும் மரங்களின் உச்சியில்
பதியங்கள் போட வேண்டும்!

அழுதாலும் தொழுதாலும் அன்னையே உனையன்றி
யாரெனக்கு தவுவார்கள்?
ஆறறிவு கொண்டதோர் மனிதனாய் என்னை நீ
அகிலத்தில் படைத்த பின்னால்

வழிகாட்ட மறுப்பதும் நியாயமா? என் விழியில்
வடிந்து நீர் ஓடலாமா? - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 8

புல்லாகிப் பூடாகிப் புழுவாகி இருந்தாலோ
புலம்பியே தீர வேண்டும்!
பொன்னாக அணிகின்ற மனிதனாய்ப் பிறந்தநான்
புதுயுகம் காண வேண்டும்!

கல்லாகி நிற்கின்ற தெய்வம் நீ இல்லையெனக்
காட்டிட விரைந்து வருக
கனதனம் நீதந்து காசினியில் புகழ்தந்து
காவலாய் நின்று அருள்க!

முள்ளாக மலராக மோதிடும் வாழ்க்கையில்
முற்றும் நான் நம்பி வந்தே!
மோதகப் பிரியனின் தாயான உன்னிடம்
முறையீடு செய்யு கின்றேன்!

பல்லக்கு பரிவாரம் பார்த்திடும் ராஜாங்க
பவனியை எனக்கு அருள்க - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே! 9

எவருக்கு எதுவேண்டும் என்பதை அறிந்த நீ
ஏறிட்டுப் பார்க்க வில்லை!
இருகரம் கூப்பியுன் சந்நிதியில் நிற்கும் நான்
எதுகேட்டும் மாறவில்லை!

சிவல்புரியில் வாழ்கின்ற சிங்காரம் தந்ததோர்
செந்தமிழ் கவிதை மூலம்!
சீர்கொண்ட பதிகங்கள் பத்தையும் கேட்டுநீ
சிரமத்தை அகற்ற வேண்டும்!

கவலைக்கு மருந்தாகும் கடவுளே உனைநம்பி
காலங்கள் போக்கி விட்டேன்!
காப்பாற்ற வேண்டியது உன்பொறுப் பல்லாது
காசினியில் யார் பொறுப்பு!

மகன்கேட்டு தாய்எதுவும் மறுப்பதில் முறையில்லை
மனமிரங்கி வந்து அருள்க! - அம்மா
வைத்தீஸ்வரன் கோவில் வளர் தையல் நாயகியே
வளம் காண வைக்கும் உமையே. 10

கவிஞர் சிவல்புரி சிங்காரம்