முன்னோடிக் கருப்பர் துதி!

காக்கும் தெய்வமே-எங்கள்
கருப்ப தெய்வமே-நாங்கள்
நோக்கும் இட மெல்லாம்
உந்தன் வீரத்தோற்றமே


அள்ளிச் சொருகிய-மலர்
அழகுக் கொண்டையும்-வளர்
துள்ளு மீசையும்-உந்தன்
எழிலைக் கூட்டுதே

பகையழித்திடும்-சிறந்த
பரந்த தோள்களும்-நல்ல
கருத்த மேனியும்-உந்தன்
வலிமை காட்டுதே

காடு வீடெல்லாம்-உந்தன்
காவலில் உண்டு-உயர்
படி பதினெட்டும்-உந்தன்
பார்வையி லுண்டு

ஜாதி மல்லிகை-உயர்
சாந்து ஜவ்வாது-மணக்கும்
சாம்பி ராணியும்-உந்தன்
வரவைக் கூறுதே

சாய வேட்டியும்-உயர்
ஜரிகைப் பட்டுமே-உந்தன்
மேனி அழகிலே-தவழ்ந்து
மின்னிச் சொலிக்குதே

வெள்ளைக் குதிரையும்-உயர்
வீச்சரி வாளும்-நல்ல
தண்டை கிண்கிணி முழங்க
இங்கு வாருமே

கழன்றா டிடும்-அழகுச்
சுக்கு மாந்தடி-எடுத்து
விளையாடியே-ஐயா
ஓடி வாருமே

கெட்டி மேளமே-கொட்டி
உனை யழைக்கவே-இந்த
செட்டி மக்களாம்-நாங்கள்
சேர்ந்து வணங்கிடும்(எங்கள் காக்கும்)

-கவிஞர் ஏ.ஆர்.சுப்பையா, நேமத்தான்பட்டி.