வில்லெடுக்கும் வேடனார் விழியெடுத்துப் பூசினார்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய !
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய !


வில்லெடுக்கும் வேடனார் விழியெடுத்துப் பூசினார்
சொல்லடுக்கிப் பித்தனாய் சுந்தரனார் ஏசினார்
சொல்லினிக்கும் தமிழினால் துதித்துஉன்னைப் பேசுவேன்
கல்விச்செல்வம் யான்பெறக் கணிந்தருள் நடேசனே

வில்வயத்ரம் கிள்ளியே வீசிவைத்த வானரம்
வேந்தனாகும் வண்ணமே விதியமைத்த ஈசனே
சொல்லினிக்கும் பாடல்கள் சூட்டினேன் உன் பாதமே
சூழ்வதெல்லாம் நன்மையாய் சொல்லிவா நடேசனே

விண்ணிருக்கும் தேவர்கள் வேதனை தவிர்க்கவே
கண்திறந்து மூடினாய் கந்தவேலன் தோன்றவே
மண்பிறந்த யானுமே மனம்கசிந்து பாடினேன்
கண்மலர்ந்து என்னையும் காத்தருள் நடேசனே

திருவையாற்று ஈசனாய் சித்திரைத் திருவிழா
திருத்தலங்கள் ஏழிலே தேறும் பஞ்சநாதனே
அருமையான தமிழினால் அய்யா உன்னைப் பாடினேன்
அருகிருந்து நாளுமே ஆண்டருள் நடேசனே

சனி நடத்தும் திசையிலே சங்கடங்கள் ஏகமாம்
தர்மசாஸ்தா ஏழரை சஞ்சலங்கள் தூவுமாம்
இனிநடக்கும் யாவுமே இனியதாக மாறவே
சனிமனத்தை மாற்றுவாய் சபையில் ஆடும் ஈசனே

கற்றவர்கள் நாவிலும் கவியுரைக்கும் பாவிலும்
நற்றவர் தனத்திலும் நன்மனத் திடத்திலும்
அற்புதம் நிகழ்த்திடும் ஐயனே அடைக்கலம்
நற்பலன் எனக்கருள் நாதனே நடேசனே

தொட்டதெல்லாம் துலங்கவும் சொல்லும் வார்த்தை வெல்லவும்
பட்டதுன்பம் தீரவும் பன்னலங்கள் சேரவும்
செட்டியிந்தச் சேவுகன் செந்தமிழ் சிறக்கவும்
கட்டியங்கள் கூறிநீ கனிந்துவா நடேசனே