ஆறுபடை வீடழகா

ஆறுபடை வீடழகா முருகா
ஆனந்தனே மால்முருகா - வேல் வேல்
அழகுமயில் ஆடிவரச் சேவல்கொடி முன்னே வர
இன்னும் வரத் தாமதமேன் - முருகா
இன்னும் வரத் தாமதம் ஏன்?


ஏறுமயில் ஏறிவந்தே - முருகா
எங்கள் குறை தீர்ப்பவனே(வேல் வேல்)
கூறுவினை தீர்த்து வைக்கக் கோலமயில் ஏறி நீயும்
இன்னும் வரத் தாமதமேன்(முருகா)

குன்றக்குடி வேலவனே - முருகா
குறைகளெல்லாம் தீர்ப்பவனே(வேல் வேல்)
குன்றம் விட்டு நீ இறங்கித் தஞ்சமென்றோர் தாழ்வகற்ற
இன்னும்வரத் தாமதமேன்(முருகா)

எட்டுக்குடி வேலவனே - முருகா
எங்கள் குலம் காப்பவனே(வேல் வேல்)
செட்டி மகன் ஆனவனே செங்கதிர் வேல் நீ எடுத்து
இன்னும் வரத் தாமதமேன்(முருகா)

செந்தூரில் வாழ்பவனே - முருகா
செல்வ நலம் தருபவனே(வேல் வேல்)
எங்கள் குறை தீர்த்திடவே தங்கரத மீதமர்ந்து
இன்னும் வரத் தாமதமேன்(முருகா)

பழனிமலைப் பேரரசே - முருகா
பாரெல்லாம் ஆள்பவனே
பக்தர் குறை தீர்த்திடவே பச்சைமயில் மீதமர்ந்து
இன்னும் வரத் தாமதமேன்(முருகா)

சிங்கார வேலவனே - முருகா
சிக்கலெல்லாம் தீர்ப்பவனே(வேல் வேல்)
தங்கமனம் கொண்டவனே தாழ்வகற்றி வாழ்வுதர
இன்னும் வவத் தாமதமேன்(முருகா)

பன்னிருகை நாயகனே - முருகா
பக்கத்துணை வருபவனே(வேல் வேல்)
பக்கமிரு மாதிருக்கச் சொக்கத் தங்கவேலெடுத்து
இன்னும் வரத் தாமதமேன்(முருகா)

காவடிகள் ஆட்டத்திலே - முருகா
கவலையெல்லாம் தீர்ப்பவனே(வேல் வேல்)
சேவடிகள் சரணமென ஆவலுடன் காத்திருக்கோம்
இன்னும் வரத் தாமதமேன்(முருகா)

சொந்தமுடன் நானழைக்க - முருகா
கந்தவடி வேலவனே(வேல் வேல்)
தங்கரதம் கொண்டவனே எங்கள் குலம் காப்பவனே
இன்னும் வரத் தாமதமேன்

கொஞ்க தமிழ் பாடல் கேட்கும் - முருகா
குழந்தை வடிவேலவனே(வேல் வேல்)
தஞ்சமென்றே தாள் பணிந்தோம் பஞ்சம் பிணி போக்கிடவே
இன்னும் வரத் தாமதமேன்(முருகா)

சொன்ன தமிழ்க் குறையுளதோ - முருகா
சொன்னதெல்லாம் கேட்கலையோ(வேல் வேல்)
அன்னை தந்த வேல் எடுத்து அழகு மயில் மீதமர்ந்து
இன்னும் வரத் தாமதமேன்(முருகா)

அலையாடும் செந்தூரிலே முருகா நின்று
விளையாடும் செல்வ மகனே(வேல் வேல்)
நிலையான செல்வந் தந்து வளமான வாழ்வுதர
வரவேணும் எந்தனருகே (முருகா வரவேணும் எந்தனருகே)