ஆறுமுகன் பேரில் ஆனந்தக் களிப்பு

ஆடுமயில் ஏறிவிளை யாடும் வேல் வேல் -வேலவன்
ஆனந்தக் களிப்பிதனைச் சேவுகனும் பாட
நாதந்த நாதந்த நானா தன நாதந்த நாதந்த நானா
ஆனைமுக நாயகனே காப்பு-என்றும்
அணிதமிழாய் வந்திடுவான் அடியேனைக் காத்து 1

பழகுதமிழ் தந்தவனாம் வேலவன்-ஒளவைப்
பாட்டிக்குக் கனிதந்து பாடவைத்த பாலன்
அழகுமிகு முகங்களோர் ஆறு-அதில்
அருள்சிந்தும் விழிகளோ-ஆறோடு ஆறு 2

அப்பச்சி ஆத்தாளும் சொன்ன-தேவ
யானையெனும் பெண்ணவளை மணந்தானாம் முன்னம்
ஒப்பில்லா நாரதனும் மெல்ல-வந்து
ஓவியமாய் வள்ளியெழில் என்றவனும் சொல்ல 3

ஆடுமயில் வாகனமும் ஓட-மன
அரங்கத்தில் வள்ளியம்மை மோகமிக ஆட
வேடமிட்டுத் தினைக்காடு சென்றான்-வேலன்
வேழமுகன் துணையோடு வள்ளி மணங்கொண்டான்.4

தெய்வானை தேவருட மாது-சண்டை
செய்யாத உளங்கொண்ட தெய்வீகச் சாது
நெய்வாசக் குழலாடும் வள்ளி-என்றும்
நேருக்கு நேர்நின்று வழக்காடுங் கள்ளி 5

தெய்வானை தாய்வீடு போக-வேலன்
தென்பரங் குன்றகன்று தணிகைமலை ஏக
கொய்யாத மலர்மேனி வள்ளி-எங்கள்
குமரேசன் வரவாலே மகிழ்ந்தாளே துள்ளி 6

இன்பமுடன் வேலவனைக் கொஞ்சி-நல்ல
இனியமொழி பலபேசி இழந்தாளே வஞ்சி
குன்றமரும் நாயகனும் நெகிழ்ந்து-வள்ளிக்
குறமகளே வேண்டுவது கேளென்றான் மகிழ்ந்து 7

இப்போது கேட்டாலே ஆச்சு இந்த
எழில்வேலன் பின்னாளில் மறப்பானிப் பேச்சு
இப்படியே வள்ளியவள் எண்ணி வேலன்
எழில்மார்பில் இருகரத்தால் மாய்மாலம் பண்ணி 8

எப்போதும் இங்கிருக்க வேணும்-நீரும்
என்னோடே இம்மலையிற் குடியிருக்க வேணும்
அப்பப்பப் பரங்குன்றம் போங்க-பாவம்
யானைதன் அணங்குமனக் கிலேசமது நீங்க 9

என்றவளும் வேலனிடம் சொல்ல-இதை
ஏன்கேட்டோம் என்றெண்ணி வேலவனும் மெல்ல
நன்றுநீ நவின்றமொழி மானே-நாட்டு
நடப்பையும் அனுசரித்து நடக்கோணும் நானே 10

பின்னாலே யோசிப்போம் வாடி-என்று
பிடித்தவனின் கைதட்டி வள்ளியவள் ஓடி
முன்னாலே வந்தவன் மீதில்-மோகம்
மிகக்கொண்டீர் என் பேச்சு ஏறுமோவுங் காதில் 11

நாடதனில் நடப்பதைக் கூறி முன்னம்
நவின்றமொழி மறப்பதென்ன ஞாயமது மாறி
காடதனிற் சொன்னமொழி என்ன-இன்று
கைப்பிடித்த பின்னாலே நடப்பதுவும் என்ன 12

சண்டைக்கு நான்போக மாட்டேன்-வந்த
சண்டையினைச் சத்தியமாய் நான்விடவும் மாட்டேன்
கண்சிவக்க ஆத்திரமும் ஏற-வள்ளி
கந்தனிடம் இவ்வாறு கத்திமிகக் கூற 13

ஓங்கார சக்திபெற்ற பாலன் உள்ளில்
உருவான கோபமொடு சொல்லுவான் வேலன்
ஆங்காரம் அதிகமாய்ப் போச்சோ-உன்னை
அடிக்காத நானுனக்கு இளக்கமாய்ப் போச்சோ 14

தினையோடு கிழங்கையே தின்று காட்டில்
திரிந்தகதை மறந்தாயோ வள்ளி நீ யின்று
உனை நானும் மணந்ததால் தானே-இன்று
உன்னையுமே என்னடியார் போற்றுகிறார் தாயாய் 15

கவண்வீசி நின்றதுவும் மாறி-இன்றே
கண்ணேநீ அமர்வதுவும் தங்கரதம் ஏறி
நவமணியும் பட்டாடை தந்து உன்னை
நன்றாக நடத்தினாலும் பொறுமுவதேன் வெந்து 16

மாமியார் ஏச்சுனக்கு இல்லை-நாத்தி
மாரென்று உனக்கிங்கே எவருமே இல்லை
ஓவியமே உண்மைகளை மறந்து-நீயும்
உளராதே உன்கீர்த்தி ஓடுமே பறந்து 17

கணவனையுந் திட்டாதே பெண்ணே-உந்தன்
கசடான குறப்புத்தி மாறலையா இன்னும்
உனக்கென்ன குறையிருக்கு வள்ளி நெஞ்சில்
ஊறுகிற ஆத்திரத்தை உதறிநீ தள்ளு 18

என்றெங்கள் வேலவனுங் கூற-வள்ளி
இருவிழியிற் கனலாடக் கோபமது சீற
என்னகுறை என்றவரே கேளும் நானும்
இயம்பிடுவேன் அதுகேட்டு ஆத்திரமே மூளும் 19

கானகத்தில் நின்றயெனைத் தேடி-அன்று
காவியுடைக் கிழவனாக வந்தீரே நாடி
தேனொத்த தினைமாவை வாங்கி-பின்னர்
தினைதந்த எனையுடைய மனதுமிக ஏங்கி 20

தாகமடி பெண்ணே என்றீர்-நீயுந்
தருவாயோ நானருந்த ஒருகுவளைத் தண்ணீர்
தண்ணீரைக் குடித்தபின் நீரும்-என்னைச்
சலியாமற் பார்த்ததுமேன் சண்முகரே கூறும் 21

மோகமடி உன்மீதில் என்றீர்-நீயும்
முறையாக எனைமணக்க வரவேணும் என்றீர்
வேழமது துரத்தவே தானே-அன்று
விதிவசத்தால் மாலையிடச் சம்மதித்தேன் நானே 22

குறச்சாதி என்றென்னை ஏசும்-உங்கள்
குலம்பற்றிச் சொல்வேனே கேளுமிப் போதும்
குறமகளும் இவ்வாறு மொழிந்து-வேலவன்
குலம்பற்றிக் கவிபாடத் துணிந்தாளே முனைந்து 23

கூத்தாடித் திரிபவனாம் தந்தை-சிவனுக்குக்
கூடெரியும் சுடுகாட்டின் மீதுதான் சிந்தை
ஆத்தாளோ மலைநாட்டுக் கூளி-அவளின்
அவதார வடிவமே ஆங்காரக் காளி 24

அம்மானாம் மாய்மாலக் கண்ணன்-குளிக்கும்
அணங்குகளின் சேலைகளைத் திருடுவதில் மன்னன்
அப்பாவிப் பிள்ளையார்உன் அண்ணன்-அவன்
அழகுக்குக் கிடைக்கலையோ எங்குமொரு பெண்ணும் 25

யானைமுகன் வயசென்ன கூறும்-இன்னும்
அவனுக்கேன் மணமாக வில்லையெனக் கூறும்
பானைபோல் வயிறதுவுங் கொண்டு-ஆற்றுப்
படியமர்ந்து பெண்களையே பார்ப்பதுமேன் இன்னும் 26

உமக்குதவி செய்துமே அன்று-என்னை
உரிமையால் நீரடைய அருளியது கண்டு
நமக்குமே உதவுவார் என்றே-மக்கள்
நம்பியே துதிக்கிறார் அவரடியில் முன்னே 27

கைப்பிடித்த நாள்தொட்டு நீரும்-என்னுடன்
கடைகண்ணி எங்கேனும் வந்ததுண்டோ கூறும்
வைவார்கள் சுற்றத்தார் என்றே-நாளும்
தெய்வானை யோடுநீர் சுற்றுவதும் என்ன? 28

வீட்டுக்குப் பயந்தவர் என்றால் என்னை
வேலவரே நீரெதற்கு மணந்தீரோ அன்று
காட்டுக்கே போவோமே வாங்க-குறவர்
கலையாத அன்போடு நமையாதரிப் பாங்க 29

இளையவனின் மனம்நோகச் செய்த-கணவர்
இருந்ததாய்க் கதைகூட இல்லையே ஐயா
விளையாட்டுப் பிள்ளையா நீரும்-வெற்றி
வேலவரே இங்கிருந்து எனக்கின்பந் தாரும் 30

பெரியவளைத் தேடிநீர் போக-நானும்
பேதையல்ல உமையனுப்பி வைக்க இசை வாக
பெரியவளாம் தெய்வானை இனிப்போ-வள்ளிப்
பெண்யானும் இனிப்பின்றிப் போனவளோ கசப்போ 31

மூத்தாளின் பேரில்நீர் மோகம்-என்றும்
மிகக்கொண்டு திரிந்தாலே எனக்குவருங் கோபம்
காத்திருக்கேன் காதலுடன் நானும்-என்னைக்
கண்டாலே நீரொதுங்கிப் போவதுமேங் காணும் 32

என்றுகுற வள்ளிபல வாக-ஏசி
இயம்பிடக் கேட்டுமே வேலர்விரை வாக
தன்முதுகு தெரியாது தனக்கு-வள்ளி
சற்றமைதி கொண்டாலே புரியுமடி உனக்கு 33

புனையாத ஓவியமே மானே-உன்னைப்
புகழ்ந்தாலே எந்நாவில் ஊறுஞ்செந் தேனே
நினையாத நேரமில்லை உன்னை-உனக்கு
நிகரில்லை எவருமே பொய்யில்லை உண்மை 34

தைமாதத் திருநாளிற் பூசம்-நம்ம
தமிழ்ச்செட்டி நகரத்தார் நடைபயிலும் மாசம்
மெய்யான பக்தியோடு என்னை-நாளும்
வேண்டியே பழநிக்கு வருவாரே ஒன்றாய் 35

கூட்டமாய் நடந்துவாரார் இன்று-நெஞ்சில்
குறையாத பக்தியது என்மீதிற் கொண்டு
நாட்டமுடன் நகரத்தார்கூடி-குன்றை
நகரிருந்து வாராரே தென்பழநி ஓடி 36

குன்றக் குடியிருந்து தொடங்கி - வேலைக்
கும்பிட்டு பக்தியொடு நீரணிந்து நடந்து
இன்றமிழ்க் கவிதையாற் பாடி - என்னை
இசையென்னும் மலராலே எழிலாகச் சூடி 37

எங்ககுறை தீர்த்திடவே வேணும் - நாட்டில்
எல்லோரும் நலமோடு வாழ்ந்திடவே வேணும்
தங்கரதம் ஏறிவர வேணும் - எங்கள்
சங்கடங்கள் தீர்ந்திட அருள்புரிய வேணும் 38

என்றபெருங் குரலதுவும் வள்ளி - உந்தன்
எழிலான செவியதனிற் கேட்கிலையோ துள்ளி
நன்றுநான் போய்வாரேன் முன்னே - நம்ம
தெய்வானை யோடு நீ வரவேணும் பின்னே 39

போய்வாரேன் விடைதாடி கண்ணே - வள்ளி
போகுமுன் சிரிக்கோணும் சித்திரமே பொன்னே
வாய்மலரச் சிரிக்கோணும் வள்ளி - என்று
வடிவேலன் கொஞ்சவே பூத்தாளே துள்ளி 40

பிள்ளையது கதறுவது கண்டு - ஏதும்
பேசாமல் இருக்கின்ற தாயெங்கும் உண்டோ
வள்ளிநான் மனைவிதான் உமக்கு - ஆனால்
வருகின்ற பக்தரெலாம் பிள்ளைகளாம் எனக்கு 41

ஆய்மயில் மீதேறி இன்றே - சுவாமி
அடியாரைக் காத்தருள விரைவீரே நன்றே
போய்வாரும் வேலவரே என்று - வள்ளி
புன்முறுவல் பூத்ததால் வேலனுமே நன்று 42

போய்வாரேன் என்னழகு வள்ளி - என்று
பொன்மயில் மீதேறி அமர்ந்தானே துள்ளி
சேய்தேடி வருகின்ற குன்று - அது
திருவாவினன் குடியெனும் பழநி மலைக் குன்று 43

கோவணத்தில் நிற்கின்ற ஆண்டி - அவனை
குறையாத பக்தியொடு மனத்தாலே வேண்டி
காவடிகள் ஆடிவரும் கோடி - மக்கள்
கால்நடையாய் வந்திடுவார் கந்தனையே பாடி 44

நடந்துவரும் அடியவர்கள் துன்பம் - தீர்த்து
நலமோடு தருவானே குமரேசன் இன்பம்
நல்லமலை பழநிமலை நின்று - எங்கும்
நலம்பூக்கச் செய்வானாம் வேலனென் றென்றும் 45

நகரத்தார் பலகாலம் வாழி - என்றும்
நம்மகதிர் வேலவனின் அருளோடு வாழி
அகவுமயில் வாகனமும் வாழி எங்கள்
ஆறுமுகன் தெய்வானை வள்ளியுமே வாழி 46

சேவலுடன் மயிலுமே வாழி - எங்கள்
செவ்வேளின் கைவேலும் சிறந்துமே வாழி
சேவுகஞ் செட்டியான் சொன்ன - இந்தச்
செந்தமிழின் கவியதுவும் எந்நாளும் வாழி! 47

- மீ. சேவுகஞ் செட்டி